தாக்கிய படையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் -பொன்னாலை மக்கள் கோரிக்கை

ponnalai தாக்கிய படையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் -பொன்னாலை மக்கள் கோரிக்கை

பொன்னாலை மேற்கில், மக்களின் வீடுகளுக்குள் புகுந்து படையினர் நடத்திய தாக்குதல் மற்றும் மக்களை அச்சுறுத்தியமை தொடர்பாக வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் இன்று  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நள்ளிரவு 12 மணியளவில் பொன்னாலை மேற்கு பிரதேசத்திற்குள் பட்டா வாகனம் மற்றும் A -12525 இலக்க மோட்டார் சைக்கிள் என்பவற்றில் நுழைந்த படையினர் வீதியில் ஒளிர்ந்து கொண்டிருந்த மின் விளக்குகளை அணைத்து விட்டு மக்களை   அச்சுறுத்தி, வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்தியுள்ளனர். அத்தோடு அங்கிருந்த இளைஞர்களை துரத்தி துரத்தி தாக்கியுமுள்ளனர்.

படையினரின் மூர்க்கத்தனமான செயற்பாட்டால் அச்சமடைந்த இளைஞர்கள் ஊரை விட்டு தப்பியோடியும், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வயல்களுக்குள் தஞ்சடையவும் நேரிட்டுள்ளது.

இந்நிலையில், வலி.மேற்கு பிரதேச சபையின் பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசாவுக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதை அடுத்து உடனடியாகவே சம்பவ இடத்திற்கு சென்ற அவர் படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக கேள்வி எழுப்பியதோடு காவல் துறையினரையும் சம்பவ இடத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து  படையினர் உடனடியாகவே அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், படையினர் தம்மைத் தாக்கியமை தொடர்பாக  வட்டுக்கோட்டை காவல்து றையினருக்கு  அறிவித்திருந்த போதிலும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை எனவும் பின்னர் 119 இற்கு அறிவித்ததையடுத்து  காவல் துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சம்பவ தினம் பிற்பகல் வேளை பொன்னாலை சவாரித்திடலில் இடம்பெற்ற மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் பொன்னாலை மற்றும் கோட்டைக்காடு இளைஞர்கள் சிலர் காயமடைந்தனர் எனவும் இச்சம்பவத்தின் தொடர்ச்சியாகவே படையினர் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப் பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-143-august-15-2021