தலைமைத்துவ வெறுமையும் ‘கட்சி அரசியல் முயற்சிகளும்’ | பி.மாணிக்கவாசகம்

96 Views

ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். மிகவும் அவசரமான – ஆபத்தான நிலையில் நாடு இருக்கும்போது, அது குறித்துக் கவனம் செலுத்தாமல் வேறு விடயங்களில் கவனம் செலுத்துபவர்களை நீரோ மன்னனுடன் ஒப்பிடுவார்கள். இந்த நிலைமைதான் இலங்கைக்கும் நேர்ந்திருக்கின்றது.

தமது சொந்த நலன்களுக்காக நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்து, ஊழலும் மோசடிகளும் ஆட்சிக் கட்டமைப்பில் பெருகி நாடு சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகளில் படுகுழியில் விழுகின்ற வழிகளில் ஆட்சியைச் செலுத்தியதாக ராஜபக்சக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் ராஜபக்சக்கள் மட்டுமல்லாமல் நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றி நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த ஏனைய ஜனாதிபதிகளினது ஆட்சிப் போக்கும் நாடு படுகுழியில் விழுவதற்குக் காரணமாக அமைந்திருந்தது.

எனினும் வரலாறு காணாத வகையில் சிங்கள பௌத்த மக்களின் பேராதரவைப் பெற்றிருந்த ராஜபக்சாக்கள், குடும்ப சுயலாப அரசியல் போக்கையும், எதேச்சாதிகார இராணுவ வழிமுறையிலான ஆட்சிக் கொள்கைகளையும் கடைப்பிடித்துச் செயற்பட்டதனால் நாடு மீள முடியாத படுகுழியில் வீழ்ந்திருக்கின்றது. அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாமல் பல்வேறு நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் ஆளாகிய மக்கள் ராஜபக்சக்களின் தலைமையிலான அரசுக்கு எதிராகத் தன்னெழுச்சி கொண்டு வீதிகளில் இறங்கிப் போராடினார்கள்.

மே, ஜுன், ஜுலை மாதங்களின் 9 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இந்தப் போராட்டங்களின் உறுதியான தீவிரமும், வேகமும், பலமும் பிரதமர், நிதி அமைச்சர், ஜனாதிபதி என்று நாட்டின் அதிமுக்கிய அந்தஸ்து நிலைகளில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த ராஜபக்சாக்களை அடுத்தடுத்துப் படுதோல்வி அடையச் செய்திருந்தன. அரசுக்கு எதிரான மக்களின் எழுச்சியைப் படைபலத்தைக் கொண்டு அடக்கி ஒடுக்கி நசுக்குவதற்கு மேற்கொண்ட எதேச்சாதிகார முயற்சிகள் முளையிலேயே கருகிப் போயின.

ஜனநாயகத்தின் முக்கிய பண்பாகிய பெரும்பான்மை பலத்தின் மூலம் பல்லாயிரக் கணக்கில் திரண்டெழுந்த நிராயுதபாணிகளாகிய போராட்டக்காரர்களின், போராட்டச் செயற்பாடுகளினால் அரச படைகளின் போராட்டத்திற்கு எதிரான தடை முயற்சிகள் தோல்வி அடைந்தன.

மே 9 ஆம் திகதி பிரதமராகக் கோலோச்சிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், ஜுன் 9 ஆம் திகதி நிதி அமைச்சராக, பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்கும் மீட்பராகத் தன்னைக் காட்டிக்கொண்ட பசில் ராஜபக்சவும் தமது பதவிகளைத் துறந்தனர். ஜுலை 9 ஆம் திகதி காட்டு வெள்ளமாகக் கிளர்ந்தெழுந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி மாளிகையைக் கைவிட்டு அடையாளம் தெரியாத இடத்தில் ஓடி ஒளிந்து, பின்னர் மாலைதீவுக்கு மறைந்து பறந்து சென்று, உயிரச்சத்திற்கு மத்தியில் அங்கிருந்து சாமான்யனாக சிங்கப்பூரைச் சென்றடைந்துள்ளார்.

பொருளாதாரப் படுகுழியில் நாடு சறுக்கிச் சென்றதையும் நாட்டின் எதிர்கால நலன்கள் பாழாகியதையும் கருத்திற் கொள்ளாமல், அரசியல் சுயநலன்களை முதன்மைப்படுத்தி, இராணுவ வழிமுறையில் எதேச்சாதிகாரப் போக்கில் செயற்பட்டதனால் கோட்டாபயவை ரோம் நகரின் நீரோ மன்னனுடன் ஒப்பிடுகின்ற நிலைமை உருவாகியது. நீரோ மன்னனைப் போலவே, நாட்டு மக்களின் எழுச்சிக்கு முகம் கொடுக்க முடியாமல் உயிருக்கு அஞ்சி கோட்டாபயவும் ஓடி ஒளிந்தார். இந்த நீரோ மன்னனுடனான ஒப்பீடு கோட்டாபய ராஜபக்சவுடன் நின்றுவிடவில்லை. அது நாட்டின் ஏனைய கட்சி அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளுக்கும் பொருந்தியுள்ளது.

நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது. எரிபொருள் இல்லாமல் நாட்டின் பல்வேறு செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருக்கின்றன. மக்களின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அரச, தனியார் பணியாளர்கள் கடமைக்குச் செல்ல முடியவில்லை. பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குரிய போக்குவரத்துக்கான எரிபொருள் மற்றும் உரிய போக்குவரத்து வசதி இல்லாமல் உற்பத்தித்துறைகள் பலவும் படிப்படியாகச்செயலிழந்து வருகின்றன.

போக்குவரத்து வசதிகளில்லாத நிலையில் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. பாடசாலைகளிலும் உயர் கல்வி நிலையங்களிலும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் எப்போது மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று எவருக்கும் தெரியாத நிலைமை. கல்வியின் தொடர் செயற்பாடுகள் இடையறுந்திருப்பதனால், பிள்ளைகள் மற்றும் இளம் சந்ததியினரின் இளமைக்கால நேரமும் மனித வலுவும் பாழடையத் தொடங்கியிருக்கின்றன. இது எதிர்கால சமுதாயத்தின் செல்நெறிக்கும் வாழ்க்கை நிலைமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

உணவுப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதனால் மக்கள் மாற்று வழிகளில் உணவு உற்பத்தி முயற்சிகளில் ஈடுபட்டுள்ள போதிலும், அடுத்தடுத்த மாதங்களில் மக்கள் பட்டினி நிலைமையை எதிர்கொள்ள வேண்டிய ஆபத்தான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலைமைகள் யாவும் பொதுமக்களுக்கு மட்டுமல்ல. அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளின் குடும்பங்களுக்கும், அவர்களது உற்றவர் உறவினர்களது குடும்பங்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றன. சில வேளைகளில் அவர்களின் பொருளாதார வளம், வசதி காரணமாக ‘இந்த வறுமை நிலை’ இன்னும் அவர்களைத் தீண்டாமல் இருக்கலாம். ஆனால் கூடிய விரைவில் உணவுப் பற்றாக்குறையினால் உருவாகின்ற வறுமை நிலைமை அவர்களது வீட்டுக் கதவுகளையும் மிக வலுவாகத் தட்டத்தான் போகின்றது. இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

நாட்டின் இந்த நிலைமைகளை எதிர்கொள்வதற்கு அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மிகப் பொறுப்போடு செயலாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஆனால் நிலைமைகளின் விபரீதத்தையும் விளையப் போகின்ற  பாதிப்பான நிலைமைகளையும் கருத்திற் கொள்ளாமல், ‘நாட்டின் அதிகார மாற்றம்’ ஏற்பட வேண்டிய இந்தத் தருணத்தில் தவிச்ச முயல் அடிக்கின்ற பாணியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவியைக் கைப்பற்றுவதற்கான கட்சி அரசியல் போட்டிகளில் கட்சித் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மும்முரமாக ஈடுபட்டிருப்பதையே காண முடிகின்றது.

அறுபத்தொன்பது லட்சம் சிங்கள பௌத்த மக்களின் ஏகோபித்த வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றிய கோட்டாபய  ராஜபக்ச, சமூக, அரசியல், பொருளாதார நிலைமைகளில் நாட்டைப் படுகுழியில் வீழ்த்திவிட்டு, பொறுப்புணர்வின்றி நாட்டைவிட்டுத் தப்பியோடி அஞ்ஞாத வாசம் புரிகின்றார்.

அதனால் ஏற்பட்டுள்ள நாட்டுக்கான அரசியல் தலைமை வெற்றிடத்தைக் கைப்பற்றுவதற்கான அரசியல் போட்டியிலேயே அரசியல்வாதிகளின் கவனம் திரும்பியிருக்கின்றது. நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள வறுமை நிலைமையையும் பட்டினிச்சாவு நிலைமையையும் கவனத்திற்கொண்டு, தேச நலனைக் கருத்திற் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து விட்டுக்கொடுப்புடன் செயற்றி றனுடைய ஓர் அரசியல் தலைமையை உருவாக்குவதற்கு அவர்கள் முயற்சிப்பதாகத் தெரியவில்லை.

கோட்டாபய ராஜபக்சவின் கொடுங்கோலாட்சியை எதிர்த்துப் போராடிய மக்கள் எழுச்சியை நாட்டின் வளமான எதிர்காலத்துக்கான ஒரு திருப்புமுனையாகக் கருதி அதற்கேற்ற வகையில் செயற்படுவதைவிடுத்து, அந்தப் போராட்டத்தின் விளைவுகளைத் தமது கட்சி அரசியல் நலன்களுக்குப் பலியிடுவதற்கான ‘அரசியல் முயற்சிகளும்’ முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

தென்னிலங்கையிலும்  சரி, வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட, தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களைப் பிரதிநித்துவம் செய்கின்ற தமிழ் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்கள் மற்றும் அசியல்வாதிகளும் கூட இக்கட்டான நிலையில் மக்களுக்குப் பயனுள்ள வகையில், சமூக, பொருளாதார அரசியல் நிலைமைகளில் செயல்வல்லமையுடைய ஆளுமை மிக்க தலைமையை வழங்க முடியாதவர்களாகவே காணப்படுகின்றனர்.

மொத்தத்தில் நாடும் இனக்குழுமங்கள் சார்ந்த பிரதேசங்களும் நெருக்கடிகளில் இருந்து மக்களை இரட்சித்து வழிநடத்தக் கூடிய சரியான தலைமைத்துவமின்றி ஒட்டுமொத்த நாடும் தவித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மோசமான நிலையில் இருந்து இலங்கை எவ்வாறு மீட்சி பெறப் போகின்றது என்பது இப்போதைய விடை காண முடியாத வினாவாக எழுந்து நிற்கின்றது.

Leave a Reply