தலைவர்கள் இணைய வேண்டும் எனக் கேட்டால் இணைய தயார் – விக்னேஸ்வரன்

தலைவர்கள் இணைய வேண்டும்


அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைய வேண்டும், “நீங்கள் வரவேண்டும்” எனக் கேட்டால் என்னுடைய கடமை என ஏற்று களத்தில் குதிக்கத் தயாராக இருக்கிறேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தேர்தல் சம்பந்தமாக எந்த வித பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. எல்லா கட்சிகளும் இணைந்து சில விடயங்களை அரசாங்கத்துடன் பேச முடியுமா என்பது தொடர்பாகவே ஆராயப்பட்டு வருகின்றது. அதில் தேர்தல் சம்பந்தமான பேச்சுக்கள் இதுவரை எழவில்லை. என்னை பொறுத்த வரையிலே மாகாண சபை தேர்தலை அரசாங்கம் தற்போதைக்கு நடத்தாது என்பதே என்னுடைய கருத்து. அரசாங்கத்திடம் பணமில்லை. கருத்துகணிப்பு மூலமாக அரசாங்கம் தனக்குள்ள ஆதரவு குறைந்ததை உணர்ந்துள்ளது.

ஆகவே மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் பிரச்சினை ஆகிவிடும் என்கிற அடிப்படையில் அவர்கள் தேர்தலை தள்ளி வைக்கவே விரும்புவார்கள்.

அரசாங்கத்திற்கு மாகாணசபையை தொடர்ந்தும் வைத்திருக்க கூடாது என்ற எண்ணமே இருக்கிறது. புதிய அரசியல் யாப்பின் மூலம் மாகாணசபை முறையை நீக்கி முற்றிலும் சிங்கள பௌத்த அரசியலமைப்பை கொண்டு வருவார்களோ என்பது எனது சந்தேகம்.

தற்போது மாகாணசபை தேர்தலை நடாத்துவது அரசாங்கத்திற்கு நன்மையைத் தராது தீமையையே தரும் என்ற அடிப்படையிலே மாகாணசபைத் தேர்தல் நடைபெறாது என்பதே என்னுடைய கருத்து.

மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றால் நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்குவீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, என்னை அரசியலுக்குள் கொண்டு வருவதற்கு கட்சிகளின் தலைவர்கள் பலர் சேர்ந்து எத்தனையோ முறை அழைத்ததன் பேரில் தான் இறுதியாக உடன்பட்டேன். இப்பொழுதும் எங்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து நீங்கள் வரவேண்டும் எனக் கேட்டால் என்னுடைய கடமை என ஏற்று களத்தில் குதிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad தலைவர்கள் இணைய வேண்டும் எனக் கேட்டால் இணைய தயார் – விக்னேஸ்வரன்