கென்யாவில் உணவு உண்ணாமல் இருந்தால் சொர்க்கத்துக்கு செல்லலாம் என்று கூறிய பாதிரியாரின் ஆலோசனையால் 47 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவில் கடலோர நகரமான மலிந்திக்கு அருகில் உள்ள ஷகாஹோலா காட்டுப் பகுதியில் குவியல் குவியலாக பிணங்களை போலீஸார் கண்டெடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் உணவினை தவிர்த்து விரதமிருந்தால் சொர்க்கத்துக்கு செல்முடியும் என்ற கருத்தை அப்பகுதி மக்களுக்கு பாதிரியார் பால் மெக்கன்சி என்பவர் ஆலோசனை வழங்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பாதிரியாரின் ஆலோசனையை கேட்டு மக்கள் உணவருந்தாமல் இருந்து வந்துள்ளனர். இதில் நான்கு பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து பாதிரியார் கைது செய்யப்பட்டார். அவரை விசாரணை நடத்தியதில், இவரது ஆலோசனையை கேட்டும் பலரும் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து ஷகாஹோலா காட்டுப் பகுதியில் உள்ள கல்லறையில் போலீஸார் நடத்திய தேடுதலில் பலரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை உயிரிழந்த 47 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடக்கம். தொடர்ந்து கல்லறையில் தேடுதல் பணியை போலீஸார் மேற்கொண்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சம்பவம் நடந்த 800 ஏக்கர் பரப்பளவிலான காட்டுப் பகுதி சீல் வைக்கப்பட்டு, குற்றப் பகுதியாக கென்யா உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து கென்ய உள்துறை அமைச்சர் கித்தூர் கிண்டிகி கூறும்போது, “அப்பாவிகள் உயிரிழந்த இந்தக் கொடூர சம்பங்களுக்கு காரணமானவருக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பத்துடன் தேவாலயங்கள், கோயில்கள், மசூதிகளில் கட்டுபாடுகள் இனி தீவிரமாக இருக்கும்” என்று தெரிவித்தார். பாதிரியாரின் பேச்சை கேட்டு 47 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.v