இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பான் உதவி

இலங்கையின் முக்கிய கடன் வழங்குநர்களில் முக்கியமான நாடான ஜப்பான், இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் சுமார் 30 பில்லியன் டொலர்களை மறுசீரமைக்க உதவவுள்ளதாக தெரிவித்துள்ளது.

டோக்கியோவுக்கான இலங்கை தூதர் இதனை இன்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்பை பெறுவதற்கு கடனளிப்பவர்களுடன் உடன்பாட்டை எட்டுவது முக்கியமானது.

இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதி ஒப்பந்தத்தை இலங்கை அடையும் வகையில்இ கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை செயல்முறைக்கு ஜப்பான் ஆதரவாக இருக்கும் என்று தூதுவர் ஹிடேகி மிசுகோஷி கூறியுள்ளார்.

அத்துடன் சீனா மற்றும் இந்தியா உட்பட பிற கடன் வழங்கும் நாடுகளுடன் ஜப்பான் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க விரும்புகிறது என்றும் மிசுகோஷி தெரிவித்துள்ளார்.

அரசாங்க தரவுகளின்படிஇ இலங்கையின் மொத்த இருதரப்புக் கடனில் சுமார் 3.5 பில்லியன் டொலர்களை ஜப்பான் வழங்கியுள்ளது.

இந்தநிலையில் கடன் பேச்சுவார்த்தை நடவடிக்கைக்கு ஜப்பான் ஆதரவளிக்கும் போதிலும்இ இலங்கையின் பொருளாதாரம் மீண்ட பின்னரே பாரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மிசுகோஷி தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டில் வர்த்தகத் தலைநகரான கொழும்புக்கான 1.5 பில்லியன் டொலர் ஜப்பானிய நிதியுதவியுடன் கூடிய இலகு தொடரூந்து திட்டத்தை நிதிப் பிரச்சினைகளை காரணம் காட்டி இலங்கையின் கோட்டாபய அரசாங்கம் இடைநிறுத்தியது. இதன் அடிப்படையில், இலங்கையின் முறையற்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நடைமுறைத் தடைகள் காரணமாக முதலீடுகள் தடைபட்டுள்ளன என்று மிசுகோஷி கூறியுள்ளார்.

அந்த விடயங்கள் மேம்படுத்தப்படும் என்றும் இதனையடுத்து இலங்கையில் முதலீடு செய்வதற்கான சூழல் மேம்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.