செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 9ம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமான நிலையில், 12 நாட்கள் அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தன. இந்த அகழ்வு பணிகளின் போது, ஒரு மனித என்பு கூட்டு தொகுதி புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகளில் 05 என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, செம்மணி புதைகுழிக்குள் இருந்து இதுவரையிலான கால பகுதியில் 261 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை புதைகுழிக்குள் அடையாளம் காணப்பட்ட என்பு தொகுதி ஒன்றின் மண்டையோடு பகுதி மாத்திரம் வெளியில் தெரிந்த நிலையில், அது அகழ்ந்து எடுக்கப்படாமல் உள்ளது
கடந்த 12 நாட்களாக நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் போது, 21 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு , அவை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் , புதைகுழிக்குள் இருந்து மூக்குத்தி , நாணய குற்றிகள் , ஆணிகள் , மஞ்சள் நிற வளையல் துண்டு உள்ளடங்கலாக 17 பிற பொருட்கள் மீட்கப்பட்டு அவை நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 1ஆம் திகதி மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள பகுதிகளில் காணப்படும் புற்தரைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



