இஸ்ரேல் மத்திய கிழக்கை பேரழிவுக்கு இட்டுச் செல்கிறது: துருக்கி குற்றச்சாட்டு

ஈரானை தாக்குவதன் மூலம் இஸ்ரேல் மத்திய கிழக்கை முழுமையான பேரழிவுக்கு இட்டுச் செல்வதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்தான்புல்லில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) உச்சிமாநாட்டில் பேசிய துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான், “இஸ்ரேல் இப்போது நமது அண்டை நாடான ஈரானை தாக்குவதன் மூலம் மத்திய கிழக்கு பகுதியை முழுமையான பேரழிவின் விளிம்புக்கு இட்டுச் செல்கிறது. பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஏமன் மற்றும் ஈரான் தரப்பில் பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் இஸ்ரேலின் பக்கம்தான் பிரச்சினை தெளிவாக உள்ளது.

எனவே, ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் வரம்பற்ற ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பை மேலும் ஆபத்தில் ஆழ்த்தும் வன்முறைச் சுழலாக தற்போதைய நிலைமை மோசமடைவதை நாம் தடுக்க வேண்டும்.” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நிலையில்,இஸ்ரேலின் தாக்குதல்களில் 400-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகவும், 3,056 பேர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.