எங்காவது ஒரு மாகாண சபையில் தமிழர் ஒருவர் பிரதம செயலாளராக இருக்கிறாரா?- சிறிதரன் எம்.பி கேள்வி

118 Views

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ், இன பிரச்னைக்குத் தீர்வாகவும் தமிழர்களுக்காகவும் மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. ஆனால், எந்தவொரு மாகாண சபையிலும் தமிழர் ஒருவர் பிரதம செயலாளராக இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் கடந்த  6ம் திகதி  உரையாற்றிய அவர், தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கில், மாகாண சுகாதார பணிப்பாளராக தமிழர் ஒருவர் 5 வருடங்களாக கடமையாற்றி வந்த நிலையில், அண்மையில் அவர் பலாத்காரமாக அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சிங்களவர் ஒருவர் அடாத்தாக அந்தப் பதவியைப் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார்.

“வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக சிங்களவர் உள்ளார். மின்சார சபையின் வடக்கு மாகாண பிரதி பொதுமுகாமையாளர் சிங்களவர், வடக்கிலுள்ள அத்தியட்சகர் பதவிகளிலுள்ள எல்லோரும் சிங்களவர்கள்” என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

“மாகாண சபை முறைமை ஏன் கொண்டு வரப்பட்டது? இலங்கையில் எங்காவது ஒரு மாகாண சபையில் – தமிழர் ஒருவர் பிரதம செயலாளராக இருக்கிறாரா? வடக்கு மாகாண பிரதம செயலாளராக பதவி வகிப்பவரை விடவும் – தொழில் மூப்புடைய பலர் வடக்கு மாகாணத்தில் உள்ளனர். ஆனாலும், தொழில் மூப்புக் குறைந்த ஒருவர் – பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.” என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply