பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சிலவாரங்களாக பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பருவநிலை மாறுபாடு காரணமாக பாகிஸ்தான் வடக்கு மலைப் பகுதியில் உள்ள பனியாறுகள் உருகியதும் அதிக அளவு பருவ மழையுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இதனால் அந்நாட்டில் மூன்றில்ஒரு பகுதிக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தண்ணீரில் மூழ்கியுள்ளது. 22 கோடி மக்கள் தொகை கொண்டபாகிஸ்தானில் 3 கோடி மக்கள்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள்நேற்று காலையில் கூறும்போது, “கடந்த 24 மணி நேரத்தில் 8 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,343 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்தனர்.
அதே நேரம் வரும் மாதத்தில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் நிலைமை இன்னும் மோசமாகலாம் என ஐ.நா. அகதிகள் முகமை உயரதிகாரி ஒருவர் கூறினார்.
இந்நிலையில், சிந்துசமவெளி நாகரிகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான மொகஞ்சதாரோ 1922-ல் கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிந்து நதிக்கு அருகில் மொஹஞ்சதாரோ உள்ளது. இதனை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இந்நிலையில் புகழ்பெற்ற மொகஞ்சதாரோ பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் முதன்மை அதிகாரி கூறியுள்ளார்.