இனவாத ஆதிக்கத்தால் பறிபோகும் கல்வியுரிமை-ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே. ஜயந்த பண்டார

76 Views

கல்வி செயற்பாட்டுக்கு மேல் நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிரான சர்வதேச நாளை முன்னிட்டு   இலங்கையின் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே. ஜயந்த பண்டார, இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி…..  

கேள்வி :-

இலங்கையில் மாணவர்கள் மேல் கல்வி ரீதியிலான ஒடுக்குமுறை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:-

கலாச்சாரத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயனுள்ள விடயங்களை சமூகத்துக்கு பெற்றுக் கொடுப்பது கல்வி.மனிதரிடையே மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்வது கல்வி என்று கல்வி தொடர்பாக பல வரைவிலக்கணங்களை கூறுவார்கள்.கல்வி என்பது மனிதனின் அறிவுக் கண்ணைத் திறக்கின்றது.உணவின் மூலமாகவே உடலின் வளர்ச்சியும் அதன் பாதுகாப்பும் நிகழ்கின்றன.அதே விதத்தில் உள்ளத்தின் எழுச்சிக்கு கல்வி முற்றிலும்  அவசியமாகின்றது என்பதே உண்மையாகும்.அரசனுக்கு அந்த நாட்டில் மட்டுமே சிறப்புள்ளது.ஆனால் கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு உள்ளது.

உலகில் ஒரு மனிதன் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு கல்வி கை கொடுக்கின்றது.எனவேதான் “தலை குனிந்து படிப்பதெல்லாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கே”என்று கூறி வைத்தார்கள்.நல்ல ஒழுக்க விழுமியங்கள் மேலெழும்புவதற்கு கல்வி உந்துசக்தியாக அமைகின்றது.கல்வியின் ஊடாக அடைய வேண்டிய இலக்குகள் அதிகமுள்ளன.கல்வி கற்பிக்கும் கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள  ஆசிரியர்களை பௌத்த மதமாயினும் சரி அல்லது வேறு எந்த மதமாயினும் சரி உயர்ந்த இடத்திலேயே வைத்து நோக்குகின்றது.என்பதையும் மறுப்பதற்கில்லை.

இந்நிலையில்  ஒரு மனிதன் கல்வியை செவ்வனே கற்றுக்கொள்ள முடியாத வகையில் பல்வேறு இடையூறுகள் காணப்படுகின்றன.இந்த இடையூறுகள் பல வகைப்படும்.குறிப்பாக பொருளாதார வசதியின்மை, போக்குவரத்து சிரமம், பாடசாலையில் உரிய துறைசார் ஆசிரியரின்மை , பாடசாலைக்கும் வீட்டுக்கும் இடையிலான அதிகரித்த தூரம், நோய் போன்ற காரணிகள் பூரண கல்வியை பெற்றுக் கொள்வதில் தாக்கம் செலுத்துகின்றன.

 இதனைக்காட்டிலும் வேறொரு முக்கிய காரணியும் கல்விக்கு இடையூறாக உள்ளது. அதுதான் இனவாதம்.இலங்கையைப் பொறுத்தவரையில் இனவாதத்துக்கும் கல்விக்கும் இடையே நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.இனவாதத்தை மையப்படுத்தி கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு வருவது அல்லது ஒடுக்கப்பட்டு வருவதென்பது ஒரு உரிமை மீறலாகும் என்பதோடு இத்தகைய செயல்கள் இலங்கையின் அகராதியில் இருந்தே துடைத்தேறியப்பட வேண்டியதும் அவசியமாகும்.கல்வி கற்பதென்பது சகலருக்கும் பொதுவானது.இதில் இன, மத, மொழி வேறுபாடுகள் ஆதிக்கம் செலுத்தக்கூடாது.இதனிடையே கல்வி ஒடுக்குமுறை நிலை குறித்து நாம் நோக்குகின்றபோது சிறுபான்மையினர் மீதான கல்வி ஒடுக்குமுறைகள் குறித்து அதிகமாகவே பேச வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது.இவற்றை நாம் பின்வருமாறு நோக்க முடியும்.அதாவது சிறுபான்மையினரான மலையகத்தின் நிலை, வடக்கு கிழக்கின் நிலை என்றவாறு நாம் இதனை நோக்குவது பொருத்தமாக இருக்கும்.

கேள்வி :- 

முதலில் மலையக நிலை குறித்து கூறுங்கள்.

பதில் :-

மலையகக் கல்வி என்பது நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட ஒரு விடயமாகவே இருந்து வந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் 19 ம் நூற்றாண்டில் கூலிகளாக தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்டார்கள்.இந்நிலையில் இவர்களுக்கு கல்வி வழங்குவது குறித்து அவ்வளவாக நிர்வாகமோ அல்லது அரசாங்கமோ ஆர்வம் செலுத்தவில்லை. தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் கண்டுவிட்டால் அது தமது தொழில் ரீதியான நடவடிக்கைகளுக்கு சிக்கலாக அமைந்துவிடும் என்பதால் மலையக பிள்ளைகளுக்கான.கல்வி மறுதலிக்கப்பட்டது.”இலங்கை அரசின் கொள்கைகள் பால், வகுப்பு,இனம் என்பவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டவில்லை.ஆனால் இதற்கு ஒரேயொரு புறநடை உண்டு. அதாவது தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பெருந்தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் கல்வி காலனித்துவவாதிகளின் தேவைகளுக்கு அடிபணிந்திருந்தது.சுதந்திரத்துக்குப் பின்னரான சமூக அபிவிருத்தி கொள்கைகளும் கூட அவர்களை கவனத்தில் கொள்ளவில்லை ” என்று பேராசிரியர் சுவர்ணா ஜயவீர கூறுவதும் இங்கு நோக்கத்தக்கதாகும்.

மலையகக் கல்வி தேசிய கல்வி முறைமையின் ஒரு துணை முறைமையாகும். எனினும் தேசிய ஆய்வு முறைமையில் இதுவரை ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை மலையகக் கல்வி முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பது பலரினதும் கருத்தாகவுள்ளது. இலங்கையின் இலவசக் கல்வியின் தந்தையாகவும், கல்விப் புரட்சியை ஏற்படுத்திய ஒருவராகவும் சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர விளங்குகின்றார். எனினும் அவர் மலையகக் கல்வி அபிவிருத்தி குறித்து உரிய அக்கறை செலுத்தாமல் தோட்ட நிர்வாகங்களே அவற்றைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே செய்யப்பட்டமையும் இங்கு விசேடமாக குறிப்பிடத்தக்கதாகும்.இத்தகைய பாரபட்சங்களால் மலையகக் கல்வி பின்னடைவு காண்பதை தடுத்து நிறுத்த முடியவில்லை. இத்தகைய ஒடுக்குமுறைகளை கண்டித்து பலர் குரலெழுப்பவும் தவறவில்லை.

இலங்கையின் பல பாகங்களிலும் விஞ்ஞானப் பாடசாலைகள் பல காணப்படுகின்றன.எனினும் மலையகத்தில் இந்த எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.மேலும் விஞ்ஞான, கணித, ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை மலையகப் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது.காலத்துக்கு காலம் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படுகின்றபோதும் மலையகத்தின் துறைசார் ஆசிரியர் பற்றாக்குறை இன்னும் அதிகமாகவே காணப்படுகின்றது என்பதையும் கூறியாதல் வேண்டும். தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கல்வி அபிவிருத்தி குறித்த வேலைத்திட்டங்கள் மலையகப் பகுதிகளை வந்தடைவதில் காலதாமதங்கள் ஏற்படுகின்றன. சிலவேளைகளில் இத்தகைய வேலைத்திட்டங்கள் மலையகத்தை வந்தடையாது இடைநடுவில் முற்றுப் பெறுவதும் வழக்கமாகவுள்ளது.இதனால் மலையக மாணவர்களின் கல்வியில் தேக்கநிலை ஏற்படுகின்றது.

இதேவேளை மலையகத்தில் அதிகளவான கஷ்ட மற்றும் அதிகஷ்ட பிரதேச பாடசாலைகள் காணப்படுகின்றன.இப்பகுதிகளில் பெரும்பாலும் அரச பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படாது தனியார் பேருந்துகளே சேவையில் ஈடுபட்டு வருகின்றன. பல வேளைகளில் இவ்வாகனங்கள் சேவையில் ஈடுபடாத நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுகின்றது.இதேவேளை இப்பாதையில் சேவலயில் ஈடுபடும் வாகனங்கள் அதிகரித்த பணத்தொகையினை பயணக்கூலியாக பெற்றுக் கொள்வதும் வழக்கமாகும்.இந்நிலையில் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் அல்லல்படும் தொழிலாளர் வர்க்கம் கல்விக்கென்று உரிய முதலீடுகளை செய்ய முடியாத நிலையில் மலையகக்கல்வி பின்னடைவு காண்கிறது. இதுவும் கல்வி ஒடுக்குமுறையின் பாற்பட்டதேயாகும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

பாடசாலைகளுக்கான வளப்பகிர்வில் ஏற்படும் குளறுபடிகள், ஆசிரியர் நியமனத்தில் ஏற்படும் இழுபறிகள் எனப்பலவும் மலையகத்தின் கல்வி உரிமைக்கு ஆப்பு வைத்துள்ளது என்பதும் உண்மையேயாகும். இது போன்று பல விடயங்களை சுட்டிக்காட்ட முடியும்.

கேள்வி :- வடக்கு கிழக்கின் நிலை எவ்வாறுள்ளது?

பதில்:-

வடக்கு கிழக்கு மக்களில் அதிகமானோர் சிறுபான்மையினராக உள்ளனர்.போர்ச் சூழலுக்கு மத்தியிலும் வடக்கு மக்களின் கல்வியுணர்வு எம்மை மெய்சிலிர்க்க வைத்தது. கல்வியால் ஒரு சமூகம் மேலெழும்ப முடியும் என்பதை மையப்படுத்தி வடக்கு சமூகம் மேல் நிலைக்கு வந்துள்ளமை பாராட்டத்தக்கதாகும்.எனினும் வடக்கு கிழக்கு மக்களின் கல்வியுரிமை உரியவாறு பேணப்படுகின்றதா? என்பது தொடர்பாக சந்தேகமான வெளிப்பாடுகளே இருந்து வருகின்றன.

வடபகுதியில் இடம்பெற்ற முப்பதாண்டு போர் பலரை விசேட தேவை கொண்டவர்களாக மாற்றியுள்ளது.உடல் மற்றும் உளவியல் ரீதியாக பலர் நெருக்கீடுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.இதில் மாணவர்கள் பலரும் உள்ளடக்குகின்றனர் .இந்நிலையில் இவர்களுக்கான கல்வி வாய்ப்புக்கள் முறையாக இடம்பெறுகின்றதா? என்றால் இது சாத்தியமாகாது இவர்கள் மீதான ஒடுக்குமுறைகளே தொடர்ந்த வண்ணமாகவுள்ளன.மலையகத்திலும் விசேட தேவையானோர்களுக்கான கல்வி புறந்தள்ளப்பட்ட ஒரு நிலையிலேயே இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.விசேட தேவை மாணவர்களின் நலன் கருதி வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பகுதிகளில் கற்றல் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.ஆசிரிய ஆலோசகர்கள், உதவிக்கல்வி மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் விசேட கல்வித்துறைக்கென்று நியமிக்கப்படுதல் வேண்டும் என்பதோடு சாதாரண கல்விக்கான தடைகள் தகர்க்கப்பட்டு அதற்கான கதவுகள் திறக்கப்பட வேண்டியதும் அவசியமாகும்.

ஒரு சமூகம் கல்வி ரீதியாக வேரறுக்கப்படுகையில் அது பல்வேறு தாக்க விளைவுகளுக்கும் அடித்தளமாகும் என்பதை உணர்ந்து கல்வி அபிவிருத்திக்கு காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும்.

கேள்வி :-இனப்பாகுபாட்டுக்கு அப்பால் சாதிகளின் ரீதியில் மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை இலங்கையில் உள்ளதா?

பதில்:-

ஒரு மனிதன் பூரணமான கல்வியினைப் பெற்றுக் கொள்வதற்கு எந்தவொரு தடையும் இருக்கக்கூடாது.என்றபோதும் பல்வேறு தடைகள் காணப்படுவதனை நாமறிவோம்.இவற்றுள் சாதி ரீதியான தடை என்பது மிகவும் மோசமானதாகும்.பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பலர் இன்று கல்வி ஈடுபாட்டின் காரணமாக முன்னிலைக்கு வந்துள்ளனர்.பல உயர் தொழில்களையும் அவர்கள் மேற்கொள்கின்றனர்.எனவே இனப்பாகுபாட்டுக்கு அப்பால் சாதி அடிப்படையிலும் கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுமிடத்து அது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.எனினும் இலங்கையின் கல்வி மறுதலிப்பில் இனவாதம் ஆதிக்கம் செலுத்திய அளவிற்கு சாதி ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதை உறுதிபட கூறமுடியும் என்றார்.

Leave a Reply