உரிமைகள் முக்கியத்துவம் மிக்கதாக விளங்கும் நிலையில் இவற்றை பெற்றுக் கொள்வதற்கு ஐக்கியம் அவசியமாகும்.இது இல்லாத நிலையில் பாதிப்புகள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த முடியாது. அத்தோடு இலங்கையின் மலையக சமூகத்தை பொறுத்தவரையில் தேவைகளின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது.
இவற்றை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஐக்கியத்தை வலுப்படுத்தும் முன்னெடுப்புக்கள் அவசியமாகவுள்ளன. அத்தோடு இலங்கையின் சமகால சூழ்நிலைகளும் ஐக்கியத்தின் அவசியத்தை வலியுற்த்துவதாகவே உள்ளன.இந்த நிலையில் மலையக கட்சிகள் மக்களை ஒன்றுபடுமாறு கூறிவிட்டு அற்ப சலுகைகளுக்காக தமக்குள் பிளவுகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. இவர்களின் சித்து விளையாட்டு க்களால் ஒரு சமூகம் பின்னிலைக்கு தள்ளப்படுவதையும் உரிமைகள் மழுங்கடிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இலங்கை இப்போது இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வருகின்றது.கடல் சூழ்ந்த நாடான இலங்கை கடன் சூழ்ந்த நாடு என்ற அவப்பெயரை இப்போது பெற்றுக் கொண்டுள்ளது.நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் பெரிதும் பின்னடைவு கண்டுள்ள நிலையில் வருவாய்க்கு வழியின்றி மக்கள் அல்லல்படுகின்றனர். இதனிடையே வறுமைக்கும் மத்தியில் நாட்டில் விபச்சார நடவடிக்கைகள் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.இது குடும்பச் சீர்குலைவு, நோய்த்தொற்று, கலாசார சீர்கேடு போன்ற பல பிரச்சனைகளுக்கும் தோற்றுவாயாக அமையும் என்று கருதப்படுகின்றது.
இதேவேளை அரசியலும் தற்போது விபச்சாரமாகியுள்ளதாக ஒரு பலமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.அரசியல்வாதிகள் சிலர் பணத்துக்கு விலைபோவதாகவும் இதனால் சுயநலவாதப்போக்கு மேலெழும்பியுள்ள நிலையில் ஜனநாயகம் மற்றும் மக்கள் நலன்கள் கேள்விக்குறியாகியுள்ளதாதவும் விசனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
வாக்குரிமை பறிப்பு
எது எவ்வாறாயினும் இலங்கையின் சமகால நெருக்கடிக்கு மத்தியில் மலையக கட்சிகள் மிகவும் தீர்க்க தரிசனத்துடன் செயற்பட வேண்டிய தேவை மேலெழுந்திருக்கின்றது.மலையக மக்கள் வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு சவால்களையும் சந்தித்து வருகின்றார்கள்.
சுதந்திரத்தின் பின்னரான வாழ்க்கைக் கனவு மழுங்கடிக்கப்பட்ட நிலையில் இவர்களுக்கான நன்மைகள் முன்வைக்கப்படும் போதெல்லாம் எந்தவித நன்மையையும் இவர்கள் பெற்றுவிடக்கூடாது என்பதிலேயே இனவாதிகள் குறியாக இருந்தனர். இந்திய வம்சாவளி மக்கள் இங்கு தொழிலாளர்களாக வந்தபோது பிரித்தானிய ஆட்சியின் கீழ் அடிமைகளாகவே நடத்தப்பட்டனர்.
கல்வி பின்னடைவு கண்டிருந்ததோடு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருந்தன.இந்திய வம்சாவளி மக்களுக்கு சர்வசன வாக்குரிமை வழங்க முற்படுகையிலும் பல இடையூறுகள் ஏற்பட்டன.” கொழும்பில் வசிக்கும் இந்தியரைவிட தோட்டத்து கூலிக்கு நான் மிகவும் அஞ்சுகிறேன்.இந்தியத் தொழிலாளி காலையில் 6 மணிக்கு வேலைக்குப்போய் மாலை 6 மணிக்கே தனது கூலி லைன்களுக்கு திரும்புகின்றான்.
இத்தீவில் நிகழ்வனபற்றி அவனுக்கு என்ன தெரியும்? எனவே அரசியல் விடயங்களில் வாக்களிக்கும் தகைமை அவனுக்கு இல்லை என்றே கூறுவேன்” என்று இம்மக்களுக்கான சர்வசன வாக்குரிமையை எதிர்த்த வரலாறுகள் கசப்பானவை.
1948 ம் ஆண்டு இம்மக்களின பிரசாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டு அரசியல் உள்ளிட்ட சகல துறைகளிலும் அவர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர். இது குறித்து பலர் கண்டித்துப் பேசியிருந்தனர்.” எவ் வேலையுமற்ற சிங்களவர் ஒருவர் பிரஜாவுரிமை பெறுவதற்கு தகுதியுடையவரானால் வருமானம் எதுவுமற்ற ஒரு இந்தியருக்கு ஏன் இந்த உரிமை விளக்கப்பட வேண்டும்? இத்தகைய அளவுகோல் மிகவும் மோசமான வகுப்பு வாதச்சார்பு உடையது அல்லவா! வகுப்பு வாதச்சார்பு கீழிருந்து வருவதில்லை. எப்போதும் மேலிருந்தே வருவது” என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கொல்வின் ஆர்.டி.சில்வா இனவாதத்திற்கும் பிற்போக்கிற்கும் இடையிலான தொடர்பு பற்றி குறிப்பிட்டதோடு பின்வருமாறு தனது கருத்தினையும் தெரிவித்திருந்தார்.” ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு எதிராக வகுப்புவாத அடிப்படையை பிரயோகிக்க அரசாங்கம் தொடங்குவது இன்றி இலங்கையர் என்று ஏற்றுக்கொள்ளப்படும் ஏனைய சிறுபான்மையினருக்கு எதிராகவும் வேறுபாடு காட்டுவதற்கு வழிகோலும்” என்று கொல்வின் தெரிவித்திருந்தார். எவ்வாறெனினும் இறுதியில் பிரசாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்ட நிலையில் இதனால் ஏற்பட்ட துன்பத்தை இன்றுவரை எம்மவர்கள் அனுபவித்து வருகின்றனர்.
மலையக மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயல்கள், காணிச்சுவீகரிப்பு, அரசதொழில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டமை, இந்தியாவுக்கு நாடு நடத்தியமை எனப்பலவும் இந்திய வம்சாவளியினரை வேரறுக்கும் செயற்பாடுகளேயாகும். இந்நிகழ்ச்சித்திட்டங்கள் அனைத்தும் ஒரு பட்டியல் அடிப்படையிலேயே இடம்பெற்றன.
1971 க்கும் 1984 க்கும் இடையில் 446,338 இந்திய வம்சாவளியினர் தாயகம் திரும்பியமை குறிப்பிடத்தக்கதாகும்..இம்மக்களின் நலத்தைக் குறைத்து அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக ஓரங்கட்டும் முனைப்புகள் பல வடிவங்களிலும் இடம்பெற்றன.இந்திய வம்சாவளியினரின் பிரசாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலையக அரசியல் என்பது தொழிற்சங்கத்தைதை மையப்படுத்தியதாகவே அமைந்திருந்ததும் தெரிந்ததாகும.இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதான தொழிற்சங்கமாக செயற்பட்டது.
1988 இல் ஐ.தே.க. தம்மால் பறிக்கப்பட்ட பிரசாவுரிமையையும் வாக்குரிமையையும் மீளவும் இந்திய வம்சாவளியினருக்கு பெற்றுக் கொடுத்ததைத் தொடர்ந்து இம்மக்களின அரசியல் எழுச்சி ஆரம்பமானது.
இதனூடாக மலையக மக்கள் சில நன்மைகளைப் பெற்றுக் கொண்டமையும் மகிழ்ச்சிக்குரிய விடயமேயாகும்.இதேவேளை மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஆளுங்கட்சியுடன் இணைந்து செயற்படுவதே பொருத்தமானது என்ற நிலைப்பாட்டிலிருந்தும் விடுபட்டு அமரர் பெ.சந்திரசேகரன் குரல் கொடுத்திருந்தார்.
“சிறுபான்மை மக்கள் தங்கள் உரிமையை பெற்றுக் கொள்வதென்பது ஐக்கியப்பட்ட போராட்டத்தினால்தான் முடியும்.இதை கடந்த கால உலக வரலாறுகள் நமக்கு உணர்த்துகின்றன.அரசாங்கத்தோடு தோழமை கொள்வதாலோ , அவர்களை தாஜா பண்ணுவதாலோ அல்லது அரசாங்கத்தில் உள்ள தனிப்பட்ட ஒரு சிலரின் நட்பை பயன்படுத்துவதாலோதான் எமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பதில்லை.
நம்மீது பச்சாதாபப்பட்டோ ,இரக்கப்பட்டோ வழங்கப்படும் உரிமைகள் நிலைக்க முடியாது.எமது பிரச்சினைகளும் தீரப்போவதில்லை.அப்படி நட்போடு கூடிக் குலாவிய மலையக அமைப்புக்கள் கூட தாம் ஏமாற்றப்பட்டு விட்டதாகவே கூறிக் கொள்கின்றன ” என்று சந்திரசேகரன் தெரிவித்து போராட்டத்திற்கு வலுசேர்த்திருந்தார்.
தனித்துவம் பேணுதல்
மலையக மக்கள் வரலாற்றில் தொடர்ச்சியாகவே ஏமாற்றப்பட்டு வந்த நிலையில் பாராளுமன்றம் மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக புத்திஜீவிகள் கண்டனக் குரல்களையும் முன்வைக்கத் தொடங்கினர்.
இந்த விடயத்தில் பெரும்பான்மை அரசியல்வாதிகள் சிலர் கூட தமிழ் மக்களின் கருத்துக்களுடன் ஒத்துப்போய் இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
ஆட்சியாளர்களும், பாராளுமன்றமும் மலையக மக்களை புறக்கணித்தே செயற்படுவதாக அவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர்.இத்தகைய நிலைப்பாடுகளுக்கு மத்தியிலும் மலையக மக்களின் தேவைகள் நிறைவேற்றப்மட்டதாகவோ அல்லது அவர்களின் கோரிக்கைகள் செவிமடுக்கப்பட்டதாகவோ எந்த உறுதிப்பாடும் இல்லாத நிலையே காணப்படுகின்றது.
இன்னும் கூட அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படாத நிலையிலேயே இம்மக்களின வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருப்பதும் புதிய விடயமல்ல.வீடு, பொருளாதாரம்,சமூக நிலை எனப்பல விடயங்களையும் நாம் இதன்போது சுட்டிக்காட்ட முடியும்.
மலையக மக்கள் இவ்வாறாக பல்வேறு தேவைகளும் நிறைவேற்றப்படாத நிலையில் கண்ணீரும் கம்பலையுமாக வாழும் சூழலில் மலையக கட்சிகள் புரிந்துணர்வுடனும் ஐக்கியத்துடனும் முன்சென்று பொதுவான விடயங்களில் கைகோர்த்து மலையக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தல் வேண்டும்.மலையகக் கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கியத்துடன் செயற்பட வேண்டும் என்பதால் ஒவ்வொரு கட்சியும் தனது தனித்துவத்தை விட்டுக் கொடுத்து ஏனைய கட்சிகளுடன் சங்கமிக்க வேண்டும் என்று பொருளாகாது.
ஒவ்வொரு கட்சியும் தமது தனித்துவத்தை பேணுகின்ற அதேவேளை பொதுமக்களின் நலன்கருதி ஏனைய மலையக கட்சிகளுடன் இணைந்து செயற்படவேண்டும் என்பதையே இங்கு வலியுறுத்துகின்றேன்.
சமகாலத்தில் மலையக கட்சிகளும் அரசியல்வாதிகளும் விலைபோவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமுள்ளன.இது குறித்த பல்வேறு தரப்பினரும் தங்களது விசனப் பார்வையையும் செலுத்தி வருகின்றனர்.
இந்த விசனப் பார்வையில் அர்த்தங்கள் ஆயிரம் பொதிந்திருக்கின்றன.அப்பாவி மலையக மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கி பிரதிநிதிகள் பாராளுமன்றம் சென்றிருக்கின்றார்கள்.
மலையக சமூகத்தை சேர்ந்த இவர்களால் மலையக அபிவிருத்திக்கு உச்சகட்ட பங்களிப்பினை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு அவர்களுக்குள்ளது.இதிலிருந்தும் அவர்கள் விலகிச் செல்ல முடியாது என்பதோடு விலகிக் கொள்ளவும் கூடாது.
அற்ப சலுகைகள் அவர்களை ஆட்கொள்ளுமானால் அது நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம் என்பதோடு அது அத்தகைய அரசியல்வாதிகளின் பரம்பரைக்கே சாபக்கேடாக அமைந்துவிடும்.அரசியல்வாதிகள் பணம் சேர்ப்பதை குறியாகக் கொண்டு மலையக மக்களை ஏமாற்றக்கூடாது. .
மலையகக் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மிகுந்த கரிசனையுடன் இம்மக்களின அபிவிருத்திக்கு தோள்கொடுப்பதோடு பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும்.வெறும் வார்த்தை ஜாலங்களாலும் ஊடக அறிக்கைகளினாலும் மலையக மக்களை ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது..செயற்றிறன் மிக்க, கொள்கைப் பற்றுடைய, அற்ப சலுகைகளுக்கு விலைபோகாத அரசியல்வாதிகளையே மலையகம் இப்போது நேசிக்கின்றது என்பதே உண்மையாகும்.