நெருக்கடியிலிருந்து மீளமுடியாத நிலையை சீனா உருவாக்கின்றதா?-அகிலன்

பொருளாதார நெருக்கடியைத் தீா்ப்பதற்கான பேச்சுக்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துரிதப்படுத்தியிருக்கின்றாா். ஆனால், நெருக்கடிக்கு தீா்வைக்காண்பதற்கான உறுதியான வாக்குறுதிகள் எதனையும் ஜனாதிபதியால்  எந்தத் தரப்பிடமிருந்தும் இதுவரையில் பெறமுடியவில்லை. பிறக்கப்போகும் புதிய வருடத்திலும் பொருளாதார நெருக்கடி தொடா்வதற்கான எச்சரிக்கையாகவே இது உள்ளது. இந்த நெருக்கடிக்கு சீனாதான் காரணமா என்ற கேள்வியை கடந்த வாரம் இடம்பெற்ற சில சம்பவங்கள் எழுப்பியுள்ளன.  இதனால், அனைவரது கவனமும் இப்போது சீனாவின் பக்கம் திரும்பியுள்ளது.

சா்வதேச ரீதியில் பலமானதாகக் கருதப்படும் ஐந்து நாடுகளின் துாதுவா்களை கடந்த செவ்வாய்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒன்றாகச் சந்தித்துப் பேசியிருக்கின்றாா். பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித் தவிக்கும் நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வதுதான் இந்தச் சந்திப்பின் நோக்கமாகக் கருதப்படுகின்றது. சா்வதேச நாணய நிதியம், “பாரிஸ் கிளப்” என்பவற்றிடமிருந்து முக்கியமான சமிஞ்ஞைகள் சில கிடைத்திருக்கும் நிலையில், இந்த சந்திப்புக்களை அவா் அவசரமாக மேற்கொண்டாா்.

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், அவுஸ்திரேலிய ஆகிய ஐந்து பிரதான நாடுகளின் துாதுவா்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தாா்கள். இந்த ஐந்து நாடுகளும் சா்வதேச ரீதியாக பலமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளாக இருக்கும் அதேவேளையில், இலங்கைக்கு அதிகளவுக்கு கடன் உதவிகளைச் செய்திருக்கும் நாடுகள் என்பதும் கவனிக்கத்தக்கது. இதில் அவதானிக்கப்பட்ட மற்றொரு விடயம் – சீனத் துாதுவா் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

ஐ.எம்.எப்., பாரிஸ் கிளப் போன்றன தந்திருக்கும் செய்தியும் சீனாவை மையப்படுத்தியதாகவே இருக்கின்றது. பிறக்கப்போகும் புதுவருடம் இலங்கைக்கு எவ்வாறு அமையும் என்பதற்கான பதில் இன்று சீனாவிடம்தான் இருக்கின்றது.

இலங்கையை அழுத்திக்கொண்டிருக்கும் கடன்நெருக்கடிக்கு பிரதான காரணமாக இருப்பது சீனாதான். இலங்கையின் மொத்தக் கடனில் 50 வீதத்துக்கும் அதிகமானது சீனாவின் கடன்தான். இலங்கை தன்னுடைய கடன்களை மறுசீரமைத்த பின்னரே தமது உதவிகளையிட்டு பிரிசீலனை செய்ய முடியும் என்பது சா்வதேச நாணய நிதியத்தின் பிரதான நிபந்தனையாக இருக்கின்றது. அதாவது, இலங்கை செலுத்த வேண்டியுள்ள கடன்களில் ஒரு தொகையை விட்டுக்கொடுப்பதாக கடன்கொடுத்த நாடுகள் உடன்பட வேண்டும். அத்துடன், மிகுதியாகச் செலுத்த வேண்டிய தொகையை மீளளிப்பதற்கான கால எல்லையை நீடிக்க வேண்டும். வட்டியை விட்டுக்கொடுக்க வேண்டும் போன்றவற்றை உள்ளடக்கியதுதான் இந்த கடன் மறுசீரமைப்பு. இலங்கைக்கு கடன்கொடுத்த நாடுகள் இதனை ஏற்றுக்கொள்ளாத நிலையில் – அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியாது என்பதுதான்  சா்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடு.

இது தொடா்பாக நடைபெற்ற பேச்சுக்களில் சீனா தவிா்ந்த ஏனைய நாடுகள் கடன்மறுசீரமைப்புக்கு உடன்பட்டிருந்தன. சீனா மட்டும் கடன் மறுசீரமைப்புக்கு உடன்படவில்லை. சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கைக்கு மட்டுமன்றி மேலும் பல நாடுகளுக்கும் அது கடன்களை வழங்கியிருக்கின்றது. இதில் பெரும்பாலானவை வறுமையான – பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்ளும் நாடுகள். இலங்கையின் கடன்களுக்கு மறுசீரமைப்பை வழங்கினால், ஏனைய நாடுகளும் அதேபோன்ற கோரிக்கையை முன்வைக்கும் என்பதுதான் சீனாவின் பிரச்சினை. கடன் மறுசீரமைப்புக்கு உடன்பட மறுப்பதற்கு இதனைத்தான் சீனா காரணமாகச் சொல்கின்றது.

சீனாவின் இந்த நிலைப்பாடுதான் இலங்கைக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கின்றது. இந்தப் பின்னணியில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினா் ஒருவா் பாராளுமன்றத்திலேயே “கோ ஹோம் சைனா” என்று முழங்கியிருந்தாா். யாரைத் திருப்திப்படுத்துவதற்காக அவா் அவ்வாறு கோஷமிட்டிருந்தாலும், அது எந்தளவுக்கு யதாா்த்தமானது என்ற கேள்வி இருந்தாலும், இலங்கையின் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வருமா என்ற கேள்வி தொடா்வதற்கு ஏதோ ஒரு வகையில் சீனாதான் காரணமாக இருக்கின்றது என்பதை அது பிரதிபலிக்கின்றது.

இந்த நிலையில், பாரிஸ் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போதைய நிலைமையைப் பிரதிபலிக்கின்றது. இலங்கையின் நிதி நெருக்கடிக்கு தீர்வாக, இலங்கையின் கடனுக்கு 10 வருட கால அவகாசம் வழங்கவும், பின்னர் 15 வருட காலத்துக்கு இலங்கையின் கடனை மறுசீரமைக்கவும் பாரிஸ் கிளப் முன்மொழிந்துள்ளது. “இலங்கையை மீட்டெடுப்பதற்கான செயற்பாட்டில் கடன் வழங்குபவர்கள் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும்” என்பதை சட்டிக்காட்டியிருக்கும் பாரிஸ் கிளப், ”இலங்கையின் மிகப் பெரிய கடனாளிகளான சீனா மற்றும் இந்தியாவிடம் பாரிஸ் கிளப் அதிகாரபூர்வமாக இந்த முன்மொழிவை முன்வைக்கவில்லை” எனவும் தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பாக பாரிஸ் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிசெம்பரில் அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெறுவதற்கு ஒப்புதலைப் பெற இலங்கை எதிர்பார்த்துள்ளது. ஆனால், சீன அரசாங்கம் அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தைகளை தொடங்காததன் காரணமாக டிசெம்பர் காலக்கெடு மிகவும் கடினமாக உள்ளது. எனவே, அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கான கடனுதவிக்கான செயற்குழுவின் அனுமதியை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தில் இலங்கை பெற்றுக்கொள்ளும் என நம்பலாம். எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிட்டும்வரை இலங்கைக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு குறுகிய கால நிதி தேவை. இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு முன்னர் மோசமாகி விடும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பாரிஸ் கிளப் அறிக்கை தெளிவாக மூன்று விடயங்களை கோடிட்டுக் காட்டியிருக்கின்றது. ஒன்று – இலங்கையின் கடன் பிரச்சினையைத் தீா்ப்பதற்கு பத்து வருடகால அவகாசம் கட்டாயம் தேவை என்பது முதலாவது. அதாவது, அதற்கு முன்னா் இந்தப் பிரச்சினையைத் தீா்க்க முயன்றால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம். இரண்டாவது, கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் ஒப்புதல் அவசியமானது. அது கிடைக்காமல் அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியாது. மூன்றாவது, சா்வதேச நாணய நிதியத்தின்  கடனுதவிக்கான அங்கீகாரம் இப்போதைக்கு கிடைக்காது. அதுவரையில் குறுகிய காலக் கடன்களையாவது பெற முடியாமல் போனால், பொருளாதார நிலை மோசமடைந்து இலங்கையில் தற்போது காணப்படும் அமைதி நிலையும் காணாமல் போய்விடும்.

இந்த நிலையில்தான் சீனா தவிா்ந்த பலமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஐந்து நாடுகளின் துாதுவா்களை ஜனாதிபதி அவசரமாக சந்தித்துப் பேசியிருக்கின்றாா். இதனைவிட உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சா்வதேச நாணய நிதியம், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் உயா் அதிகாரிகளுடனும் தனியான சந்திப்பு ஒன்றை சில தினங்களுக்கு முன்னா் ஜனாதிபதி நடத்தினாா். நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த வேலைத் திட்டம் ஒன்று அவசியம் என்பது இந்த சந்திப்பின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இவை அனைத்தையும் செயற்படுத்த சில மாதங்கள் செல்லலாம். தற்போது சமையல் எரிவாயுவும், பெற்றோல், டீசல் போன்றனவும் ஓரளவுக்கு கிடைப்பதால் நாடு அமைதியாக இருப்பது போல காணப்படுகின்றது. ஆனால், தினசரி இரண்டரை மணி நேர மின்வெட்டும், அதிகரித்துள்ள விலைவாசியும் மக்களை வாட்டி வதைக்கின்றது. மின்வெட்டு நேரம் எட்டு மணி நேரமாக அதிகரிக்கலாம் என்ற எச்சரிக்கையும், நிதி உதவிகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதமும் இந்த அமைதி நிலை தொடருமா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

மீண்டும் நாடு குழம்பலாம் என்ற அச்சம் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இருக்கத்தான் செய்கின்றது. அதனால்தான் அரகலய என்ற போராட்டக் குழுவின் முக்கிய தலைவா்களை அவா் “உள்ளே” வைத்திருக்கின்றாா். வெளியே இருப்பவா்களும் எப்போதும் கைதாகலாம் என்ற அச்சத்துடன்தான் உள்ளாா்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கைகளில் வைத்துள்ள ரணில், அதனைப் பயன்படுத்தியே அதிகாரத்தை கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன்தான் இருக்கின்றாரா?