திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட இருதயபுர கிராம மக்கள், சுத்தமான குடி நீர் இன்றி பல சுகாதார நெருக்கடிகளுக்கு ஆளாகி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
ஆரம்ப காலம் தொட்டு சுகாதாரமற்ற கிணற்று நீரையே பருகி வருவதாகவும், இதன் காரணமாக பல தரப்பட்ட வயிற்று சம்மந்தமான நோய்கள் ஏற்படுவதாகவும் அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இக் கிராமத்தில் சுமார் 35 க்கும் அதிகமான குடும்பங்கள் நாளாந்தக் கூலித் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
குடி நீரினைப் பெறுவதாக இருந்தால், அயல் கிராமமான மணல்சேனை கிராமத்துக்கு செல்ல வேண்டியுள்ளதாகவும், இவ்வாறாக நீரைப் பெறுவதாக இருந்தால், குறித்த அயல் கிராம கோயில் உண்டியலில் விரும்பிய தொகை பணத்தை போட்டு விட்டே நீரை எடுத்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
குடி நீர் பிரச்சினை தொடர்பாக பல முறை உரிய அதிகாரிகளிடத்தில் பல கோரிக்கைகளை முன்வைத்த போதும், இற்றை வரைக்கும் தீர்வு எட்டப்படவில்லை என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் தமது குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு அரச அதிகாரிகள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.