சர்வதேச மனித உரிமைகள் தினம்: தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி – க.மேனன்

 

தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி

அனைத்துலக மனித உரிமைகள் நாள்: தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி

க.மேனன்

அனைத்துலக மனித உரிமைகள் நாள் எதிர்வரும் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் உலக மனித உரிமைப் பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை ஐக்கிய நாடுகள் அவை பிரகடனப்படுத்தியது. அதனைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் நாள் உலக நாடுகள் முடுவதும் ‘மனித உரிமைகள் நாள்’ கொண்டாடப்படுகிறது.

இன்றைய காலப்பகுதியில் அனைத்துலக மனித உரிமை நாள் என்பது தமிழீழ மக்களைப் பொறுத்தவரையில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட வேண்டியுள்ளது. அதற்கு முன்பாக இந்த அனைத்துலக மனித உரிமைகள் நாளை அனுஸ்டிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வது பொருத்தமாகும்.

1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவான அடுத்தாண்டு, மாசி மாதம் 16ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ‘மனித உரிமை ஆணைக் குழு’ உதயமானது. 53 நாடுகளை அங்கமாகக் கொண்ட இக்குழு, முதல் வேலையாக ‘ அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

இக்குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு சர்வதே மனித உரிமைகள் பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 1948ம் ஆண்டு, டிசம்பர் 10ஆம் திகதி பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது.

டிசம்பர் 10 என்ற இதே நாளை 1950ம் ஆண்டிலிருந்து ‘ அனைத்துலக மனித உரிமைகள் நாளாக’ அறிவித்து கொண்டாடப்பட்டு வருகிறது. உலகத்தில் பிறக்கும் எல்லா மனிதர்களும் சமமான உரிமைகளும், அடிப்படைச் சுதந்திரங்களும் கொண்டிருக்கின்றனர் என்ற உண்மையை இக்காலப்பகுதியில் சர்வதேசம் உரத்து குரல் எழுப்பவேண்டிய நிலையிருக்கின்றது.

 1. ‘அனைத்துலக மனித உரிமைகள் சாசனம்’ 30 உறுப்புரைகளைக் கொண்டது. சமத்துவ உரிமை – சகல மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர். அவர்கள் பெறுமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.
 2. ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை – இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால் வேறுபடுத்த முடியாமல் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள்.
 3. சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.
 4. யாரையும் அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை.
 5. சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.
 6. சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை.
 7. பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் எல்லோரும் உரித்தானவர்கள்.
 8. ஒருவரின் உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.
 9. சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைக்கவோ, நாடு கடத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.
 10. நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை.
 11. குற்றஞ்சாட்டப்படுவோர், குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை.
 12. தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயத்தில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம்.
 13. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும், திரும்பி வரவும் உரிமை.
 14. ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு.
 15. ஒவ்வொரு பிரஜைக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தேசிய இனத்தை மாற்றிக்கொள்ள உரிமை.
 16. எந்த ஆணும், பெண்ணும் விரும்பினால், திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புடன் குடும்பம் நடத்துவதற்கான உரிமை. சமுதாயத்தாலும், அரசாலும் இது பாதுகாக்கப்பட வேண்டும்.
 17. சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை. தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
 18. சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
 19. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு. எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகள் இன்றி தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரம்.
 20. எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள, சங்கத்தில் உறுப்பினராக யாருக்கும் உரிமை உண்டு

,21. அரசியல் உரிமை – அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபெறவும், பொதுச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.

இவ்வாறு 30சரத்துகள் மனித உரிமைகள் மேம்பாட்டு விடயத்திற்காக அனைத்துலக மனித உரிமை பிரகடனமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை ஐநாவின் மனித உரிமைகள் பேரவை மேற்கொண்டது. இந்த பேரவையானது 1979ஆம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் தொடர்பில் கண்காணிப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்தது.

இலங்கை தொடர்பிலும் ஐநா மனித உரிமைகள் பேரவையானது தொடர்ச்சியான கண்காணிப்பினை மேற்கொண்டுவந்தது. இலங்கையினைப் பொறுத்தவரையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் உருவாக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட எந்த சரத்தினையும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தியதாக இல்லை.

குறிப்பாக இலங்கையில் சிறுபான்மை சமூகத்தின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த மனித உரிமை மீறல்களை அனைத்துலக சமூகம் முறையாக கையாளாத காரணத்தினாலேயே இந்த நாட்டில் தமிழ் மக்கள் பாரிய இழப்புகளை எதிர்கொண்டதுடன், இலங்கை தேசத்தில் இன முரண்பாடுகள் உச்சத்தினை தொட்டது என்பதாகும்.

தமிழர்களுக்கு ஆரம்பகாலம் தொட்டு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்குமானால், இந்த இலங்கை தேசத்தில் தமிழர்கள் நிம்மதியாகவும் சகல வளங்களைக் கொண்டவர்களாகவும் வாழும் சூழ்நிலையே ஏற்படுத்தப் பட்டிருக்கும். ஆனால் உலக நாடுகளின் சொந்த தேவைகளுக்காக சிறுபான்மை சமூகம் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மையாகும்.

இவ்வாறான நிலையில் கடந்த 30வருட கால யுத்தம், அந்த யுத்தம் மௌனிக்கப்பட்டதற்கு பின்னரான சூழ்நிலைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை முறையாக ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தாலும் இன்று தமிழர்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் அந்த சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம் தவறிவருவதையே இந்த மனித உரிமைகள் நாளில் தமிழர்கள் மீதான இலங்கை அரசியல் அடக்குமுறைகள் வெளிப்படுத்தி வருகின்றது.

இலங்கைத் தீவினைப் பொறுத்தவரையில், இலங்கையில் உள்ள சட்டத்துறையாக இருக்கலாம், மனித உரிமை தொடர்பான செயற்பாட்டு ரீதியான அமைப்பாக இருக்கலாம் இவர்களின் செயற்பாடுகள் என்பது இனரீதியான பாகுபாடுகளைக் கொண்டதாகவே இருந்து வருகின்றது.

குறிப்பாக வடகிழக்கில் தமிழர்கள் தமக்கான உரிமையினை வெளிப்படுத்துவதற்கும் அதனை பிரயோகிப்பதற்குமான சுதந்திரம் என்பது முற்றுமுழுதாக மறுதலிக்கப் பட்டுள்ளது என்பதையே அண்மைக்கால செயற்பாடுகள் காட்டி நிற்கின்றது.

தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிதமது உறவுகளை நினைவுகூர முடியாத வகையில் தமிழர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதை எந்த அனைத்துலக நாடுகளும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகளும் தட்டிக் கேட்பதற்கு வக்கற்றவர்களாகவே இருக்கின்றனர். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராடி கொலை செய்யப்பட்ட ஜேவிபி போன்ற அமைப்புகளின் உறுப்பினர்களை நினைவுகூருவதற்கு அனுமதியளிக்கும் அரசாங்கம், இதேநாட்டில் ஒரு இனத்தின் உரிமைக்காக போராடியவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை பதித்து அவர்களை நினைவுகூரத் தடுக்கும் செயற்பாடு என்பது இந்த முழு உலகிலும் காணப்படும் மனித உரிமை மீறல்களில் மிக மோசமான மனித உரிமை மீறல்களாக நோக்கப்பட வேண்டியுள்ளது.

இலங்கையினைப் பொறுத்தவரையில், வடகிழக்கில் உள்ள தமிழர்களை அடக்கி யொடுக்குவதற்காக அனைத்து வகையான மனித உரிமை மீறல்களையும் இலங்கை அரசாங்கம் செய்தே வருகின்றது. வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதை அந்த சமூகம் அங்கீகரித்து நிற்கும்போது அதனை இன்னுமொரு சமூகம் நிராகரித்து அவர்களை அடக்கியொடுக்குவதை இன்று அனைத்துலகத்தில் மனித உரிமைகள் பற்றி வாய்கிழியப் பேசும் நாடுகள் கவனத்தில் கொள்ளாத நிலையே உள்ளது.

காணாமல் போனவர்களின் நிலைமை, யுத்த காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை அனைத்துலக சமூகம் இலங்கையிடமே ஒப்படைக்க முனைவதும் சர்வதேச சமூகத்தின் மனித உரிமைகள் தொடர்பான நிலைப்பாட்டினை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

ஓரு தனிமனிதன், ஒரு சமூகம், ஒரு இனம் பாதிக்கப்படும்போது அதிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அனைத்துலக மனித உரிமை பேரவையானது, அதன் செயற்பாடுகளை முறையாக முன்னெடுக்காமையே தமிழர்கள் போன்ற மக்கள் அடக்கியொடுக்கப்படுவதற்கான பிரதான காரணமாக அமைகின்றது.

தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகுறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது பல்வேறு மனித உரிமைகளை மீறிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நில அபகரிப்பு, தனிநபர் உரிமைகளை மீறும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக மனித உரிமை மீறல்களை மேற்கொள்வதற்காக நீதிமன்ற கட்டளைச் சட்டங்களை இலகுவாகப் பயன்படுத்தும் செயற்பாடுகள் என்பது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக வடகிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மனித உரிமை மீறல் குறித்தான செயற்பாடுகளை தொடர்ச்சியாக அறிக்கையிடுவதற்கும் அவற்றினை முன்கொண்டு செல்வதற்குமான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறான முன்னெடுப்புகளே வடகிழக்கு மக்கள் தினமும் பேரினவாத சக்திகளினால் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான செயற்பாடுகளும் அனைத்துலகத்தின் கவனத்தினை மேலும் பெற்றுக் கொள்வதற்கான சூழ்நிலையேற்படும்.

அவ்வாறான நிலையொன்று ஏற்படும்போதே எதிர்காலத்தில் இலங்கை தொடர்பான நிலைமைப்பாடுகள் தொடர்பில் அனைத்துலக அதிகளவு கவனம் செலுத்தும் நிலைமையேற்படும். இதனை அனைவரும் இணைந்து தமிழ் தேசிய பரப்பில் முன்னெடுக்க வேண்டும் என்பதே இன்றைய அனைத்துலக மனித உரிமைகள் நாளில் நாங்கள் செய்யவேண்டிய கடமையாகவுள்ளது.

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad சர்வதேச மனித உரிமைகள் தினம்: தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி - க.மேனன்