ஆர்ப்பாட்டக்காரர்களை கையாளும்போது கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தல்

கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்

ஆர்ப்பாட்டக்காரர்களை கையாளும்போது முப்படையினரும் காவல் துறையினரும் கவனத்துடனும் மிகுந்த புரிந்துணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டும் என இலங்கையின் சட்டத்தரணிகளும் மருத்துவர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கை சட்டத்தரணிகளையும் மருத்துவர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் direction srilanka என்ற  அமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது தேசமானது மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு முகம்கொடுத்துக் கொண்டுள்ள நேரத்தில் தங்களிற்கு இதனை எழுதுகின்றோம். நாட்டு மக்கள் முகங்கொடுக்கின்ற மிகுந்த அவலத்தின் எதிர்வினையாக நாடு முழுவதும் பரந்த அளவிலான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையில் நாங்களும் இந்த அவலங்களிற்கு முகங்கொடுக்கின்றோம் என்பதுடன் தாங்களும் தங்கள் குடும்பத்தவர்களும் இதற்கு முகங்கொடுக்கின்றீர்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஆர்ப்பாட்டங்கள் இந்த நாட்டின் இளைஞர்கள் யுவதிகளால் நாட்டின் சிரேஸ்ட பிரஜைகளின் தயக்கமற்ற ஆதரவுடன் கொள்கை ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றவையாகும்.

மிகுந்த ஒழுக்கத்துடனும் சட்டத்திற்கு கட்டுப்பட்ட வகையிலும் இவை முன்னெடுக்கப் படுவதே இந்த ஆர்ப்பாட்டங்களின் தனித்துவமான தன்மையாகும். எம் அனைவருக்குமான சிறந்த தேசத்தினையும் கட்டமைப்பினையும் உருவாக்குவதே இவ்ஆர்ப்பாட்டக்காரர்களது பிரதான நோக்கமும் போராட்டமுமாகும்.

பேச்சு சுதந்திரம் (அதன் உள்ளாந்த ஒரு பாகமே ஆர்ப்பாட்டத்திற்கான அடிப்படை உரிமையாகும்), கூட்டம் கூடுவதற்கான சுதந்திரம், அமைதியான ஒன்று கூடுதலிற்கான சுதந்திரம், முதலானவை எமது அரசியல் அமைப்பில் அடிப்படை உரிமைகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் நாங்கள் இவற்றை பாதுகாக்கவும் கடைப்பிடிக்கவும் கடமைப்பட்டுள்ளோம். இவ்விடயத்தில் மிரிஹானவில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை தவிர காவல்துறையினரும் படையினரும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் எவ்வாறு அன்பாக நடந்துகொண்டனர் என்பதையிட்டு இந்த தருணத்தில் நாம் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இருந்தபோதிலும் நேற்று முன்தினம் ஆயுதங்கள் இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான தாக்குதலை பார்க்கும்போது நாங்கள் மிகுந்த அதிர்ச்சியடைகின்றோம்.

இதன் விளைவாக ஒருவர் உயிரிழந்தும் பலர் காயமடைந்தும் உள்ளனர்.
காவல்துறையினரும் படையினரும் சட்டத்தினையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்கு கடமைப்பட்டவர்கள் என்பதனை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை ஆயுதமின்றி பிரஜைகள் மீது மேற்கொள்ளப்பட்டிருக்கும் இவ்வாறான தாக்குதல்கள் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாதவையாகும்.

இவை தேவையற்றதும் மன்னிக்க முடியாததுமாகும்,எமது பார்வையில் ஒருவரது செயலினால் மற்றுமொரு நபருக்கோ அல்லது சொத்துக்களுக்கோ பாரதூரமான ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலையில் மாத்திரம் இவ்வாறான கடுமையான தாக்குதல் நியாயப்படுத்தக்கூடியதாகும்.

ஆதலினால் ஆர்ப்பாட்டக்காரர்களை  கையாளும்போது கவனத்துடனும் புரிந்துணர்வுடனும் மிகுந்த கட்டுப்பாட்டுடனும் நடந்துகொள்ள வேண்டும் என இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையிலும், உயர்தொழில்துறையாளர்கள் என்ற அடிப்படையிலும் நாங்கள் உங்கள் ஒவ்வொருவரையும் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.

Tamil News

Leave a Reply