காணாமல் ஆக்கப்பட்டோரில் 19 பேர் தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன

காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேர் தொடர்பான தகவல்கள் கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகத்தில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற கருத்தமர்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோரைக் கண்டறியும் செயலகங்களில் இதுவரை 16 ஆயிரத்து 966 பேர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மூவாயிரத்து 742 பாதுகாப்பு தரப்பினரும் காணாமல் போயுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் 6 ஆயிரத்து 449 பேரின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 10 ஆயிரத்து 517 பேர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

2000ஆம் ஆண்டிற்கு பின்பு 7 ஆயிரத்து 406 பேரும், 2000ஆம் ஆண்டிற்கு முன்னர் 9 ஆயிரத்து 560 பேரும் காணாமல் போயுள்ளதாக ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘இதிலே 2000ஆம் ஆண்டிற்குப் பின்னர் காணாமல் போன 7ஆயிரத்து 406 பேரில், 6 ஆயிரத்து 449 பேர் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளன’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘நிறைவு பெற்ற விசாரணைகளில் இருந்து 19 பேர் உயிரோடு இருப்பதனையும் கண்டறிந்துள்ளோம்’.
‘அவர்களது விபரங்களை 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இணைத்துள்ளோம்’.
‘அவை விரைவில் வெளிவரும்’ என்று காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2 ஆயிரத்து, 604 பேர் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.
407 பேர் மரணச் சான்றிதழிற்கான சிபாரிசை பெற்றுள்ளனர். ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணத்திற்கு 4ஆயிரத்து 408 பேர் விண்ணப்பித்துள்ளனர்’ என்றும் காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்துள்ளார்.