அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிராந்திய இணைப்பு தொடர்பான முக்கிய செய்தியை வெளிப்படுத்தும் வகையில் தமது விஜயத்தை நிறைவு செய்து இராமேஸ்வரத்துக்கு பயணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என்று இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 6ஆம் திகதி தமது விஜயத்தை நிறைவு செய்து இராமேஸ்வரத்துக்கு செல்லவுள்ள அவர், புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிராந்திய ஒருப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் இராமேஸ்வரம் விஜயம் அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டமை மற்றும் கொவிட்-19 காலப்பகுதியில் நிறுத்தப்பட்ட சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை போன்றன பிராந்திய ஒருமைப்பாட்டின் வெளிப்பாடாகும் என இந்தியா தெரிவிக்கிறது.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அநுராதபுரத்துக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் இந்த விஜயத்தின் போது மீனவர் பிரச்சினை, 13ஆம் திருத்தச் சட்ட விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



