இலங்கை நெருக்கடியின்போது இந்தியாவின் ஆதரவு அளப்பரியது-விஜயதாச ராஜபக்ஷ

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தை பாராட்டுவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனைத்து சமூகங்களினதும் ஒருமித்த கருத்துடன் நீண்ட கால சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் விரைவில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்திய விஜயத்தின் போது அங்குள்ள ஊடகங்களுத்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். புலம்பெயர் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இலங்கை மக்கள் மற்றும் தலைவர்களுடன் அரசாங்கம் தொடர்ச்சியான தொடர்புகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்திடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவுடன் நாங்கள் எங்கள் பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்த்தோம். இலங்கையில் இயல்பு நிலையை மீண்டும் கொண்டு வருவோம் என்று நாங்கள் நம்புகிறோம். 2022 இல் இலங்கை முன்னெப்போதும் இல்லாத நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டது.

இது நாட்டில் அரசியல் கொந்தளிப்பைத் ஏற்படுத்தியது. இந்த நெருக்கடியானது ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் வழிவகுத்தது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் பொருளாதாரத்தின் நிதி ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கும் அரசாங்கம் போராடி வருகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல முயற்சிகளை எடுத்தோம். 2016 ஆம் ஆண்டு சகல செயற்பாடுகளையும் ஆரம்பித்து, காணாமல் போனவர்களுக்கான அலுவலகங்கள், சமாதானத்தை ஏற்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த செயல்பட்டோம்.

இலங்கை அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவவுள்ளதுடன், அனைத்து சமூகங்களுடனும் ஒருமித்த கருத்துடன் நீண்டகால சமாதானத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கிறோம்.

பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம். பல வழக்குகள் இருந்தன, பல கைதிகள் இருந்தன. இருப்பினும், இப்போது இந்த பிரச்சினைகள் அனைத்தும் மாறியுள்ளன. இலங்கை அனைத்துப் பிரச்சினைகளையும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து தீர்த்து வருகிறது என்றார்.