இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கனடாவின் நடவடிக்கையைப் பின்பற்ற வேண்டும் – உலகத்தமிழர் பேரவை

இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகத் தடைவிதிப்பதற்கு கனேடிய அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் தீர்மானத்தை வரவேற்கும் அதேவேளை, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, நியூஸிலாந்து போன்ற ஏனைய முற்போக்கு நாடுகளும் இதனையொத்த நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என்று உலகத்தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. 

மிகமோசமான மனித உரிமை மீறல் குற்றங்களுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகிய நால்வருக்கு எதிராக விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் தடைவிதிப்பதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே உலகத்தமிழர் பேரவை மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக தற்போது கனேடிய அரசாங்கத்தினாலும், இதற்கு முன்னதாக அமெரிக்க அரசாங்கத்தினாலும் விதிக்கப்பட்ட தடையை நாம் பெரிதும் வரவேற்கின்றோம். அதுமாத்திரமன்றி நீதி, சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகக்கோட்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்காக அந்நாட்டு அரசாங்கங்கள் முன்நிற்பதைப் பாராட்டுகின்றோம்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுவதற்கு ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலம் இலங்கை அரசாங்கம் தவறியிருக்கும் நிலையில், தற்போது இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் முக்கிய நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னிணியில் சில தினங்களுக்கு முன்னர் கனேடிய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட தடைப்பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை மிகமுக்கியமான விடயமாக அமைந்திருக்கின்றது.

அதேவேளை தற்போதைய சூழ்நிலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் தடைகள், மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின்மீது நிலவும் நம்பிக்கையீனத்தையே காண்பிக்கின்றது. அதேபோன்று கனேடிய அரசின் நடவடிக்கை இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களுக்கு மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அரசியல் மற்றும் இராணுவத்தலைவர்களுக்கும் மிகமுக்கிய செய்தியை வழங்கியிருக்கின்றது.

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் செயற்திறன்மிக்க பொறுப்புக்கூறல் பொறிமுறை ஆகியவற்றின் மூலமே சட்டத்தை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் உலக ஒழுங்கைக் கட்டியெழுப்பமுடியும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.