தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ்

254 Views

தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” தமிழர்களுக்கென ஒரு தனி நாடாக தமிழீழம் அமைக்கும் முயற்சியில் இன்னுயிர் ஈந்த ஈழப்போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் நவம்பர் 27ம் நாள் மாவீரர் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஈழ விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

இலங்கையின் களச்சூழல் மாறியிருக்கலாம். ஆனால், தனித்தமிழ் ஈழத்திற்கான தேவை அப்படியே தான் இருக்கிறது. அது தான் இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வும் கூட. உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களின் கனவும், தாகமும் கூட தனித்தமிழ் ஈழம் அமைக்கப்பட வேண்டும் என்பது தான்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் மாறி வரும் சூழலும், அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கமும் தமிழீழம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றி அமைப்பதற்கான காரணிகளாக உருவெடுத்து வருகின்றன. தனித்தமிழீழம் அமைக்கப்படுவது தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு வலு சேர்க்கும்.

ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தங்களின் நாட்டை தீர்மானிக்கும் உரிமை உண்டு. அதன்படி ஐ.நா. மூலம் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.” என்று கூறியுள்ளார்

Leave a Reply