ஹோர்முஸ் வழித்தடங்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்த வேண்டாம் என கப்பல்உரிமையாளர்களுக்கு இந்தியா கடந்த வியாழக்கிழமை(16) அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இந்தியாவின் கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகம், கப்பல் உரிமை யாளர்கள், கப்பல் மேலாளர்கள் மற்றும் ஆள்சேர்ப்பு நிறுவனங்களிடம், “மறு உத்தரவு வரும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணம் மேற்கொள்ளும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்துவதைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளது.
இந்த வாரம் ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில் இரண்டு இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு அப்பகுதியில் இயங்கும் கப்பல்களில் பணியாற்றும் இந்திய மாலுமிகளின் நலன்களைப் பாதுகாக்க, மேம்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்வது அவசியம் என இயக்குநரகம் கருதுகிறது,” என்று அந்த உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல், ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் குறைந்தது 14 மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. கடந்த மாதம் தெரிவித்தது. ஜூன் 9 அன்று ஓமன் கடற்கரைக்கு அப்பால் செட்டெபெல்லோ எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று இந்தியக் கப்பல் ஊழியர்களும் இதில் அடங்குவர்.



