இலங்கையில் உணவுப் பொருள் தட்டுப்பாடு: தமிழகத்துக்கு அகதிகள் வருகை அதிகரிப்பு

தமிழகத்துக்கு அகதிகள் வருகை அதிகரிப்பு

தமிழகத்துக்கு அகதிகள் வருகை அதிகரிப்பு

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதையடுத்து வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமிழகத்துக்கு அகதிகளாக செல்வது தற்போது அதிகரித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து கடுமையான மின்வெட்டு, உணவுப் பொருள் தட்டுப்பாட்டால் மக்கள்  பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் போராட்டத்திலும் மக்கள் இறங்கியுள்ளனர். அதிகமாக தென்னிலங்கையில்  போராட்டங்கள் அதிகரித்துள்ளன. எதிர்க்கட்சிகளும் தற்போதைய அரசை பதிவியில் இருந்து விலகக்கோரி போராட்டங்களை கொழும்பில் முன்னெடுத்து வருகின்றன.

நாட்டின் பல பகுதிகளில் எரிபொருளுக்காகவும் உணவுப் பொருட்களுக்காகவும் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.  எரிபொருள் விநியோக நிலையங்களில் விற்பனையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். எரிபொருள் வாங்குவதற்கு வரிசையில் நின்றிருந்த முதியவர்கள் 3 பேர்  உயிரிழந்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அண்டை நாடுகளிடம்  இலங்கை அரசு உதவி கோரி வருகிறது. அதன்படி, கடந்த மார்ச் 17-ம் திகதி இலங்கைக்கு 100 கோடி டொலர்  கடனுதவியை இந்திய அரசு அளித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களை வாங்க இந்த உதவியை அளிப்பதாக இந்தியா அறிவித்தது. இதுதவிர சர்வதேச  நாளய  நிதியத்திடம்  உதவியை கோரியிருப்பதாக   ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான உணவு தட்டுப்பாடு காரணமாக தமிழகத்துக்கு அகதிகளாக செல்லும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 16 இலங்கைத் தமிழர்கள் 2 குழுக்களாக தமிழகத்துக்கு சென்றுள்ளனர். முன்னதாக மூன்று குழந்தைகள் உள்பட 6 பேர்  அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலையின்மை, உணவு தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டில் இருந்து வெளியேறியதாக தமிழக  காவல்துறையினரிடம்  அவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் அடுத்துவரும் வாரங்களில்   சுமார் 2 ஆயிரம் பேர் அகதிகளாக தமிழகத்திற்கு  வரக்கூடும் என கணிக்கப் பட்டுள்ளது.

Tamil News