தொடர்ந்து வந்த அரசுகள் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் பொருளாதார நெருக்கடி வந்திருக்காது-இரா.சம்பந்தன் 

பொருளாதார நெருக்கடி வந்திருக்காது

தொடர்ந்து வந்த அரசுகள் தாம் அவ்வப்போது வழங்கி வந்த வாக்குறுதிகளை மீறியமையால்தான் நாட்டுக்கு இந்த இழி நிலைமை என நேற்று கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்  தெரிவித்தார் 

மேலும் அவர்  கூறுகையில்,

இந்த நாட்டில் 30 வருடங்களுக்கு மேல் நடந்த யுத்தத்தின் விளைவைத்தான் இப்போது பொருளாதார நெருக்கடியாக நாங்கள் எதிர்கொண்டு கொண்டிருக்கின்றோம். அந்த யுத்தத்தை எதிர்கொள்வதற்காகப் பெருந்தொகை பணத்தை – நிதியை நாடு செலவிட்டது. கடன்களை வாங்கிக் குவித்தீர்கள். அவற்றின் தொடர்ச்சியாக ஏற்பட்ட நெருக்கடிதான் இன்று நாம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி.

அந்த யுத்தம் ஏன் ஏற்பட்டது? காலாகாலமாக ஆட்சிக்கு வந்தவர்கள் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போனதுதான் இன்றைய நிலைமைக்கு காரணம். அரசுகள் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் பொருளாதார நெருக்கடி வந்திருக்காது.

பண்டா – செல்வா ஒப்பந்தத்தை அல்லது டட்லி – செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றி இருந்தால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டிய தேவை வந்திருக்காது. போர் நடந்திருக்காது. போருக்கு முந்தியும் வாக்குறுதிகளை வழங்கினீர்கள். மீறினீர்கள். போருக்குப் பின்னரும் வாக்குறுதிகளை வழங்கினீர்கள். அவற்றையும் மீறுகின்றீர்கள். அதனால்தான் தீர்வு எட்டவில்லை.

நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை இனிமேலும் தாமதிக்காமல் நிறைவேற்றினீர் களானால் சர்வதேசம் உங்களை நம்பும். புலம்பெயர் தேசத்தில் இருப்பவர்கள் உங்களை நம்புவார்கள். இரண்டு தரப்பிலும் இருந்தும் சரியான பொருளாதார உதவிகள் கிடைக்கும்.

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே பொருளாதார மீட்சி உண்டு. அதிகாரப் பகிர்வு இல்லாமல் அபிவிருத்திக்கு வாய்ப்பே இல்லை. ஆகவே, அரசியல் தீர்வை எட்டுவதற்கு விசுவாசமாக உழையுங்கள். மிகுதிப் பிரச்சினைகள் தாமாகவே தீரும் – என்றார்.

Tamil News