ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் கோரியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அரசியல் புகலிடம் கோருவரின் எண்ணிக்கை முந்தைய 6 ஆண்டுகளைவிட 2022 ஆம் ஆண்டில் அதிகரித்திருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் புகலிடத்துக்கான முகவரத்தின் (EUAA) புள்ளிவிபரங்களின்படி, ஒன்றியத்தின் 27 அங்கத்துவ நாடுகள் மற்றும் சுவிட்ஸர்லாந்து, நோர்வே ஆகியவற்றில் புகலிடத்துக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 10 இலட்சமாகும்.

இவர்களில் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகமாகும். கடந்த வருடம் புகலிடத்துக்காக விண்ணப்பித்தவர்களில் இவ்விரு நாடுகளைச் சேர்ந்தோர் சுமார் கால் பங்கினர் ஆவர்.

இவ்விரு நாடுகளுக்கு அடுத்ததாக, துருக்கி, வெனிசூவேலா, கொலம்பியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்  ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் அதிகளவில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

ரஷ்ய படையெடுப்பின் பின்னர், உக்ரைனிலிருந்து வெளியேறியோர் இத்தரவுகளில் உள்ளடக்கப்படவில்லை. அவர்களுக்காக பிரத்தியேகமான தற்காலிக பாதுகாப்புத் திட்டம் கடந்த வருடம் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

ஐரோப்பிய புள்ளிவிபர முகவரகத்தின் தகவல்களின்படி, 40 இலட்சம் உக்ரைனியர்கள் மேற்படி பாதுகாப்பு அந்தஸ்தை பெற்றனர். இவர்களில் 2 சதவீதமானோரே புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த வருடம் 28,000 உக்ரைனியர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடம் கோரியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் மொத்தமாக 966,000 பேர் புகலிடம் கோரியுள்ளனர். 2021 ஆம் ஆண்டில் புகலிடம் கோரியவர்களின் எண்ணிக்கையைவிட இது 50 சதவீதம் அதிகமாகும். இது 2016 ஆம் ஆண்டின் பின்னரான மிக அதிமான தொகையாகும். 2016 ஆம் ஆண்டில் 1,251,815 பேர் புகலிடம் கோரியிருந்தனர்.

கடந்த வருடம் பாதுகாவலர்கள் அற்ற சுமார் 43,000 சிறார்களும் புலிடம் கேரியுள்ளனர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சிரியா, ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

கடந்த வருடம் சிரியாவைச் சேர்ந்த 131,697 பேரும் ஆப்கானிஸ்தானியர்கள் 128,949 பேரும் புகலிடம் கோரியுள்ளனர். துருக்கியைச் சேரந்;த 55413 பேரும், வெனிசுவேலாவைச் சேர்ந்த 51,000 பேரும், கொலம்பியாவைச் சேர்ந்த 43,000 பேரும் புகலிடம் கோரியுள்ளனர்.

இவர்களுக்கு அடுத்ததாக பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜோர்ஜியா, உக்ரைன், இந்தியா, மொரோக்கோ, டுனீஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். ரஷ்யா இப்பட்டியலில் 16 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த வருடம் 16,920 ரஷ்யர்கள் புகலிடம் கோரியுள்ளனர்.