இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள இந்த தருணத்தில், வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்து இலங்கையை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் கடந்த மே மாத இறுதி வரை 2,88,645 கடவூச்சீட்டுக்கள் (பாஸ்போர்ட்) விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021ம் ஆண்டு முழுவதும் 3,82,506 கடவூச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் மூன்று இலட்சத்தை அண்மித்த கடவூச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கடவூச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்காக, குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பெரும் எண்ணிக்கையிலானோர் தொடர்ந்தும் காத்திருக்கின்றனர்.
இந்த ஆண்டில் மட்டும் சுமார் ஐந்து இலட்சத்தை அண்மித்தோர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 1,20,000க்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.
இந்த எண்ணிக்கையானது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 100 வீதம் அதிகரிப்பு என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.