இலங்கை: சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்த 300 பேர் இது வரையில் கைது -கடற்படை தகவல்

இந்த ஆண்டின்(2022) இதுவரையான காலம் வரை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்த சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்காக பாவனைக்கு உதவாத பழைய படகுகளே பயன்படுகின்றமை உறுதியாகியுள்ளதாகவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முயற்சிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் 80க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் பலர் கடல் வழிப் பயணம் மூலம் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்ல முயன்றுள்ளனர்.

இது குறித்து கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,

”ஆட்கடத்தல்காரர்களே மக்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்வதாக உணர முடிகின்றது. மக்கள் கஷ்டத்தில் உள்ள இந்த சந்தர்ப்பத்தில், நல்லதொரு நாடு இருக்கின்றது என போலியாக அவர்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றனர். வெளிநாடுகளுக்கு பழைய படகுகளை பயன்படுத்தியே, இவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். அது மிகவும் அபாயகரமானது. அதுவே அச்சப்படக்கூடியதாக உள்ளது. பழைய படகுகளில் செல்லும் போது, கடல் சீற்றம் அடைந்தால், அனைத்தும் முடிந்து விடும். இந்த படகு வெளிநாட்டு கடல் எல்லைக்குள் சென்றதன் பின்னர், மீண்டும் ஆட்கடத்தல்காரர்களுக்கு கிடைப்பதில்லை. அதனால், பாவனைக்கு உதவாத பழைய படகுகளையே இதற்காக பயன்படுத்துகின்றனர்.

சட்டவிரோதமான வெளிநாடுகளுக்கு செல்வோரை, அந்தந்த நாடுகள் உடனடியாக திருப்பி அனுப்பி வைக்கும். இவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்வோரை, அந்த நாடு மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி விடும். இதனால், தேவையற்ற விதத்தில் பணத்தை வீண்விரயமாக்க வேண்டாம் என்றே கூற வேண்டியுள்ளது. இவ்வாறு செல்வோரை நாம் எப்படியாவது கைது செய்வோம். இல்லையென்றால், கடலில் செல்லும் போது, அவர்கள் உயிரிழக்கக்கூடும். அவர்களை பாதுகாக்க வேண்டும்” என்றார்.

இந்நிலையில்,இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற இரு குழுக்களை, அவுஸ்திரேலிய அரசாங்கம் அண்மையில் விமானம் மூலம் நாடு கடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பிபிசி தமிழ்

Tamil News