2021ம் ஆண்டு 1.63 இலட்சம் இந்தியர்கள் இந்திய குடியுரிமையை துறந்து மேற்குலக நாடுகளில் குடியேறியுள்ளதாக தகவல்

கடந்த 2021ஆம் ஆண்டு 1.63 இலட்சம் இந்தியர்கள் இந்திய குடியுரிமையை துறந்து மேற்குலக நாடுகளில் குடியேறியுள்ளனர். 

கடந்த 2021ம் ஆண்டு இந்திய குடியுரிமை துறந்து வேறு நாடுகளின் குடியுரிமையைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,63,370 ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த 2019, 2020 ம் ஆண்டுகளை விட கூடுதலான எண்ணிக்கையாகும்.

2019ல் 1,44,017 பேரும், 2020ல் 85,256 பேரும் இந்திய குடியுரிமையை துறந்திருந்தனர். அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் குடியமர்வதற்காக 3.9 இலட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இதில் பெரும்பாலான இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.

2021ல் இந்திய குடியுரிமை துறந்த 78,284 இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ளனர். 23,533 இந்தியர்கள் அவுஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுள்ளனர். 21,597 பேர் கனடாவிலும் 14,637 பேர் இங்கிலாந்திலும் குடியுரிமை பெற்றுள்ளனர். 1,400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சீன குடியுரிமையைப் பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய பாராளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹஜி பஸ்லூர் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலின் மூலம் இத்தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அமைச்சர் பதிலளித்துள்ளார்.

இந்திய குடியுரிமையை துறந்து மொத்தம் 103 நாடுகளில் இந்தியர்கள் குடியுரிமை பெற்றிருக்கின்றனர்.

Leave a Reply