வடக்கில் 9 கொரோனா சிகிச்சை நிலையங்களும் நிரம்பின; மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

199 Views

10 1 1 வடக்கில் 9 கொரோனா சிகிச்சை நிலையங்களும் நிரம்பின; மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்அத்தியாவசிய தேவையை தவிர்த்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று மக்களை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள 9 கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களும் நிரம்பியுள்ளன. அத்துடன், கொரோனா நோயாளர்களை பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட அனைத்து மருத்துவமனைகளின் விடுதிகளும் நிரம்பியுள்ளன என்றும் அவர் அறிவித்துள்ளார்.

நேற்று, அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

நாட்டில் தற்போது கொரோனா நோய் பரவலானது அதிகரித்துள்ளது. குறிப்பாக மேல் மாகாணத்தைப் பொறுத்தவரை இறப்புகள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை கடந்த சில வாரங்களாக நோய் அறிகுறிகளுடன் அதிக தொற்றாளர்கள் இனம் காணப்படுகின்றனர். இது ஓர் ஆபத்தான விடயம். எனவே, பொதுமக்கள் அத்தியாவசிய தேவையைத் தவிர்த்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.

வடக்கு மாகாணத்தில் 9 கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்கள், கொரோனா நோயாளர்களை பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட மருத்துவமனை விடுதிகளும் நிரம்பியுள்ளன. எனவே, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள். யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை ஒன்றுகூடல்கள் அதாவது இந்து ஆலயங்களில் நடத்தப்பட்ட நிகழ்வுகளின் காரணமாக பல தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர். எதிர்வரும் காலத்தில் இவ்வாறான ஒன்றுகூடல்கள் மற்றும் நிகழ்வுகளை தவிர்த்து பொதுமக்கள் வீடுகளில் இருத்தல் சிறந்தது. இதேபோல மேல் மாகாணத்தில் தற்போது இறப்பு வீதம் அதிகரித்துள்ளது. இதே நிலைமை எமதுவடக்கு மாகாணத்திலும் இனி வருங்காலத்தில் ஏற்படலாம்.

எனவே, பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயல்படுதல் அவசியமாகும். மேல் மாகாணத்தில் வீடுகளில் கொரோனா நோயாளர்களை வைத்து பராமரிக்கும் செயல்திட்டம் பரீட்சார்த்தமாக செயல்படுத்தப்படுகின்றது. இது வெற்றிகரமாக நிறைவேறினால் ஏனைய மாகாணங்களுக்கும் இந்தத் திட்டம் நடைமுறைக்குவரும்” என்றார்.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply