30 ஆண்டுகளாக அகதிகள் முகாம்களில் – குடியுரிமைக்காக காத்திருக்கும்  இலங்கை தமிழர்கள்

486 Views

30 ஆண்டுகளாக அகதிகள் முகாம்களில்

30 ஆண்டுகளாக அகதிகள் முகாம்களில்: “குடியுரிமை வழங்கினால் எங்களாலும் எல்லோரையும் போல் வாழ முடியும்” என தமிகத்தில் அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற இனப்போர்  காரணமாக அங்கிருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களுக்கு  அகதிகள் முகாமில் கல்வி உரிமை மற்றும் இதர சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முகாம்களில் தங்கி வசித்து வருகிறார்கள்.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகும், பலர் சொந்த நாட்டுக்கு செல்ல விருப்பமில்லாமல் தமிழகத்திலேயே வாழ நினைக்கிறார்கள். அவ்வாறு தமிழகம் முழுவதும் முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடந்த வாரம்  சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ், புதிய வீடுகள் கட்டித்தரப்படும், பழுதடைந்த வீடுகள் சீரமைக்கப்படும், கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு புதிய சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 108 முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர் நலனுக்காக ரூ.317 கோடியை மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடும் செய்து அறிவித்துள்ளார். அதேபோல் இலங்கை அகதிகள் முகாமை இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என்றழைக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்து கருத்துக் கூறியுள்ள இலங்கை அகதிகள், “இனி அகதிகள் முகாம் என்று அழைக்காமல் இலங்கை தமிழர்கள்  மறுவாழ்வு முகாம் என்று அழைக்க அரசாணை வெளியிடப்படும் என முதலமைச்சர் கூறி உள்ளார். இது மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்கும் இங்குள்ள அனைத்து மக்களையும் போல் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஆசை உள்ளது. குடியுரிமை வழங்கினால் எங்களாலும் எல்லோரையும் போல் வாழ முடியும்” என்று கூறியுள்ளனர்.

Leave a Reply