சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2ஆம் பிரிவுகள்  எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த பகுதியில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுக்கான தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றன.

இக்காலகட்டத்தில் பூங்காவைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனப் போக்குவரத்தைக் குறைப்பதன் மூலம், விலங்குகள் எவ்வித இடையூறுகளுமின்றி இயற்கை நீர்நிலைகளை நாடிச் செல்வதையும், சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்பையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் இரண்டாம் பிரிவுகள் மட்டுமே மூடப்படும் என்பதால், வறட்சியின் தாக்கம் குறைவாக உள்ள யால பூங்காவின் ஏனைய மண்டலங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறந்திருக்கும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடுமையான வறட்சி நிலவும் காலங்களில் பூங்காவின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், விலங்குகளின் தடையற்ற வாழ்விடச் சூழலை உறுதி செய்யவும் வனஜீவராசிகள் திணைக்களம் இத்தகைய தற்காலிக மூடலை ஒரு வழக்கமான நடைமுறையாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.