கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
எந்தவித அனுமதியும் இன்றி இரவு வேளைகளில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு குறித்த பகுதியில் இடம் பெற்று வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் நெற்செய்கை மேற்கொள்ளும் வயல்கள் பாதிப்படைந்து வருவதாகவும், தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிசாருக்கு தெரியாமல் மணல் அகழ்வில் ஈடுபடுவதாகவும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய திணைக்கள அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், குறித்த மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்தாது விட்டால் பெரும் போக நெற்செய்கையில் பெரும் பாதிப்பை விவசாயிகளாகிய நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து குறித்த பகுதியில் மணல் அகழ்வை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



