இலங்கையின் கடன் நிலைமை குறித்து IMF கருத்து

இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை இன்னமும் அச்சுறுத்தல் நிலையிலேயே இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி இவான் பபஜோர்ஜியோ Evan Papageorgiou)  சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர், அண்மையில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பிரதான காரணம் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இடம்பெற்றுவரும் மோதல்களும், அதன்விளைவாக உலக சந்தையில் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்புமேயாகும் என்றும், அதனை சீரமைப்பதற்கு இலங்கை அதிகாரிகளால் பொருத்தமான தற்காலிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளுக்கு நாணய நிதிய இயக்குநர் சபையின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றிருப்பது இலங்கையைப் பொறுத்தமட்டில் மிகமுக்கிய மைல்கல் அடைவாகும். அண்மையகாலங்களில் முகங்கொடுக்கநேர்ந்த பலதரப்பட்ட சவால்களுக்கு மத்தியிலும், விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் அமுலாக்கம் மிகவும் வலுவானதாக அமைந்திருந்தது. 2022 ஆம் ஆண்டு தீவிர பொருளாதார நெருக்கடியின்போது இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் தற்போது நாடு மிகவும் முன்னேற்றகரமான நிலையில் உள்ளது. இவ்வாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாக அமையும் என எதிர்வுகூறப்பட்டிருக்கிறது.

அண்மையில் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்த மோதல்களினால் பணவீக்கம் உயர்வடைந்துள்ளது. எனவே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல் மற்றும் விலை உறுதிப்பாட்டைப் பேணல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு மத்திய வங்கி நாணயக்கொள்கையை இறுக்கமாக்கியுள்ளது. வெளியக அழுத்தங்களின்போது ரூபாவின் பெறுமதியில் ஏற்படக்கூடிய தாக்கத்தை உரியவாறு கையாள்வதற்கு தற்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை மிகப்பொருத்தமானதாகும்.

அதேபோன்று சமகால பொருளாதார நிலைவரத்தைக் கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுவரும் தற்காலிக நிவாரணங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம். அவை தற்காலிக நிவாரணங்கள் என்பதனால், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் அவை முடிவுறுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.
அதேவேளை அண்மையில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பிரதான காரணம் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இடம்பெற்றுவரும் மோதல்களும், அதன்விளைவாக உலக சந்தையில் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்புமேயாகும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி என்பது இயல்பான விடயமாகும். மத்திய கிழக்கு மோதல்களினால் ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே இதன்விளைவாக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டிருக்கும் தாக்கத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகளால் பொருத்தமான தற்காலிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் கடன் நிலைவரத்தைப் பொறுத்தமட்டில், அண்மைய சில வருடங்களாகவே இலங்கையினால் பெறப்பட்ட கடன்கள் மிக உயர்வான மட்டத்திலேயே காணப்பட்டன. இருப்பினும் தற்போது முடிவுறும் தருவாயில் உள்ள கடன்மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் நாட்டின் கடன் நிலைவரம் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றமடைந்துள்ளது. ஆனால் கடன் ஸ்திரத்தன்மையானது இன்னமும் அச்சுறுத்தல் நிலையிலேயே இருக்கிறது.
அதேபோன்று நாம் கடந்த மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருக்கும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினோம். பொருளாதார மீட்சியைப் பொறுத்தமட்டில், இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் மூலம் நீண்டகால அடிப்படையில் குறிப்பிடக்கூறத்தக்க மாற்றங்கள் ஏற்படாது. எனவே மேலும் புதிய இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிப்பதையோ அல்லது அதனை விரிவுபடுத்துவதையோ நாம் பரிந்துரைக்க மாட்டோம்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கான புதிய செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது குறித்து நாம் எதுவும் பேசவில்லை. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் செயற்திட்டத்தை முழுமையாகப் பூர்த்திசெய்வதற்கே தற்போது முன்னுரிமை அளித்திருக்கிறோம். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கடந்த மூன்றரை வருடகாலத்தில் பொருளாதார ரீதியாகப் பல்வேறு முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து முன்கொண்டுசெல்லவேண்டும் என்றார்.