செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படாத சில உள்ளூராட்சி மன்றங்களை சிறப்பு ஆணையாளர்களின் கீழ் கொண்டு வருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் இதுபோன்ற நடவடிக்கைகள் நியாயமற்ற முறையில் செயற்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது.
முறையான நிர்வாகங்களை அமைக்க முடியாத உள்ளூராட்சி மன்றங்கள், குறிப்பாக தவிசாளர்கள் மற்றும் உப தவிசாளர்களை தேர்ந்தெடுப்பதில் தோல்வி கண்டுள்ள சபைகள் சிறப்பு ஆணையாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்ன அறிவித்துள்ளார்.
அத்துடன் வேண்டுமென்றே கூட்டங்களில் கலந்து கொள்ளாமல், சபைகளின் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் செயற்படும் சபைகளின் உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த சிறப்பு ஆணையாளர்கள் மூன்று மாதங்களுக்குள், அந்தந்த மாகாண ஆளுநர்களிடம் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோரப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் ஏற்கனவே சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த செயற்பாட்டில் அரசாங்கம் அநீதியாக நடந்து கொண்டால், தனது கட்சி சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எச்சரித்துள்ளார்.
ஒரு உள்ளூராட்சி சபை இரண்டு சந்தர்ப்பங்களில் ஒரு தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தேர்ந்தெடுக்கத் தவறினால், சிறப்பு ஆணையாளரை நியமிக்க, சட்டத்தில் இடமுண்டு என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும், ஆளும் கட்சியால் அரச அதிகாரிகள் மீது செலுத்தப்படும் தேவையற்ற அழுத்தம் காரணமாக பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டங்களைப் புறக்கணிக்கின்றனர் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சீதாவாக்கை பிரதேச சபை போன்ற இடங்களில், உள்ளூர் ஆணையாளர்கள் ரகசிய வாக்கெடுப்புகளை நடத்த அழுத்தம் செலுத்தப்படுகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் சீதாவாக்கை, ஆனமடுவ மற்றும் கலிகமுவ போன்ற உள்ளூராட்சி சபைகள், கோரம் இல்லாததால் தவிசாளர் மற்றும் உப தவிசாளர்கள் இதுவரை தெரிவுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.