வவுனியா செட்டிக்குளம் கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக திங்கட்கிழமை (21) மெனிக்பாம் மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டமானது தமக்கு அருவித்தோட்டம் பகுதியில் வழங்குவதாக கூறிய ஒரு ஏக்கர் விவசாய காணியினை வழங்க வேண்டும் என தெரிவித்தே முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள், “ அரச அதிகாரிகளே ஏழைகளின் ஒருவேளை உணவை நிம்மதியாக உண்ணவிடு, மெனிக்பாமில் வசிக்கும் மக்களுக்கு வயல் காணி ஒரு ஏக்கர் வீதம் வழங்கு” போன்ற பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,
தாங்கள் 2004 ஆம் ஆண்டு சிதம்பரபுரம் முகாமில் இருந்து மெனிக்பாமிற்கு 1/2 ஏக்கர் மேட்டுக்காணி மற்றும் 01 ஏக்கர் வயல் காணி தருவாதாக தெரிவித்து குடியேற்றம் செய்தனர். ஆனால் தற்போது வரை எங்களிற்கு வயல் காணி தரப்படவில்லை.
மேலும் கூலி வேலையினை மேற்கொண்டே எமது வாழ்வாதாரம் போகின்றது. அத்தோடு கடந்த காலத்தில் கிராம சேவையாளரிடம் சென்றும் வயல் காணி தொடர்பாக நாங்கள் பதிவு செய்திருந்தோம். அதன் மூலமாக ஒரு சிலருக்கு வழங்கப்பட்டது. ஆனால் 20 வருடமாகியும் எங்களிற்கு கிடைக்கவில்லை.
அத்தோடு அருவித்தோட்டம் கமக்கார அமைப்பை சேர்ந்தவர்கள் பல ஏக்கரில் வயல் காணிகளை பெற்று வயல் செய்கின்றனர். ஆனால் எங்களிற்கு எந்த வயற் காரணிகளும் கிடைக்கவில்லை எனவே எங்களிற்கு தருவதாக தெரிவித்த வயற்காணியினை தரவேண்டும் என தெரிவித்தனர்.
இது தொடர்பாக கமக்கார அமைப்பை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் 2004ம் ஆண்டில் இருந்து அருவித்தோட்டம் பகுதியில் பயிர் செய்து வந்திருந்தோம். 2005,2006,2007 காலப்பகுதியில் காணியினுள் இராணுவம் எங்களை நுழைய விடாமல் எங்களை வற்புறுத்தி இராணுவத்தகற்கு வழங்க கோரியிருந்தனர்.
மேலும் குறித்த காணிகள் படித்த வாலிபர் திட்டத்தின் கீழ் 13 ஏக்கர் அடிப்படையில் வழங்கப்பட்ட காணிகளாகும். மேலும் இக்காணி உறுத்தினை நீக்கி வேறு ஒருவருக்கு வழங்க முடியாத நிலையும் இருந்தது.
இந்நிலையில் குறித்த காணிக்குரியவர் இல்லாத நிலையில் காணி இல்லாதவர்கள் கூட குறித்த காணிகளை துப்பரவு செய்து பயிர்ச் செய்கை நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு பிரதேச செயலகம் மற்றும் கமநல சேவை நிலையத்தாலும் வழங்கப்பட்டது.
குறிப்பாக 2010ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச காலத்தில் எந்தவொரு நிலமும் பாவனையின்றி இருக்க முடியாது என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது.
மேலும் காணி இல்லாதவர்களிற்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்கப்பட்ட போது மூவர் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் போது இருவர் அவற்றினை கைவிட்டு செல்லும் நிலை காணப்பட்டதுடன், கைவிடப்பட்ட பகுதிகள் காடுகளாக காணப்பட்டமையால் காட்டு விலங்குகளின் தாக்கம் பெருமளவு ஏற்பட்டது.
இதன்போது பிரதேச செயலகத்தால் குறித்த பகுதியினை அருகில் உள்ளவர்கள் துப்பரவு செய்து பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டதுடன், உரியவர்கள் வரும் போது நட்ட ஈட்டினை பெற்றுக்கொண்டு வழங்க வேண்டும் என பிரதேச செயலகத்தால் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கமக்கார அமைப்பை சேர்ந்தவர்கள் 10 ஏக்கர் பதினைந்து ஏக்கர் என விவசாயம் செய்வதாக கூறினர். இது தவறான கருத்தாகும் ஏனெனில் குறித்த காணிகளிற்கு உரியவர்கள் குத்தகைக்கே வழங்கியுள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கு காணி அடையாளப் படுத்தப்பட்டு காணகயினை துப்பரவு செய்து எடுக்கவில்லை என தெரிவித்தார்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்,
ஆர்ப்பாட்டகாரர்களுடன் கலந்துரையாடி இருந்ததுடன் இதுதொடர்பாக செட்டிகுளம் பிரதேச செயலாளர் சுலோசனாவுடனும் நேரடியாக சென்று இது தொடர்பாக கலந்துரையாடிய போது குறித்த அருவித்தோட்டம் பகுதியில் விவசாயம் செய்வதற்கு மேலும் காணி இருப்பதாக பிரதேச செயலாளரினால் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு குறித்த காணியினை துப்பரவு செய்ய வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டால் வழங்குவதற்கான நடவடிக்கைகளை வழங்க முடியுமென கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் குறித்த காணியினை பெற்றுத்தருவதற்கான தீர்மானத்தினை மேற்கொள்வதாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வாக்குறுதி வழங்கியதன் அடிப்படையில் குறித்த ஆர்ப்பாட்டமானது கைவிடப்பட்டிருந்தது.