Home Blog Page 8

முத்துநகர் விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்கிறது…

திருகோணமலை – முத்துநகர் விவசாயிகள், திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் (20) முன்னெடுத்தனர்.

விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும். இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம்.

‘பொய்கள் வேண்டாம், விவசாயிகளை இப்படியா நடாத்துவது’ போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் முத்து நகர் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு சிங்கள அமைப்பான மக்கள் போராட்ட முன்னணியும் ஆதரவை வழங்கியுள்ளது.

முத்து நகர் விவசாயிகளின் விவசாய காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்டதையடுத்து இந்த சத்தியக் கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு நேற்று (19) இடம் பெற்ற நிலையிலும் கூட இந்த பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஐ. நாவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார்…

நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தொடரில் எதிர்வரும் புதன்கிழமை (24) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார்.

ஐ.நா. வெளியிட்ட திருத்தப்பட்ட தற்காலிக பேச்சாளர்களின் பட்டியலின்படி, குறித்த தினத்தில் ஜனாதிபதி பிற்பகல் அமர்வில் உரையாற்றவுள்ளார். எதிர்வரும் 23 முதல் 29 ஆம் திகதிவரை இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

அரச தலைவராக தனது முதல் ஐ.நா. பொதுச் சபை உரையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரல், பொருளாதார மறுமலர்ச்சி முயற்சிகள் மற்றும் காலநிலை நடவடிக்கை, நிலையான வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா குழுவின் அமர்வில் இலங்கை தொடர்பில் மதிப்பாய்வு செய்ய திட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா குழு அதன் 29வது அமர்வை செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2 வரை நடத்தவுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பிலும் மதிப்பாய்வு செய்யப்படவுள்ளது.
இந்த அமர்வானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு பொதுக் கூட்டத்துடன் ஆரம்பமாகும்.

வலிந்து காணாமல் போதலில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டில் 77 அரசுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்தநிலையில் இம்முறை இலங்கை உள்ளிட்ட 3 அரசுகள் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது.
அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து அந்தந்த நாட்டு அறிக்கைகள் மற்றும் பிற சமர்ப்பிப்புகளைப் பெற்றுள்ள விசேட குழு, இலங்கை தொடர்பான மதிப்பாவின் போது அவற்றை சமர்ப்பிக்கும்.

அடுத்த நிதியாண்டிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு!

2026ஆம் நிதி ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் அரச செலவீனமாக 4,43,435 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் செலவீனமாக 4,21,824 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான செலவீனம்  பல்வேறு  காரணிகளை  அடிப்படையாகக் கொண்டு 21,610 கோடி ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தை காட்டிலும் 2026ஆம் ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் விடயதானங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

அரச செலவீனத்துக்கான நிதி ஒதுக்கீடுகளில் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 64,800 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின்  விடயதானங்களுக்கு 61,744கோடியே 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026ஆம் ஆண்டுக்காக 3,055 கோடியே  50 இலட்சம் ரூபா மேலதிகமாக  ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின் இரண்டாவது மதிப்பீடு நிதி அமைச்சர் என்ற ரீதியில்   ஜனாதிபதியினால் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து நவம்பர்  8ஆம் திகதி முதல் டிசம்பர்  5ஆம் திகதி வரை விவாதத்தை நடத்துவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

காணிப் பிரச்சினையில் அரசியலுக்கு இடமில்லை: அரசாங்கம் தெரிவிப்பு

வடக்கில் யுத்த காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவே அரசாங்கத்தால் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டன என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை அரசியல் அனுகூலங்களைப் பெறும் நோக்கில் பயன்படுத்த இடமளிக்கப்படமாட்டாது.
வடக்கில் பெரும்பான்மையான மக்கள் ஏனைய கட்சிகளை விட தேசிய மக்கள் சக்திக்கே வாக்களித்திருக்கின்றனர்.

எனவே அவர்கள் தொடர்பில் ஏனைய கட்சிகளை விட எமக்கு பொறுப்புக்கள் அதிகம் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் கூட்டப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது, வடக்கில் காணி விடுவிப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் எஸ்.ஸ்ரீதரன் கேள்வியெழுப்பிய போது அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் அவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

ஸ்ரீதரன் உரத்த குரலில் கேள்வியெழுப்பிய போது, பதிலளித்த அமைச்சர் பிமல், ‘எனக்கு உங்களை விட உரத்த குரலில் பேச முடியும். உங்களுக்கு தேவையான பிரசாரம் கிடைத்து விட்டதென நினைக்கின்றேன். எனவே தற்போது நான் கூறுவதைக் கேளுங்கள்,’ என்று தெரிவித்தார்.

காணி விடுவிப்பு தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் எங்குமே நேரடியாகச் சென்று காணிகளை விடுவிப்பதில்லை என்றும் இந்த காணி பிரச்சினையை அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்

அந்த காலப்பகுதியில் பாதுகாப்பு காரணிகளுக்காகவே மக்களின் இடங்கள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டன. இவ்வாறு பாதுகாப்பு காரணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளை பாதுகாப்பு தேவை இல்லாபட்சத்தில் மீளக் கையளிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருக்கின்றார் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு தாங்கள் செயற்படுவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது நமது கடமை: த.வெ.க. தலைவர் விஜய் கருத்து

ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்  தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, ‘கடலில் மீன்பிடிக்கும் போது பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தமிழக மீனவர்களுக்காகக் குரல் கொடுப்பது அவசியம்.  மீனவர்களின் உயிர்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் வாழ்க்கையும், கனவுகளும் மிக மிக முக்கியம்” என்றார்.

இலங்கை உட்பட உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஈழத்தமிழர்கள் “தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும்” நிலையில், அவர்களுக்காகக் குரல் கொடுப்பதும், துணை நிற்பதும் நமது கடமை அல்லவா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இவ்வாறு உரையாற்றியது, தமிழக அரசியல் மற்றும் சமூக அரங்கில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த  விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் மொந்தவீடியோ மரபு மீறல் ஈழத்தமிழர் இறைமையும் தன்னாட்சியும் அனைத்துலக அங்கீகாரம் பெறுதலை இலகுவாக்கியுள்ளது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 357

பலஸ்தீனத்தை அரசாகப் பிரித்தானியா அங்கீகரித்துள்ள வரலாற்று மாற்றம் 1933ம் ஆண்டின் ‘மொந்தவீடியோ மரபின் விளைவு திறன் வரைகூறான (Montevideo effectiveness criteria)’ ‘தெளிவாக வரையறுக்கப்பட்ட எல்லைக ளும், நிலையான மக்கள் தொகையும், ஒருமை யாகச் செயற்படும் அரசாங்கமும் இருந்தாலேயே அதனை அரசாக அங்கீகரிக்கலாம் என்ற நிபந்தனையை மீறியுள்ளது. இதனை பிரித்தானியாவின் ஆங்கில நாளிதழான ‘த கார்டியன்;’ உடைய ராஜதந்திர பத்திரிகாசிரியரான பற்றிக் வின்ரூர் தனது 18.09.2025ம் திகதிய யூ.கே. வெள்ளிக்கிழமைக்குள் பலஸ்தீனிய அரசை அங்கீகரிக்க ஆயத்தமாகிறது’ என்ற ‘த கார்டியன்’ கட்டுரையில் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் இந்த ‘மொந்தவீடியோ மரபு’ மீறல் உலகின் சமகாலப் பிரச்சினையாக உள்ள ஈழத்தமிழரின் இறைமையும் தன்னாட்சியும் பிரித்தானியாவால் இதே அடிப்படையில் அங்கீகரிக்கப்பட வேண்டிய தார்மீகநிலையை பிரித்தானியாவுக்கு ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோண்சன் பலஸ்தீனப் பிரச்சினை குறித்த தனது அவர் பிரதமராக இருந்த காலத்துக் கருத்துப்பரிமாற்றமொன்றில் பிரித்தானியா பலஸ்தீனத்திலும் இலங்கையிலும் வெவ்வேறான இருதேசங்களை ஒன்றாக்கி ஆட்சிபுரிந்தனர் என குறிப்பிட்டமை நினைவுக்கு வருகின்றது. இப்போது பலஸ்தீனிய தேசத்தைப் பிரித்தானியா அங்கீகரிக்கப்பதன் மூலம் பலஸ்தீனியர்கள் இஸ்ரேயலால் 77 ஆண்டுகள் இனஅழிப்புறும் நிலைக்குப் பாதுகாப்பை பிரித்தானியாவின் இன்றைய பிரதமர் கியர் ஸ்ராமர் வழங்குகிறார். அதே போல அவர் 04.02.1948 முதல் இன்று வரை 77 ஆண்டுகள் பிரித்தானிய காலனித்துவம் உருவாக்கிய சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சி முறைமைக்குள் பிரித்தானியாவிடம் இருந்த தங்களின் யாழ்ப்பாண வன்னி அரசுக்களின் இறைமையைச் சிங்களவர்களின் இறைமையுடன் இணைத்த பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக்காலத் தவறால் தொடர்ச்சியாக இனஅழிப்புக்கு உள்ளாகி வரும் ஈழத்தமிழர்களையும் அவர்களின் ஈழத்தமிழர் தாயகத்தை அங்கீகரிப்பதன் மூலம் உடன் பாதுகாக்க வேண்டும் என்று இன்று பிரித்தானியாவின் குடிகளாக உள்ள ஈழத்தமிழர்கள் ஒருமைப்பாட்டுடன் வலியுறுத்த வேண்டும் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது.
1995இல் தென்னாபிரிக்கா முதன்முதலில் பலஸ்தீனிய அரசை அங்கீகரித்ததின் பின்னர் 2010இல் பிரேசிலும் 2011இல் சிலியும் 2012இல் தாய்லாந்தும் 2025இல் ஸ்பெயினும் பலஸ்தீனியத்தை அங்கீகரித்ததின் பின்னரே 2025இல் 10 ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீனியத்தை அங்கீகரிக்கும் நிலை உருவானது. இதனை ஏன் குறிப்பிட வேண்டியுள்ளதென்றால் எவ்வாறு பலஸ்தீனியர்கள் உலகின் எல்லாநாடுகளுடனும் தங்கள் உரையாடல்களை நடாத்தி இந்த நிலைக்கு வந்தனர் என்பதை ஈழத்தமிழர்கள் கவனத்தில் எடுத்தல் வேண்டும். ஈழத்தமிழர்கள் ஒருசில நாடுகளுடன் மட்டும் அதுவும் திட்டமிட்ட முறையில் இல்லாது மனம்போன போக்கிலேயே தங்கள் உரையாடல்களை முன்னெடுக்க முயற்சிப்பதே ஈழத்தமிழர்களால் உலகளாவிய மக்கள் ஆதரவை பலஸ்தீனியர்களை விட மோசமாகப் பல இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பைச் சந்தித்த நிலையிலும் இன்று வரை பெற இயலாதுள்ளமைக்குக் உள்ளமைக்குக் காரணமாகிறது. இன்றும் பலஸ்தீனிய மக்களுக்காக பலஸ்தீனியர் அல்லாத உலக மக்களே எங்கும் சிறைக்குப் போவதைக் கூடப் பொருப்படுத்தாது போராடுவதைக் காண்கின்றோம். ஆனால் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை தேசிய விடுதலைப்போராட்டத்தையும், கட்சிகளும் அமைப்புக்களும் இயக்கங்களும் எல்லா மக்களுக்கும் உரியதாகக் கருதாது முற்றுரிமை கொண்டாடுகின்ற போக்கு அரசியல் வழக்கமாகப் பழக்கமாகியுள்ளதால் அவர்களுடைய முயற்சிகள் வெறும் பரப்புரைகளாகவே உலகின் ஊடகங்களால் பார்க்கப்படும் போக்கும் காணப்படுகிறது.
கடந்த வாரத்தில் தியாகி திலீபனின் நினைவேந்தலுக்குச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை “திலீபன் வழியில் வருகின்றோம்” என தியாகி திலீபனின் திருவுருவ ஊர்தியைத் தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தாமே முற்றுரிமை கொண்டாடி அவரைத் தடுத்த செயல் குறித்துத் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் தியாகி திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த பொழுது அருகிருந்தவருமான  பசீர் காக்கா என அழைக்கப்படும் மு.மனோகர் அவர்கள் யாழ்ப்பாண ஊடக மையத்தில் செய்தியாளர் சந்திப்பில்  “தியாக தீபம் திலீபனின் ஈகத்தின் பெறுமதியையோ தமிழ்த்தேசியம் என்ற விடயத்தையோ விளங்கிக் கொள்ளாமல் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சியினர் கோமாளிக்கூத்துகளை நடாத்துவதையும், எமது போராட்டத்தைப் புரிந்து கொள்ளாமல் ஒட்டுமொத்த தமிழினத்தையும் தலைகுனியும் வகையில் தெருச்சண்டியர்கள் போல் நடந்து கொள்வதையும் சகிக்க முடியாதுள்ளது. மாற்றுக் கருத்துடையோருக்கு அஞ்சலி செலுத்துவதும் இறுதிச்சடங்கு போன்றவற்றில் கலந்து கொள்வதும் ஒரு நாகரிக சமூகத்தில் நடக்கும் விடயங்களே. எல்லாவற்றையும் 13வது திருத்தத்தை ஏற்றோர் எதிர்ப்போர் என்ற வாய்ப்பாட்டில் துரோகி-தியாகி என வகைப்படுத்தும் புதியதோர் ஒழுங்கைக் கொண்டு வரத்துடிக்கின்றனர். வட கிழக்குக்கு அப்பால் உள்ள எமது உறவுகள், தென்னிலங்கையிலுள்ள நடுநிலையானோர் எமது போராட்டத்தையும், திலீபனின் தியாக வரலாற்றையும் அறிய விடாமல் திரைபோட முனைவது சிறுபிள்ளைத்தனமானது.  முன்பு திலீபனின் நினைவேந்தலில்; தியாக தீபம் திலீபனின் திருவுருவத்துக்குத்  மாலை சூட்ட வரிசையில் நின்ற என்னை பிறகு மாலை போடுங்கள் எனத் திருப்பியனுப்ப முனைந்தார்.
உடனே அங்கே வந்த சனநாயகப் போராளி அமைப்பினர் என்னைக் கூட்டிச் சென்று மாலை போட உதவினர். அன்று என்னை தடுத்தவர்தான் இப்போது திலீபனுக்கு அஞ்சலி  செலுத்த வந்த சந்திரசேகரிடம் தமது எதிர்ப்பை வெளியிட ஆரம்பித்து எங்களை நாகரிகமற்ற மக்கள் கூட்டமாக வெளிப்படுத்த முனைந்தனர்.” எனக் கூறியுள்ளார்.  மூத்த போராளி ஒருவரின் இந்தக் கூற்று ஈழத்தமிழர்களில் சிலரின் எல்லாவற்றையும் முற்றுரிமை கொண்டாடும் போக்குதான் ஈழத்தமிழரின் தேசிய ஒருமைப்பாட்டுக்கான மிகப்பெரிய தடையாக இன்று ஈழத்தமிழரின் அரசியல் உலகில் உள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அமெரிக்காவின் முன்னாள் துணை அரசத்தலைவர் கமலா ஹரிஸ் அவர்கள் தான் அரசத்தலைவர் தேர்தலுக்குப் பரப்புரை செய்த நாட்களின் அனுபவத்தை “107 நாட்கள்” என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். இந்த நூல் சொந்தக் கட்சிக்குள்ளேயே ஒருவர் பெண் என்ற நிலையில் அனுபவித்த வேதனைகளை மட்டுமல்லாது சொந்தக் கட்சிக்காரரே எவ்வாறு ஒருவரின் வெற்றிக்கு எதிர்வினையாற்றுவர்கள் என்பதைத் தெளிவாக்கியுள்ளது. ஈழத்தமிழர்கள் இதனை வாங்கிப்படித்தால் தாங்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம். அவர் ஒரு இடத்தில் தன்னுடைய இனநிலையை ட்ரம்ப் தாக்கு பொருளாக்கிய பொழுது தான் அமைதியாக இருந்தமைக்குக் காரணம் அதற்குப் பதிலளித்திருந்தால் ட்ரம்ப் நீ பெண்ணல்ல என்றால் அதனை நிரூபிக்க நான் பெண்ணுறுப்பைக் காட்சிப்படுத்த வேண்டி வந்திருக்கும் என்று கிண்டலாக எழுதியுள்ளார். இத்தகைய மனப்போக்கில்தான் ஈழத்தமிழர்கள் பலரும் இன்று முற்றுரிமை கொண்டாடுபவர்களுக்கு பதிலளிக்காமல் இருக்கின்றார்கள்.
பிரித்தானிய பிரதமரும் அமெரிக்க அரச அதிபரும் செக்கர்ஸ் எஸ்டேட்டில் செய்தியாளர்களுடன் உரையாடிய பொழுது “புதிய சகாப்தம் – புதிய தலைமைத்துவம் தேவை”   என்ற  உண்மையை உலகுக்குத் தெளிவாக்கினர். அந்நேரத்தில் பிரித்தானியப் பிரதமர் தான் பலஸ்தீனிய விடயத்தில் அமெரிக்காவுடன் முரண்படுவதாகவும் இருதேச முறைமையை பிரித்தானியா நடைமுறைப்படுத்த முனையும் என்று கூறி விட்டு ஆனால் பயங்கரவாத இயக்கமான ஹமாஸ் ஆட்சியில் எந்தப் பங்கையும் வகிக்க பிரித்தானியா அனுமதிக்க மாட்டாது எனவும் தெளிவாகக் கூறினார். இந்நிலையில் உலகில் பயங்கரவாத இயக்கங்கள் எனப் பட்டியிலிடப்பட்ட இயக்கங்கள் தங்களை மீளவும் உலக முறைமைக்குள் கொண்டு வருவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவது இன்றைய காலத்தின் தேவை என்பது இவர்களுடைய உரையில் தெளிவாக்கப்பட்டுள்ளமை முக்கியமான விடயம். அத்துடன் இன்று பிரித்தானிய அமெரிக்க உறவு தனியான விசேடமானது என பிரித்தானிய அரசரும் அமெரிக்க அரசத்தலைவரும் பிரகடனப்படுத்திய பொழுது அது 250 பில்லியன் டொலர் பெறுமதியான “டெக்” வளர்ச்சியின் மூலமே அந்நிலை ஏற்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. இவ்விடத்தில் டெக் என்பது சமகாலத்தில் வேகமாகப் பரவும் செயற்கை நுண்ணறிவு வழியான தொழில்துறைக்கு வர்த்தகத்துக்கு சமூக வாழ்வுக்கு உதவக்கூடிய முறைமையைத் தளத்தை உருவாக்கும் கம்பெனிகளையே குறிக்கிறது. இதனால் இன்றைய உலகு பில்லியன் மில்லியன் முதலீட்டாளர்களின் உச்ச இலாபத்தையே சமூக பொருளாதார அரசியல் ஆன்மிக வளர்ச்சியாக முன்னெடுக்கிறது என்ற வகையில் இதற்கு ஏற்ப செயற்பட வேண்டிய பொறுப்பு ஈழத்தமிழர்களுக்கு உள்ளதென்பதாலேயே இலக்கு செயலணிகளை அமைத்து செயற்படுவதற்கான அழைப்பை பலமாக எழுப்புகிறது. அத்துடன் இருவரிடையான நேரடி உடன்படிக்கை வழியாகவே இவை நடைமுறைச் சாத்தியமாகும் என்பதையும் அமெரிக்க பிரித்தானிய தலைவர்களின் சந்திப்பு உறுதியாக்கியுள்ள நேரத்தில் ஒவ்வொரு துறையினரையும் இணைக்கும் பலம் பொருந்திய டெக் ஹப் காலத்தின் தேவை என்பதை இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
 ஆசிரியர்

Tamil News

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா!

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று சனிக்கிழமை (20) கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தனியார்  விடுதி “உங்கள் கருத்தைக் கைவிடாதீர்கள் – அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிக்க ஒன்றிணைவோம்” என்ற கருப்பொருளின் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்ட முதலாவது பொது நிகழ்வு இதுவாகும்.

இந்த நிகழ்வில் பல அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

அதே ஆண்டில், 375 பெண்கள் இத்தகைய துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாகவும்  அவர் கூறினார்.

இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 114 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் வுட்லர்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரை வந்தடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்திப் பவனி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது நேற்று(19) காலை மன்னார் நகர பகுதியை வந்தடைந்துள்ளது.

தியாக தீபம் தீலீபனிம் உருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயக பகுதிகளில் அஞ்சலிக்காக சென்று வருகின்ற நிலையில் மன்னார் மக்களில் அஞ்சலிக்காக நேற்றையதினம் வருகை தந்திருந்தது.

இதன்போது பொது மக்கள், அருட்தந்தையர்கள் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.

மன்னார் நகர் பிரதான சுற்றுவட்ட பகுதியில் பொது மக்களின் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டதுடன் அதனை தொடர்ந்து மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.