Home Blog Page 79

செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 8 மனித எச்சங்கள் அடையாளம்!

c9cff4a6 b685 47bf be90 b9ba5e276eb0 செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 8 மனித எச்சங்கள் அடையாளம்!

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள்  நேற்றைய  தினம்(21) மீள ஆரம்பிக்கப்பட்டன.

அந்தவகையில் நேற்யை தினம் 7 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்  இன்றைய தினம் மேலும் 8 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை செம்மணி மனித புதைகுழி அகழ்வில் 80 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை விருட்சத்திற்கான நீர் சேகரிக்கும் பவனி ஆரம்பம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடப்படவுள்ள விடுதலை விருட்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாழ்ப்பாணம் – திருநெல்வேலியல் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையிலான அணி திரள் நிகழ்வு எதிர்வரும் 24ஆம் 25 ஆம் திகதிகளில் நல்லூர் கிட்டுப் பூங்காவில் நடைபெறவுள்ளது.

அந்த நிகழ்வின் முக்கிய அங்கமாக விடுதலை விருட்சம் நடப்பட உள்ள நிலையில் குறித்த விடுதலை விருட்சத்திற்கான நீர் சேகரிப்பு தாயக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தன்னார்வலர்கள் மற்றும் பொது அமைப்புகள் உங்கள் பிரதேசங்களில் விடுதலை விருட்சத்திற்கான நீரினை சேகரித்து கிட்டு பூங்காவில் இடம்பெறும் விடுதலை நிகழ்வில் கையளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தங்கள் பிரதேசத்துக்கு வரும் நீர் சேகரிக்கும் வாகனத்திலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை முன்னிறுத்தி ஒரு குவளை நீரை நீங்களும் வழங்க முடியும் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களுக்கான வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற ஊழியர்களுக்கான வரவு செலவுத் திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச வேதனம் தொடர்பான (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை தொடர்ந்து அதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதன்போது சபையில் இருந்த சகலரும் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன்படி எவரும் அதனை எதிர்த்து வாக்களிக்கவில்லை. எனினும் 42 பேர் சமூகமளித்திருக்கவில்லை.

இதற்கமைய 182 வாக்குகளால் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்த புதிய திருத்தச் சட்டதிற்கமைய ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் 27000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் 30000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணைக்கு அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சி வலியுறுத்து

செம்மணி புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.” – என்று அவுஸ்திரேலிய  கிறீன்ஸ் கட்சியின் நியூ சவூத் வேல்ஸ் மாநில செனட்டர்டேவிட் சூபிரிட்ஜ்  வலியுறுத்தியுள்ளார்.

உண்மையை ஒருபோதும் புதைக்க முடியாது.இலங்கையில் தமிழ் மக்கள்மீது கட்டாயமாக நடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் இனப்படுகொலையை நினைவூட்டும் வகையில் செம்மணி புதைகுழி அமைந்துள்ளது.

29 ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. நீதி நிலைநாட்டப்படவில்லை.

எனவே செம்மணி உட்பட இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழிகள் குறித்து சர்வதேச அளவில் கண்காணிக்கப்படும் தடயவியல் விசாரணை அவசியம்.” – எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சரணடைந்தவர்கள் விவகாரம்: ஐநா அமைப்பிற்கு சர்வதேச மன்னிப்புச்சபை பரிந்துரை

இலங்கையின் உள்நாட்டு மோதலின் முடிவில் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை பெற்று வெளியிடுவதன் மூலம் காணாமல்போனோர் அலுவலகம் காணாமல்போனோரை தேடுவதற்கான அதன் ஆணையை நிறைவேற்றுவதில் குறிப்பிடதக்க முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐக்கியநாடுகள் குழுவிற்கு சமர்ப்பித்துள்ள 22 பக்க அறிக்கையில் சர்வதேச மன்னிப்புச்சபை இதனை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான குழுவின் 29 வது அமர்வு செப்டம்பர் 22 முதல் ஒக்டோபர் 3ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையிலேயே  சர்வதேச மன்னிப்புச்சபைதனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இந்த அமர்வில் ஐநாவின் குழு பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் இன் கீழ் இலங்கை தனது கடப்பாடுகளை எவ்வாறு நிறைவேற்றியுள்து என்பது குறித்து ஆராயவுள்ளது.

இலங்கை இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல பரிந்துரைகளையும் அவதானிப்புகளையும் சர்வதேச மன்னிப்புச்சபை22  பக்க அறிக்கை முன்வைக்கின்றது.

சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கையின் உள்நாட்டு மோதலின் முடிவில் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை பெற்று வெளியிடுவதன் மூலம் – பலவந்தமாக காணாமலாக்கப்படுதலில் தொடர்புபட்ட படையினர் மற்றும் பிற குற்றவாளிகளிடம் இது வரை மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் காணாமல்போனோர் அலுவலகம் காணாமல்போனோரை தேடுவதற்கான அதன் ஆணையை நிறைவேற்றுவதில் குறிப்பிடதக்க முன்னேற்றத்தை காண்பிப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.

தொடரும் மனித புதைகுழி அகழ்வுகள் தொடர்பில் மிகவும் அவசரமாக காணாமல்போனவர்கள் அலுவலகம் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணத்துவத்தை கேட்டுப்பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தவேண்டும்.

காணாமல்போனவர்களின் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை நிறைவேற்றுவதில் காணாமல்போனவர்களின் அலுவலகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பிக்காதமைக்கு அதன் தலைமைத்துவத்தை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துங்கள்.அதன் நடவடிக்கைகள் குறித்து ஒழுங்கமைக்கப்பட்ட மாற்றங்களை மேற்கொள்ளுங்கள்அந்த அலுவகத்திற்கு நியமிக்கப்படுபவர்கள் திறமைசாலிகள் அர்ப்பணிப்புள்ளவர்கள் சுயாதீனமானவர்களாக விளங்குவதை உறுதி செய்யுங்கள்.

பல தசாப்தங்களாக பதில்களைக் கோரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் கோரிக்கைகளை அவசரமாகவும் உண்மையாகவும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காணாமல்போனவர்கள் எங்கிருக்கின்றாகள் தெளிவுபடுத்தாமல்,அவர்கள் உள்ள இடத்தை சுயாதீனமாக ஆராயாமல், காணாமல்போனமைக்கான சூழ்நிலைகளை தெரிவிக்காமல்,உயிருடன் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மனித எச்சங்களை அவர்களின் குடும்பத்தவர்களிடம் வழங்காமல்  இது தொடர்பான விடயத்திற்கு அதிகாரிகள் முடிவை காணமுயலக்கூடாது.

பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நீதி மற்றும் இழப்பீட்டிற்கான உரிமைகளிற்கு அதிகாரிகள் முன்னுரிமை வழங்கவேண்டும்,அவற்றை மதிக்கவேண்டும்,அதற்கு உதவவேண்டும்.

. நிறுவனத்திற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே நிலவும் நம்பிக்கை மற்றும் அறிவு இடைவெளியைக் குறைக்க இன்னும் பல தொலைநோக்குப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்

காயங்கள் காரணமாக ஆண்டுதோறும் 12,000 பேர் உயிரிழப்பு

இலங்கையில் காயங்களால் ஆண்டுதோறும் 12,000 பேர் உயிரிழக்கின்றனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காயங்கள் காரணமாக ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி,

15 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களே காயங்களால் பெரும்பாலும் உயிரிழக்கின்றனர்.

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இவ்வாறான காயங்கள் பெரும்பாலும் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சரியாக செயற்படுவதன் மூலம் தவிர்க்கக்கூடியவை.

குறிப்பாக, காயங்கள் ஏற்பட்டதும் உடனடியாக அடிப்படை முதலுதவி அளிப்பது மனித உயிர்களை காப்பாற்றுவதிலும் சிக்கல்களை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும், இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகத் துறையினரும் முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

விபத்துகளின் மூலக் காரணங்களைப் பற்றியும், முதலுதவியின் அவசியத்தை பற்றியும் மக்களிடையே எடுத்துரைப்பது பாதுகாப்பான சமுதாயத்திற்கான கட்டமைப்பை உருவாக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் அரசின் பாரிய சதித்திட்டம், கறுப்புக்கொடி போராட்டத்துக்கு அழைப்பு

எதிர்வரும் 23 ஆம் திகதியன்று நட்புறவுப் பாலம் என்ற பெயரில் யாழ்ப்பானத்தில் அனுர அரசின் பாரிய சதித்திட்டம் ஒன்று நிகழவுள்ளதாக எச்சரித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன், அனுர அரசின் எடுபிடிகளாகச் செயற்படும் நபர்களின் இந்த வலையில் வீழாது அன்றைய நாளில் கறுப்புக்கொடி கட்டி அதற்கு எதிர்ப்பு வெளிபடுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கொக்குவிலில் உள்ள தனது அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி அதாவது யூலை 23 என்பது தமிழ் மக்களுக்கு கறைபடிந்த ஒருநாள். இந்நாளின் வரலாற்றை மழுங்கடிக்க அனுர அரசு சதித் திட்டம் ஒன்றை மிக சாதுரியமாக நகர்த்த முயற்சிக்கின்றது.

குறித்த தினத்தன்று தென்னிலங்கையில் இருந்து ஒரு தொகுதி நபர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்து இங்குள்ள அனுர அரசின் எடுபிடிகளைக் கொண்டு மக்களை ஏமாற்றி அழைத்து இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்குவதாகக் கூறி நட்புறவுப் பாலம் என்ற நிகழ்வை நடத்த முயற்சிக்கின்றது.

இது தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு இலங்கையில் நடைபெற்ற யுத்தக் குற்றங்களுக்கு சர்வேச குற்றவியல் விசாரணையை மேற்கொள்ள முயற்சிக்கும்போது அதை சிதைப்பதற்கு அல்லது திசை திருப்பும் நகர்வாகவே இருக்கின்றது.

அனுர அரசின் இந்த சதியில் சிக்காது தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருபது அவசியமாகும்.

இந்த நட்புறவுக்கு கொண்டாட்டத்தை கொண்டாடுவதானது 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிய இனப்படுகொலையை மூடி மறைப்பதற்கான ஒரு தந்துரோபாயமாகவே இது இருக்கின்றது .

கடந்த காலங்ககில் இருந்த அரசுகள் எல்லாம் இந்த விடயத்திற்கு தீர்வை கொடுக்காவிட்டாலும் அதை இல்லாதொழிக்க முயற்சிக்கவில்லை. நினைவேந்தல்களை கண்டுகொள்ளாமல் இருந்தன.

அனால் அனுர அரசு அந்த அரசுகள் எதுவும் தீர்வு கொடுக்கவில்லை என்ற தோற்றத்தை மக்களுக்கு காண்பித்து இந்த விடயத்தை நீர்த்துப்போகச் செய்ய முழுமூச்சாக செயற்படுகின்றது.

குறிப்பாக குறித்த படுகொலைகளுக்கு துர்வு கொடுப்பதில் தாம் உன்னிப்பாக இருப்பது என்பதை காட்டுவது போல ஒரு மாயை உருவாக்கி தமிழ் மக்களின் அழிவுகளை மூடி மறைக்க முயற்சிக்கின்றது.

அது மட்டுமல்லாது சர்வேச விசாரணை அல்லது போர் குற்ற விசாரணை தேவையற்ற விடயம் என்பதை சர்வதேசத்திற்கு காட்டுவதற்கு முயற்சிக்கின்றது.

அந்த முயற்சிக்கான ஒரு நகரவாகவே இந்த நட்புறவு கொண்டாட்டம் மேற்கொள்வதாக தெரிகின்றது. இது அனுர அரசன் ஒரு சதித்திட்டமாகவே இருக்கின்றது.

ஆகவே எதிர்காலம் 23ஆம் திக்தி தென் இலங்கையிலிருந்து வரவுள்ளவர்களுடன் இங்குள்ள அனுர அரசின் எடுபிடிகளின் முயற்சிக்கு எமது மக்கள் உடன் போகக்கூடாது.

அன்றைய நாளை கறைபடிந்த நாளாக நாம் அனைவரும் கறுப்புக்கொடி கட்டி துக்கத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துவோம் என்றும் தெரிவித்திருந்தார்.

செம்மணி மனித புதை குழி விவகாரம்: சர்வதேச விசாரணை கோரி அவுஸ்திரேலியாவில் போராட்டம்!

518394113 1189928633176138 1126587410365998894 n செம்மணி மனித புதை குழி விவகாரம்: சர்வதேச விசாரணை கோரி அவுஸ்திரேலியாவில் போராட்டம்!

செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் என அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பேரணியின் போது ஈழத் தமிழர்கள் ஐநா மற்றும் வெளிநாடுகளின் தூதரகங்களிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை செம்மணிமனித புதைகுழிகள் மூலம் மீண்டும் தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத் தமிழர்கள் இது குறித்த கவனத்தை ஈர்க்கும் விதத்தில்   பேரணியொன்றை முன்னெடுத்தனர்.

இந்த மனித புதைகுழிகள் தனியானதொரு சம்பவம் இல்லை,அமைதியான விதத்திலும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலையிலும் தொடரும் இனப்படுகொலையின் ஒரு பகுதியே இந்த மனித புதைகுழிகள்.

அவுஸ்திரேலியாவிற்கான ஐநா தூதரகத்தின் முன்னாள் ஆரம்பமான பேரணி  ஐநா அலுவலகங்களை நோக்கியும் பல தூதரங்களை நோக்கியும் சென்றது.

ஐநா அலுவலகத்திடமும் உலக நாடுகளின் தூதரங்களிடமும் தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் உறுதியான நடவடிக்கை மற்றும் நீதியை கோரும் மகஜர்களை கையளித்தனர்.

காஸாவில் உணவுக்காக காத்திருக்கும் சிறுவர்களை கொலை செய்யும் இஸ்ரேல் – உலக நாடுகள் கடும் கண்டனம்

காசா யுத்தம் தொடர்பில் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ள 25 நாடுகள்  யுத்தத்தை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரிட்டன் ஜப்பான் கனடா அவுஸ்திரேலியா உட்பட 25 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

காசா மக்களின் துயரங்கள் முன்னர் இல்லாத அழவிற்கு தீவிரமடைந்துள்ளன  என தெரிவித்துள்ள அவர்கள்அடிப்படை தேவைகளான உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் உட்பட  பொதுமக்கள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்படுவதையும்,மிகச்சிறிய அளவில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதையும் கண்டித்துள்ளனர்.

மனிதாபிமான உதவி பொருட்களை பெற முயன்ற 800 பொதுமக்கள் கொல்லப்பட்டமை பயங்கரமானது என தெரிவித்துள்ள 25 நாடுகளும் இஸ்ரேலிய அரசாங்கம் மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு பயன்படுத்தும்முறை ஆபத்தானது இது ஸ்திரமின்மையை உருவாக்குவதுடன் காசா மக்களின் மனிததன்மையை பறிக்கின்றது என தெரிவித்துள்ளன.

காணி வர்த்தமானியை இரத்து செய்து மக்களுடையதென உறுதி செய்யுங்கள்: மயிலிட்டி காணி தொடர்பில் வெளியான அறிவிப்பு

வலி வடக்கு காணி உரிமம் தொடர்பில் இலங்கை அரசால் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி உடனடியாக இரத்துச் செய்யப்பட்டு மக்களின் காணி நிலங்கள் மக்களுக்குரியதென்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மனித உரிமை செயற்பாட்டாளரும் குறித்த விடையத்தின் ஏற்பாட்டாளருமான யே.யாட்சன் பிகிறாடோ வலியுறுத்தியுள்ளார்.

இராணுவத்தின் பிடியிலுள்ள வலி வடக்கு காணிகளை விடுவிக்கக்கோரி,இன்று காணிகளை இழந்த வலி வடக்கு மக்களினால் ஊடக சந்திப்பு ஒன்று யாழ் பாடி தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதன்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்னமும் 2808 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக தெல்லிப்பளை பிரதேச செயலகம் தெரிவிக்கின்றது. ஆனால் யாழ.மாவட்டச் செயலகம் 2800 ஏக்கர் நிலம் என்று தெரிவிக்கின்றது.

இவ்விரு அரச நிறுவனங்களும் முதலில் ஒரு சமநிலையில் தகவல் பதிவை கொண்டிருக்க வேண்டும். அதேவேளை மாவட்ட செயலர் எதேச்சத்தனமாக தகவல்களையும் வழங்கக் கூடாது.

இதேநேரம் 2013 ஆம் ஆண்டு இது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 6317 ஏக்கர் நிலம் இராணுவத்தின் பிடியில் இருப்பதாக என்று கூறியிருந்தது. அத்துடன் அவை அனைத்தும் அரச காணிகள் என்றும் தெரிவித்தது. இதேவேளை கடந்த ஆட்சியாளர்களால் பல ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட்டன.

அதேபோன்று வீதிகள், ஆலயங்கள் என்றும் மக்களிடம் கையளிக்கப்பட்டன. ஆனால் இந்த வர்த்தமானியின் பிரகாரம் இன்னமும் அரச காணிகளாகவே மக்களின் காணிகள் இருக்கின்றன. எனவே குறித்த வர்த்தமானியை உடனடியாக இரத்து செய்யவேண்டும்.

இதற்கு இன்றைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இரத்துச் செய்தால் மடுமே மக்களின் காணி மக்களுக்குரியதாகும். இல்லையேல் அவை சட்டவிரோதமானவையாகவே இருக்கும்.

அதன்படி காணிகளை விடுவிப்பதுடன் இவ்வளவு காலமும் அக்காணிகளை வைத்து விவசயம் உள்ளிட்ட நடவடிக்கைகளை செய்வதற்கான குத்தகை இழப்பீடும் உரிய நபர்களுக்கு வழங்குவதுடன் வர்த்தமானியையும் இரத்துச்செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.