Home Blog Page 78

தோட்டத் தொழிலாளர்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை – மனோகணேசன்

வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 1700 ருபா சம்பள அதிகரிப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அதனால் தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் கைவிட்டுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற வேலையாட்களின் வரவு செலவுத்திட்ட நிவாரணப்படி திருத்த சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதன  திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு  மேலும் உரையாற்றுகையில்,

நாட்டின் பிரதான தொழிலாளர்களான தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் கைவிட்டுள்ளது. அவர்களுக்காக கவலைப்பட்டு கதைக்கின்றார்களே தவிர அவர்களின் தேவைகள் எதுவும் நிறைவேற்றுவதில்லை.  வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி உரையாற்றுகையில் தோட்ட தொழிலானர்களுக்கு 1700 ருபா வழங்கப்படும் என தெரிவித்தார். ஆனால் அவ்வாறு எதுவும் அதிகரிக்கப்படவில்லை. ஒருசில கம்பனிகள் வழங்குவதாக தெரிவித்தாலும் அது வழங்கப்படவில்லை.  நாட் சம்பளமே அவர்களுக்கு வழங்கப்படுவதால்,  திட்டமிட்டு அந்த மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அதனால் இதுதொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் சம்பள சபை தொடர்பில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எமது தமிழ் முற்போக்கு கூட்டணி அந்த சபையை பிரதிநிதித்தும் செய்வதில்லை. அரசாங்கம் அதில் இருக்கிது. அதேபோன்று சி.டபிள்யூ.சீயும் அதில் இருக்கிறது. அதனால் இதன்  மூலம் தோட்ட  தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. தோட்த்தில் முறை மாற்றம் ஒன்றை மேற்கொண்டு, தாேட்டத் தொழிலாளர்களையும் பங்காளிகளாக்க வேண்டும். அந்த மக்களின் வருமான்ததை அதிகரித்துக்கொள்ள திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும். அதுதொடர்பில் கலந்துரையாட நாங்கள் தயாராக இருக்கிறோம். சம்பளம் அதிகரித்து மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற முடியாது.

மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு 2200 ருபா வழங்க வேண்டும் என்றே சம்பள நிர்ணய சபையில் தெரிவித்திருந்தது. அது கிடைக்கிறதா, இருந்த அரசாங்கங்களுக்கும் அதனையே தெரிவித்து வந்தீர்கள். அதனால் நாங்கள் தெரிவிப்பது, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு அல்ல. அவர்களை பங்காளிகளாக்க வேண்டும். அதுவே எமது நிலைப்பாடு.அதனால் முறைமாற்றம் ஒன்றை மேற்கொள்தன் மூலமே தோட்டத்துறையை முன்னேற்ற முடியும். அவ்வாறு இல்லாமல் முதலாளிமாருடன் கலந்துரையாடி ஒருபோதும் தோடத்துறையை அபிவிருத்தி செய்ய முடியாது. அவர்கள் நல்லவிடயங்களுக்கு ஒருபோதும் இணங்குவதில்லை என்றார்.

“மக்கள் மேலான போரை” 1983 யூலையில் ஈழத்தமிழர்கள் மேல் பிரகடனப்படுத்திய சிறிலங்காவே பிரிவினைவாதி பயங்கரவாதி -சூ.யோ. பற்றிமாகரன்

எதிர் வரும் யூலை 23ம் திகதியுடன் 1978ம் ஆண்டு அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம்நிறைவேற்று அதிகாரமுள்ள சிறிலங்காவின் அரசுத்தலைவராக தன்னை வெளிப்படுத்திய ஜே. ஆர்.ஜயவர்த்தனா, ஈழத்தமிழர்கள் மேல் போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என பகைநாடொன்றுடன் போர் பிரகடனம் செய்வது போல் போர்ப்பிரகடனம் செய்து “மக்கள் மேலான போரை” 1983 யூலையில் பிரகடனப்படுத்தி 42 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
சிறிலங்காவின்  நிறைவேற்று  அதி காரமுள்ள அரசுத் தலைவராக 1978 முதல் பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரானஜேஆர். ஜயவர்த்தனா, அன்று முதலே தனது அமைச்சர்களுடன் இணைந்து மக்கள் மேலான இந்தப் போருக்கு ஆயத்தம் செய்தார் என்பது வரலாறு.
1979 இல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் சிறிலங்காப் படையினர் தாம் சந்தேகிக்கும் ஈழத்தமிழரைக் கண்ட இடத்தில் சுடவும், சுட்ட இடத்தில் எரிக்கவும் சட்டத்தகுதியை உருவாக்கினார். 11.07.1979 இல் தன்னுடைய மருமகனும் சிறிலங்காவின் பிரிகேடியருமான வீரதுங்காவை யாழ்ப்பாணத்துக்கான இராணுவத் தளபதியாக நியமித்து, அவசரகால நிலையையும் பிறப்பித்தார்.
இதன்  விளைவாக, இன்பம் செல்வரத்தினம் என்னும் இரண்டு தமிழ்ச் செயற்பாட்டாளர்களைப் படையினர் கைது செய்து மண்டைதீவு சந்தியில் இனப்படுகொலை செய்து போட்டதோடு, ஆறு தமிழ் இளைஞர்களைக் கைது செய்த பின்னர் உயிரோடு உள்ளனரா இல்லையா என்ற விபரம் இல்லாமல் செய்தனர்.
ஜயவர்த்தனா தனது உறவினரான பிரிகேடியர் கொப்பே கடுவவை 1979 டிசம்பருக்குள் யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் விழிப்புணர்வுள்ள இளையவர்களையும் கொன்றழிக்கும் கட்டளையுடன் யாழ்ப்பாணத்து க்கு  அனுப்பினார். ஆயினும், அந்த கொன்றழிப்புக் கால எல்லையுள்ள கடிதத்தின் ஒளிப்பிரதியை தமிழீழ விடுதலைப்புலிகள் கவர்ந்து வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு அனுப்பி வைத்த உத்தியினால், அந்த இனப்படுகொலைத் திட்டத்தை ஜே. ஆர். மாற்றிக் கொண்டார்.
அதே வேளை, அவரின் அமைச்சரான சிறில் மத்தியூ, 1970கள் முதலே ஈழத்தமிழின அழிப்புக்கான பல செயற்திட்டங்களை உருவாக்கி வந்தார். அதில் ஒன்றாக திட்டமிடப்பட்டதுதான் 1983 யூலையில் வாக்காளர் பட்டியலில் இருந்து தயாரித்த இனஅழிப்புக்கான பாதைவரைபுடன், கொழும்பில் வாழ்ந்த ஈழத்தமிழர்களின் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், அனைத்தையும் கொள்ளையடித்து எரிக்கும் ஈழத்தமிழர் பொரு ளாதார உட்கட்டுமானங்களை அழிக்கும் திட்டம்.
இதனுடன் சேர்த்து, ஈழத்தமிழரை ஈவிரக்கமின்றி நடுத்தெருவில் பட்டப்பகலில் சிங்களக் கூட்டத்தினர் கூடி உயிருடன் எரித்த கொடூரங்கள். ஜே. ஆர். ஜயவர்த்தனாவின் வதிவிடத்துக்கு அண்மையிலேயே சைக்கிளில் சென்ற தமிழரை நிர்வாணமாக்கி பெற்றோல் ஊற்றி எரித்து, அவர் நெருப்பில் துடிக்கையில் கத்திகளால் வெட்டி வெட்டி மகிழ்ந்த கொடு மையைச் செய்தனர். வானில் பயணித்துக் கொண்டிருந்தவர்களை உயிரோடு கொளுத்தி எரித்தமை போன்ற எத்தனையோ கொடூரங்களால் கொழும்பு எரிகாடாக காட்சியளித்தது.
சிறிலங்கா அரசாங்கம் சிறைப்பிடித்து வைத்திருந்த ஈழத்தமிழர்களின் செயற்பாட்டாளர் கள் 53 பேரைச் சிறையினுள்ளேயே இனப் படுகொலை செய்த வரலாறும் பதிவாகியது. இந்தச் சிங்கள பயங்கரவாதிகள் பயணிப்பதற்கான வாகனங்கள், எரிப்பதற்கான எரிபொருட்கள் அனைத்தும் அரசாங்க வாகனங்களாகவும், அரசாங்க எண்ணெய்க்கு தங்களில் இருந்து வழங்கப்பட்டதாகவும் அமைந்தது, எவ்வளவு தூரத்துக்கு யூலை ஈழத்தமிழர் இனஅழிப்பை ஜே. ஆரும் அவருடைய அமைச்சர்களும் திட்டமிட்டு நிறைவேற்றினர் என்பதற்கான சான்றுகளாயின.
இந்த மக்கள் மேலான போரின் ஒரு அங்கமாகவே, 6வது அரசியல் சட்டத்தை ஜே. ஆர். உருவாக்கி, ஒரு கட்சி ஆட்சி முறையுள்ள நாடாக இலங்கையை மாற்றினார் என்பது அனைத்துலக ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அந்த வகையில், ஜே. ஆர். தலைமையிலான சிறிலங்காவே இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வந்த ஈழத்தமிழர்களிடம் இருந்து சிங்கள நாடாகச் சிறிலங்காவை பிரிவினை செய்தார் என்பது வரலாறு. ஆனால், அன்றிலிருந்து இன்று வரை, சிறிலங்காவும் அதன் ஆதரவு வல்லாண்மைகளும் மேலாண்மைகளும், ஈழத்தமிழர்களின் இருப்பைப் பாதுகாக்க முயன்ற தமிழீழ விடுதலைப் புலிகளையே பிரிவினைகோரினார்கள் என வர லாற்றுத் திரிபு செய்து வருகின்றனர்.
அவ்வாறே பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை இனஅழிப்பு செய்து, ஒரு இலட் சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்களை 27 அகதி முகாம்களில் புகலிடம் பெற வைத்து, இலங்கை முழுவதும் தமிழர்களை இனஅழிப்பு செய்த இந்த சிறிலங்காவின் மக்கள் மேலான போரின் பயங்கரவாதத்துக்கு எதிர் விளைவாக, ஈழத்தமிழர்களின் தேசியப் பாதுகாப்புக்குப் பொறுப்பாக மக்கள் போராட்டம் என்னும் கொரில்லா போர்முறை வழி இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள், மரபுவழிப் படையாகச் சீருடை அணிந்த முப்படைகளையும் உருவாக்கிய வரலாற்று நிகழ்வு உள்ளது.
இதனையும் சிறிலங்காவும் அதன் ஆதரவு நாடுகளும் தமிழீழ விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என வரலாற்றுத் திரிபு செய்து உண்மையை மறைத்து வருகின்றனர். 1983 சிறிலங்காவின் ஆடி இனஅழிப்பின் பொருளாதார இழப்பு பெறுமதி 29 மில்லியன் அமெரிக்க டொலர்கள். ஆனால், 1983 ஜனவரி முதல் யூலை வரை, சிறிலங்கா படைகள் ஈழத்தமிழர்களின் தாயகமாகிய இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்படுத்திய பொருளாதார இழப்பு 706 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
அதே நேரத்தில், யூலை 1983க்குப் பின்னர் 1988 டிசம்பர் வரை, வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் சிறிலங்காப் படைகள் ஏற்படுத்திய பொருளாதார இழப்பு 385 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இந்தப் புள்ளி விபரங்களை ஜோன் எம். ரிச்சர்ட்சன் மற்றும் எஸ். டபிள்யூ. ஆர். தி. ஏ. சமரசிங்க இணைந்து வெளியிட்ட “சிறிலங்காவின் இனமுரண்பாட்டின் பொருளாதார பரிணாமத்தை அளவிடல்” என்ற ஆய்வுக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.
இவை சிறிலங்காவின் மைய நோக்கம், ஈழத்தமிழர்களின் அனைத்து உட்கட்டுமானங்களை யும் உயிர்வாழ்தலையும் அழிக்கும் நோக்கம் என்பதைத் தெளிவாக்குகிறது. இதனை உறுதிப் படுத்தும் ஜே. ஆர். ஜயவர்த்தனாவின் வாய்மொழிச் சான்றாக, இலண்டனின் டெய்லி டெலிகிராப்புக்கு 11.07.1983இல் ஜே. ஆர். அளித்த பேட்டியில் அவர் கூறிய, “நான் தமிழர்களின் அபிப்பிராயம் குறித்து கவலைப்பட மாட்டேன். எங்களுக்கு இப்பொழுது அவர்களை நினைக்க முடியாது.
அவர்களது உயிரையோ அவர்களது கருத்துக்களோ குறித்து எங்களுக்கு அக்கறை யில்லை. எவ்வளவுக்கு வடக்கில் அழுத்தங்களை ஏற்படுத்துகின்றோமோ, அவ்வளவுக்கு இங்கு சிங்கள மக்கள் மகிழ்ச்சி அடைவர். உண்மையில், நான் தமிழர்களைப் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சி அடைவர்” என்ற அவரின் வார்த்தைகள் உள்ளன.
இவ்விடத்தில், 1979இல் ஜே. ஆரால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட அவரின் மருமகன் ரணில் விக்கிரமசிங்காவும் அல் ஜசீராவில் கடந்த ஆண்டுப் பேட்டியில், “ஈழத்தமிழர்களுக்கு பலஸ்தீனியர்களுக்கு நாடுகள் ஆதரவாக இருப்பது போல இல்லை, இதனால் நாங்கள் பலஸ்தீன மக்களை ஆதரிப்பது போல ஆதரிக்க மாட்டோம்” என்று கூறியதை நினைத்துப் பார்க்கையில், சிங்களத் தலைமை என்றுமே பிரிவினையாளராகவும் பயங்கரவாதிகளாகவுமே தொடர்வர் என்பது உறுதியாகிறது.
இதனை அனைத்துலகிலும் வாழும் ஈழத் தமிழர்கள் உலக மக்களுக்குத் தெளிவுபடுத்தி, யார் உண்மையான பிரிவினைவாதிகள், யார் பயங்கரவாதிகள் என்பதை அவர்கள் தெளிவு பெறச் செய்ய வேண்டும்.

கறுப்பு யூலைக்கு பொறுப்புக்கூறலை மடைமாற்றும் ஜே.வி.பி.யின் செயற்பாடே ‘சகோதரத்துவ தினம்’: தவிசாளர் நிரோஷ்

தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கம் சகோதரத்துவ நாளாக கறுப்பு யூலை நிகழ்வுகளை மடைமாற்றம் செய்ய எத்தனிக்கின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா  நிரோஷ்   தெரிவித்தார்.
இலங்கையில் தமிழ் மக்கள் அடையாளப்படுத்தப்பட்டு தேடியளிக்கப்பட்ட கறுப்பு யூலை நினைவுகளின் 42 ஆவது ஆண்டினை உணர்வுபூர்வமாக எமது இனம் அனுஸ்டிக்கின்றது.
கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 54 அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறையில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களை வாக்காளர் பட்டியலுடன் தேடிச் சென்று மூவாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களை உயிருடன் தீயில் இட்டும் இதர கொடூரங்களுக்கள்ளாகவும் கொன்றழித்தனர். ஒன்றரை இலட்சம் பேர் வீடற்றவர் ஆயினர். 8 ஆயிரம் வீடுகளும் 5 ஆயிரம் வணிக நிறுவனங்களும் கொள்ளையிடப்பட்டன. அழிக்கப்பட்டன.
 இக்காலகட்டத்தில் 300 மில்லியன் டெலர்கள் அழிக்கப்பட்டன. இதனை பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையம் தமிழருக்கு எதிரான திட்டமிட்ட இனப் படுகொலை என விபரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ் இனப்படுகொலையை அரச இயந்திரமே தகவமைத்து வழிப்படுத்தியது என்பதற்கு சகல ஆதாரங்களும் உள்ளன.
இவ்வாறாக நாட்டில் இனப்படுகொலை நடைபெற்றமைக்கு பொறுப்புக் கூறல் எதையும் முன்வைக்காமல் அத் தேவையினை போர்த்திமூடிவிடும் உத்தியுடன் இன்றைய அரசாங்கம் நிதானமாகச் செயற்படுகின்றது. இப்படுகொலைகளுக்கு ஜே.வி.பியும் பொறுப்புடையது. ஆதலால் அரசாங்கத்தின் மாணவர் அமைப்பான ஜே.வி.பி தலைமைச் செயலகத்திற்குள்ளேயே இயங்கும் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் அமைப்பு ஊடாக அரச அனுசரணையுடன் இன்றைய நாளை சகோதரத்துவ நாள் பிரகடனப்படுத்தப்படுகின்றது.
இதற்காக யாழில் அரச வளங்கள் ஈடுபடுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையினையும் அதற்கான பொறுப்புக்கூறலையும் திட்டமிட்டு மறைக்கின்ற இல்லாமலாக்குகின்ற முயற்சியாகும். இதனை நாம் கண்டிக்கின்றோம். ராஜபக்சாக்களை ஒத்ததாக இன்றைய அரசாங்கம் மென்வலு அணுகுமுறையில் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்ற வழிப்புணர்வை ஏற்படுத்துகின்றோம்.

இராணுவ தேவைக்காக மீண்டும் சுவீகரிக்கப்படவுள்ள காணிகள்!

யாழ்ப்பாணம் – வலி வடக்கில் பல காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டு இருந்தாலும் 2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அது இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய காணியாகவே காணப்படுகிறது என மனிதவுரிமை செயற்பாட்டாளர் ஜட்சன் தெரிவித்துள்ளார்.

வலி. வடக்கில் இராணுவத்தினரின் பிடியில் உள்ள காணிகளின் உரிமையாளர்களின் பிரதிநிதிகள் யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (22) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 2,800 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக மாவட்ட செயலர் கூறுகின்றார். ஆனால் 2808 ஏக்கர் என பிரதேச செயலக தகவல்கள் கூறுகின்றன

ஆனால் 2013ஆம் ஆண்டு வெளியான வர்த்தமானியில் 6,317 ஏக்கர் காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளதாகவும், அவற்றை இராணுவ தேவைகளுக்காக சுவீகரிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னரான கால பகுதியில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கட்டம் கட்டமாக பல பகுதிகளில் உள்ள காணிகள், வீதிகள், ஆலயங்கள் என்பவற்றை மீள மக்களிடம் கையளித்து வந்துள்ளன.

அந்த காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்ட இருந்தாலும் 2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அது இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய காணியாகவே காணப்படுகிறது.

அத்துடன், மக்களின் காணிகளில் இதுவரை காலமும் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெரும் பணம் ஈட்டியுள்ளனர்.

அவர்கள் தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதுடன், காணிக்கான குத்தகை பணத்தினையும் வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.

வவுணதீவு படுகொலை – காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கைது!

வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு காவல்துறைத் துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் கொலை செய்த சம்பவதில் பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை நேற்றுமுன்தினம் CID யினர் கொழும்பில் வைத்து கைது செய்துள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பவத்தை மூடிமறைக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது சுமத்தப்பட்டதை காவல்துறையை கண்டறிந்தனர்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக அப்போது மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் தற்போது கந்தளாய் காவல் நிலையத்தில் கடமையாற்றிவரும் காவல் பரிசோதகர் ஒருவரை சி.ஜ.டியினர் கொழும்புக்கு அழைத்து விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வெலிக்கடை சிறை படுகொலைக்கான புதை குழி குறித்தும் விசாரணை நடத்த வலியுறுத்தல்!

1983 ஆம் ஆண்டு இதே மாதம் வெலிக்கடை சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலும்  அரசு விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் அவர்கள் புதைக்கப்பட்ட  புதைக்குழி எங்கேயுள்ளதெனவும் அரசு  கண்டுபிடிக்க வேண்டும் என  ஜனநாயகத்தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர்  செலவம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற வேலையாட்களின் வரவு செலவுத்திட்ட நிவாரணப்படி திருத்த சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதன  திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு  மேலும் உரையாற்றுகையில்,

இந்த மாதம் .வெலிக்கடை சிறையில் எம்மவர்கள் படுகொலை செய்யப்பட்ட மாதம். தமிழினத்தின் விடுதலைக்காக ,உரிமைக்காக முதலில் ஆயுதம் எடுத்து போராடிய தலைவர் தங்கதுரை, குட்டிமணி போன்றோர் பருத்தித்துறை மணற்காட்டு கடற்கரையில் 1981 சித்திரை மாதம் 5 ஆம் திகதி  இலங்கை  கடற்படையால் கைது செய்யப்பட்டார்கள்.1983 ஜூலை மாதம்  25,27 ஆம் திகதிகளில்   தமிழ் அரசியல் கைதிகள், பொதுமக்கள் என 53 பேர்  கொடூரமாக சிங்கள காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்தப்படுகொலைக்கு பொலிஸ் .சிறை அதிகரிக்க எல்லோரும்  உடந்தையாக இருந்தார்கள். குட்டிமணி உட்பட பலரின் கண்கள் பிடுங்கப்பட்டன.இரண்டு நாட்களாகி இந்த படுகொலைகள் இடம்பெற்ற சூழலில்   தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, ஜெகன்,நடேசதாசன், தேவன்,சிவபாதம் ,ஸ்ரீகுமார்,மரியாம்பிள்ளை,குமார்,குமாரகுலசிங்கம் மற்றும் டொக்டர் ராஜசுந்தரம் உட்பட 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர் .

எனவே 1983 ஆம் ஆண்டு இதே மாதம் வெலிக்கடை சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலும்  அரசு விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் அவர்கள் புதைக்கப்பட்ட  புதைக்குழி எங்கேயுள்ளதெனவும் அரசு  கண்டுபிடிக்க வேண்டும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை அரசு விசாரிப்பதுபோன்று இந்த வெலிக்கடை படுகொலைகளையும் விசாரணை செய்ய வேண்டும் என்றார்.

மின்சார சபை சட்ட மூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்சார தொழிற்சங்கள் பணிப்புறக்கணிப்பு

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை (22) நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன. இதனால் மின்சார சபை அலுவலகங்களில் சேவையை பெற்றுக்கொள்ள வருகைததத்தந்திருந்த பெருமளவான பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.

மேலும் உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டத்தை மீள பெறுமாறு வலியுறுத்தியும் தமது தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு  கோரியும் மின்சார சபையின் 28 தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (22)  கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற உள்ளது.  இந்நிலையில் மின்சார சபையின் 28 தொழிற்சங்கங்களை சேர்ந்த சுமார் 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (22) சுகயீன  விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.  மின்சார சபை  சட்ட மூலத்திற்கு  எதிர்ப்புத் தெரிவித்தும் தமது தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட   நியாயமான கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு  தெரிவித்தும் செவ்வாய்க்கிழமை (22) மின்சார சபை ஊழியர்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் கீழ்  உள்ள மின் சக்தி துறையில் மறுசீரமைப்பைக் கொண்டுவரும் நோக்கில்  கொண்டுவரப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க  இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு சட்ட மூலத்தை திருத்தங்களுடன் மீள நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் தயாராகி வருவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் மின்சார சபை ஊழியர்களின் தொழிலுக்கு ஆபத்து ஏற்படுவதுடன், தமக்கான சலுகைகள் கொடுப்பணவுகள் தொடர்பிலும் பிரச்சினைகள் எழுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபைக்கு முன்பாக ஒன்றுக்கூடிய நூற்றுக்கணக்கான மின்சார சபை ஊழியர்கள் மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தியும், தமது தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட ஒரு சில கோரிக்கைகளை முன்னிறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன்போது அப்பகுதியில் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பொலிஸாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதேவேளை மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையால்  மின்சார சபை  அலுவலக நடவடிக்கைகள் ஸ்தம்பித்திருந்தன. சேவையைப் பெற்றுக்கொள்ள வருகைத்தந்திருந்த பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்ததுடன் பலர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். மேலும் குறிப்பிட்ட சில அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாத்திரம் சேவைகள் வழங்கப்பட்டதுடன், ஆனால் சேவையை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது.

மேற்படி தொழிற்சங்க நடவடிக்கைத் தொடர்பில் இலங்கை மின்சார சபையின்  தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்கத்தின்  பிரதித்தலைவர்  நந்தன உதயகுமார குறிப்பிடுகையில்,

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக  இத்துறைக்குப் பொறுப்பான அமைச்சரை தொடர்பு கொள்ள நாம் முற்பட்ட போதிலும்  அதனால் எவ்வித பயனுமில்லை. நாடு முழுவதும் உள்ள மின்சார சபையின் 28 தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கம் மற்றும் அமைச்சருடன் மாத்திரமே எமக்கு பிரச்சினை உள்ளது. பொதுமக்களுடன் அல்ல.

உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டத்தால் மின்சார ஊழியர்களின் தொழிலுக்கு பாதுகாப்பு இன்றிய நிலை உருவாகியுள்ளது. ஆகையால் எமது நியாயமான கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தினர் செவிசாய்க்க வேண்டும் இல்லையேல் எதிர்வரும் நாட்களில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவும் தயாராக உள்ளோம் என்றார்.

வட்டுக்கோட்டை காவல்துறையினரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை காவல்துறையினரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிக் கோரியும் மூளாய் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்துக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அண்மையில் வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்ததுடன் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் மூளாய் பகுதியில் இடம்பெற்ற மோதல் தொடர்பான விசாரணைகளுக்கு இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அத்துடன், மோதலுடன், தொடர்புடைய பலர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், மதுபானசாலையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தங்களது பகுதியைச் சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மூளாய் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த விடயத்தில் பொலிஸார் உரிய முறையில் செயற்படவில்லை என்றும் இதனையடுத்து பதற்றமான சூழல் ஏற்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘அடுத்த 4 ஆண்டுகளுக்கு தேர்தல் இல்லை’ என்ற கூற்றை தேர்தல்கள் ஆணைக்குழு மறுப்பு

மாகாண சபை தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தரப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்ததாக கூறி, ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, ஜனாதிபதித்தேர்தல், பொதுத்தேர்தல், உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தப்பட்டுள்ள நிலையில், மாகாணசபை தேர்தலும் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தநிலையில், சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கருத்து அரசியல் தரப்பில் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் விளக்கமளித்துள்ள, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவர், தேர்தல்கள் ஆணைக்குழு மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு தயாராகவே இருப்பதாக குறிப்பிட்டார்
எனினும், சட்ட சிக்கல்கள் தடையாக உள்ள நிலையில் அதனை பாராளுமன்றத்தின் ஊடாக நிவர்த்திப்பதாக அரசாங்கமும் உறுதியளித்துள்ளது

இந்த சூழ்நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறித்த கருத்தை வெளியிட்டிருப்பார் என்று, தாம் நம்பவில்லை என அந்த உயரதிகாரி குறிப்பிட்டார். தேர்தல்கள் ஆணைக்குழு என்ற வகையில் தாம் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தத்தை தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

11 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளதாக எச்சரிக்கை

நிதி நெருக்கடி காரணமாக இலங்கை உட்பட சர்வதேச ரீதியாக 11 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் மனிதாபிமான உதவிகளை இழக்கும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஏதிலிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை சுட்டிக்காட்டி, அந்த அமைப்பு இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, இந்த ஆண்டுக்கான 10.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற மொத்த இலக்கில் 23 சதவீதம் மாத்திரமே கிடைக்கப் பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

122 மில்லியன் மக்களின், தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் அவசியமாக உள்ளதெனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தங்களுக்கான நிதி நிலைமை அபாய நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வெளியுறவுகள் துறை பணிப்பாளர் டொமினிக் ஹைட் (Dominique Hyde) தெரிவித்துள்ளார்.

இதன்படி, 11.6 மில்லியன் அகதிகள் மற்றும் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வழங்கும் உதவிகளை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தங்களுக்கான பங்களிப்பை குறைத்துள்ள நாடுகளின் பட்டியலை அவர் வெளியிடாத போதிலும், அமெரிக்காவின் செயற்பாடு இதில் முக்கிய பங்களிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.