Home Blog Page 53

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்: அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கருத்து

1983 முதல் 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போதோ அல்லது 1988-89 மார்க்சிச கிளர்ச்சியின் போதோ இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை துஸ்பிரயோகங்களை விசாரிப்பதில் சிறிதளவு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 இல் உலகநாடுகளில் காணப்பட்ட மனித உரிமை நிலவரம் குறித்த தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்கம் இலங்கை குறித்தும் குறிப்பிட்டுள்ளது.

காணாமல்போதல் கடத்தல் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது-

அரசாங்க அதிகாரிகளால் எவரும் காணாமலாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.கடந்த வருடம் காணாமல்போனவர்கள் அல்லது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என காணாமல்போனவர்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

1983 முதல் 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போதோ அல்லது 1988-89 மார்க்சிச கிளர்ச்சியின் போதோ இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை துஸ்பிரயோகங்களை விசாரிப்பதில் சிறிதளவு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை.

யுத்தகால துஸ்பிரயோகங்கள் விடயத்தில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலும்இபொறுப்புக்கூறல் இன்மையும் இன்னமும் பிரச்சினைக்குரிய விடயங்களாக காணப்படுகின்றன.

யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் இடம்பெற்ற காணாமல்போதலிற்கு தீர்வு காணப்படவில்லை.

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் விசாரணைகள் அரசாஙங்கம் மற்றும் காணாமல்போனோர் அலுவலகத்திடமிருந்து பதில்கள் இன்மை போன்றவற்றில் போதிய முன்னேற்றம் இன்மையால் விரக்தியடைந்துள்ளனர்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் சமர்ப்பித்த அறிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆணை உள்ள போதிலும்இபாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கான நிதி உதவி தகுதியை மதிப்பிடுதல்போன்ற விடயங்களிலேயே கவனம் செலுத்தியுள்ளது.

இந்த அணுகுமுறை குடும்பங்கள் மேலும் ஆதாரங்களை சமர்ப்பிக்கவேண்டிய சுமையை சுமத்தியுள்ளது இது பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் மனக்காயங்களிற்கு உட்படுத்தியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

2008- 2009ம் ஆண்டுகளில் கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டது மற்றும் காணாமலாக்கப்பட்டது தொடர்பான நேவி 11 சம்பவம் தொடர்பில் இதுவரை முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.இதில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கராணகொடவும் தொடர்புபட்டுள்ளார்.

 

35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை!

வீரமுனைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை (12)  மாலை ஆலய பூசையுடன் ஆரம்பமானது.

அம்பாறை மாவட்டத்தில்   35 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய வீரமுனைப் படுகொலை நினைவேந்தலானது வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார்  ஆலயத்திற்கு அருகில்  அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மங்கள விளக்கேற்றல் ஏற்றி வைக்கப்பட்டு 2 நிமிட அஞ்சலி  செலுத்தப்பட்டது.

பின்னர்  படுகொலை செய்யப்பட்டவர்கள் ஞாபகார்த்த தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து ஆலய வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

வீரமுனைப் படுகொலை 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  12ம் திகதி  கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.

குறித்த படுகொலை செய்யப்பட்ட நாளின் 35 ஆம் ஆண்டு  நினைவு நாள் இன்றாகும். சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990   தஞ்சம் புகுந்திருந்தனர்.

இக்காலகட்டத்தில், ஆகஸ்ட் 12 ம் நாளன்று   முஸ்லிம் ஊர்காவல்படையினர் இராணுவத்தின் துணையுடன் இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதாக பதிவுகள் பல உள்ளன.

இதன்போது   400க்கும் அதிகமான தமிழ் மக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள்  குழந்தைகள் உட்பட 55 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இதுவரையில் இல்லை. இவ்வாறு படுகொலை நடந்து அதில் படுகாயமடைந்தவர்கள் அம்பாறை உட்பட பல வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டபோதும் அவர்களும் அங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டு படுகொலைசெய்யப்பட்டனர்.

1990ஆம் ஆண்டு வீரமுனை மக்கள் முற்றாக அங்கிருந்து துரத்தப்பட்டு அக்கிராமத்தினை அபகரிக்க மேற்கொண்ட முயற்சி அன்றைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கோவிந்தன் கருணாகரத்தின் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டு வீரமுனை மக்கள் மீள குடியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்ப பாராளுமன்ற உறுப்பினர்  கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர்  இளையதம்பி சிறிநாத் ,ஞானமுத்து சிறிநேசன் ,மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) காரைதீவு  பிரதேச சபை  தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்,   இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் செயலாளரும் கல்முனை தொகுதி இணைப்பாளருமான அருள். நிதான்சன், சிவில் சமூக செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதீபன், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு செயலாளர் காந்தன் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்  உட்பட ஆலய நிர்வாக குழுவினர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள்  பொதுமக்கள் படுகொலையானவர்களின் உறவுகள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்தியா மீது போர் தொடுப்போம் – பாகிஸ்தான் எச்சரிக்கை

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.

இதில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அதன்பின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி இந்தியா அழித்தது.

இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. இதை இந்தியா ஏற்கவில்லை.

இது தொடர்பாக பாகிஸ்தான் இராணுவ தளபதி அசீம் முனீர் கூறும்போது, சிந்து நதி குறுக்கே இந்தியா அணை கட்டினால் ஏவுகணைகளை வீசி அழிப்போம் என்று மிரட்டல் விடுத்தார். இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் பூட்டோவும் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

சிந்து மாகாண அரசாங்கத்தின் கலாச்சாரத் துறை விழாவில் பிலாவல் பூட்டோ பங்கேற்று பேசியதாவது:-

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்தால் இந்தியாவுக்கு எதிராக மற்றொரு சுற்று போர் தொடுக்கப்படும். சிந்து நதி நீரை பாகிஸ்தானில் இருந்து திருப்பி விடுவது நாட்டின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மீதான தாக்குதல் ஆகும்.

இந்தியப் பிரதமர் மோடி சிந்து நதியின் மீது தாக்குதல் நடத்துவதாக அறிவித்தால், அவர் நமது வரலாறு, நமது கலாச்சாரம் மற்றும் நமது நாகரிகத்தைத் தாக்குகிறார் என்று அர்த்தம். எனவே, ஆபரேஷன் சிந்தூர் போன்ற தாக்குதலை நடத்த நீங்கள் நினைத்தால், பாகிஸ்தானின் ஒவ்வொரு மாகாணத்தின் மக்களும் உங்களுடன் சண்டையிடத் தயாராக உள்ளனர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இது நீங்கள் நிச்சயமாக தோற்கும் ஒரு போராக இருக்கும். போர் ஏற்பட்டால் மோடியை எதிர்கொள்ளும் வலிமை பாகிஸ்தான் மக்களுக்கு உள்ளது. மற்றொரு போர் மூலம் பாகிஸ்தான் அதன் ஆறு நதிகளையும் மீட்டெடுக்க நேரிடும். பாகிஸ்தான் ஒருபோதும் தலைவணங்காது இவ்வாறு அவர் கூறினார்.

ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமைக்கு ஐ.நா. கண்டனம்

இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம்கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என்று கூறியுள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அல் ஜசீராவின் அனஸ் அல்-ஷெரீப் உட்பட ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். ஊடக உரிமைக் குழுக்கள் மற்றும் பல நாடுகள் இந்த தாக்குதலைக் கண்டித்தன.

செய்தி சேகரிக்கும் போது பத்திரிகையாளர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் தீவிர அபாயங்களை கொலைகள் எடுத்துக்காட்டுகின்றன என்று ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார், போர் தொடங்கியதிலிருந்து காசாவில் குறைந்தது 242 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

இதுகுறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மரின் செய்தித் தொடர்பாளரும் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்கள் பாதுகாப்பாக வேலை செய்வதையும் அச்சமின்றி அறிக்கையிடுவதையும் இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Reporters Without Borders அமைப்பும் இதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனிய பத்திரிகையாளர்களை “இராணுத்தினர்” என்று எவ்வித ஆதமாரமும் இன்றி பலமுறை முத்திரை குத்தியுள்ளதாக வெளிநாட்டு பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

“எந்தவொரு நம்பகமான ஆதாரத்தையும் வழங்காமல் பத்திரிகையாளர்களை பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டுவதில் இஸ்ரேல் நீண்டகாலமாக ஆவணப்படுத்தப்பட்ட முறையைக் கொண்டுள்ளது” என்று பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) தெரிவித்துள்ளது.

சர்வதேச செய்தி நிறுவனங்கள் காசாவிற்குள் சுதந்திரமாக செய்தி சேகரிக்க இஸ்ரேலிய அரசாங்கம் அனுமதிக்கவில்லை, எனவே பல ஊடகங்கள் செய்திக்காக காசாவை தளமாகக் கொண்ட செய்தியாளர்களையே நம்பியுள்ளன. இவ்வாறான நிலையில், இந்த தாக்குதல் சம்பவம், உண்மையை வெளிக்கொண்டு வருகின்றமைக்கு எதிராக நடத்தப்பட்ட அடக்குமுறையாகவே பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து படகில் சென்றவர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையில் இருந்து பெண் ஒருவர் கடல் வழியாகப் படகு மூலம் சென்று  தரையிறங்கி தமிழகத்தின் அரிச்சல்முனையில் தஞ்சம் அடைந்துள்ளார்.

மன்னார் மாவட்டம், தலைமன்னார் கிராமத்தில் இருந்து  நேற்று அதிகாலை ஒரு மணியளவில்  அரிச்சல்முனையை மேற்படி பெண் சென்றடைந்துள்ளார்.

அவர் 2 இலட்சம் ரூபா பணம் கொடுத்து படகு மூலம் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் தற்போது மண்டபம் மெரைன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் முக்கிய மாநாடு இலங்கையில்…

உலக சுகாதார ஸ்தாபனத்தினுடைய தென்கிழக்காசிய பிராந்திய குழுவினது 78வது உச்சிமாநாட்டை நடத்துவதற்கு இலங்கை உத்தியோகபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, குறித்த அமர்வில் 11 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.

கொழும்பில் இடம்பெறவுள்ள இந்த மாநாடு, சுகாதார ரீதியாக பிராந்திய அடிப்படையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இலங்கையர்களை இலக்கு வைத்த ஆட்கடத்தல்!

இலங்கையர்களை இலக்குவைத்து, குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஆட்கடத்தல் மையங்களுடன் தொடர்புடைய, ஆட் கடத்தல் நடவடிக்கைகள் குறித்து தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வலையமைப்புகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை மோசடி நடவடிக்கைக்குள் உள்ளீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் இலங்கையர்களே முதன்மையாக இலக்குவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி வேலை வாய்ப்புகள் மற்றும் தவறான நிகழ்நிலை விளம்பரங்களைப் பயன்படுத்தி தொழில் தேடுபவர்களை ஈர்க்கும் செயற்பாடுகளில் புதிதாக ஐந்து மோசடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த மோசடி மையங்களால் இலங்கையர்கள் பலர் அண்மையில் கடத்தப்பட்டுள்ளதாக தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு தெரிவித்துள்ளது.  இந்தநிலையில், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இணையக்குற்ற முகாம்களுக்கு 11 இலங்கையர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களில் குறித்த 11 இலங்கையர்களும் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

‘இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை’ : Volker turk அறிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் ‘இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை’ என்ற தலைப்பில் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker Turk) தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரலின்படி, அமர்வின் தொடக்க நாளில் இலங்கை குறித்த அறிக்கையை உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் சமர்ப்பிக்கவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

அவரது இந்த விஜயத்தின் போது இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியிருந்த அதேவேளை, செம்மணி மனித புதைகுழிக்கும் சென்றிருந்தார்.
இந்தநிலையில் அவரால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த புதிய யோசனையை சமர்ப்பிக்க பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் சமர்ப்பிக்கவுள்ளார்.

காற்றாலை மின் திட்டத்தால் மன்னாரில் பதற்றம்!

காவல்துறை  மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் திட்டத்திற்கான காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கான பாரிய பொருட்கள் ஏற்றி வரப்பட்டு கொண்டிருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால்  பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது.

தற்போது குறித்த வாகனம் மன்னார்  நீதி மன்ற பிரதான வீதியில்  காவல்துறை  பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

மக்கள் பொது அமைப்பினர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளடங்களாக பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் சற்று வரை இந்த போராட்டத்தில் இணைந்திருக்கின்றார்கள்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார்  காவல்துறையினர் குறித்த வாகனத்தை மன்னார் நகருக்குள் கொண்டு செல்ல முயற்சித்த போதும் மக்களின் பலத்த எதிர்ப்பினால் இந்த வாகனம் கொண்டு செல்ல முடியவில்லை. தொடர்ந்தும் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் குறித்த காற்றாலைக்கான உதிரி பாகங்களை ஏற்றிவந்த பாரிய வாகனம் சுமார் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்புடன் மன்னார் நீதிமன்ற பிரதான வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இரண்டு வீதிகளுக்கும் அருகாமையில் அமைதியாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பிரதமரை பதவியிலிருந்து நீக்கும் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக உதய கம்மன்பில கருத்து

பிரதமர் பதவியிலிருந்து ஹரிணி அமரசூரியவை நீக்கிவிட்டு, அந்த பதவிக்கு பிமல் ரத்நாயக்கவை நியமிப்பது குறித்து ஆளுங்கட்சிக்குள் உள்ளக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு நேற்று (11) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ஹரினி அமரசூரிய அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளை அமைச்சரொருவர் திருத்தியிருந்தார்.

பிரதமர் தவறான கருத்துகளை தெரிவித்திருந்தால் ஜனாதிபதியே அதனை திருத்த வேண்டும்.
எந்தவொரு நாட்டிலும் கனிஷ்ட அமைச்சரொருவர் பிரதமரின் கருத்துகளை திருத்திய வரலாறுகளை காணமுடியாது என்று உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தற்போது ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஜே.வி.பியின் பிமல் ரத்நாயக்கவை அந்த பதவிக்கு நியமிக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. எனவே,ஜே.வி.பியின் தலைவர்கள் ஹரிணி அமரசூரிய தொடர்பில் அவதூறுகளை பரப்பி, அவரை உளரீதியாக பலவீனமடையச் செய்து, தாமாகவே பதவி விலகும் நிலைக்கு அவரை கொண்டுவருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.