இலங்கையர்களை இலக்குவைத்து, குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஆட்கடத்தல் மையங்களுடன் தொடர்புடைய, ஆட் கடத்தல் நடவடிக்கைகள் குறித்து தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வலையமைப்புகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை மோசடி நடவடிக்கைக்குள் உள்ளீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் இலங்கையர்களே முதன்மையாக இலக்குவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி வேலை வாய்ப்புகள் மற்றும் தவறான நிகழ்நிலை விளம்பரங்களைப் பயன்படுத்தி தொழில் தேடுபவர்களை ஈர்க்கும் செயற்பாடுகளில் புதிதாக ஐந்து மோசடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த மோசடி மையங்களால் இலங்கையர்கள் பலர் அண்மையில் கடத்தப்பட்டுள்ளதாக தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இணையக்குற்ற முகாம்களுக்கு 11 இலங்கையர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களில் குறித்த 11 இலங்கையர்களும் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



