Home Blog Page 36

ரணிலின் கைது தொடர்பில் இராஜதந்திரிகள் பேசவில்லை: அரசாங்கம் தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை  தொடர்பில்  எந்தவொரு இராஜதந்திரயோ அல்லது இராஜதந்திர நிறுவனமோ  எவ்வித நிலைப்பாட்டையும் வெளியிடவில்லை என சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (27) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதியொருவர் உள்நாட்டுக்குள் மரண வீடொன்றுக்கு செல்வதற்கும் வேறு இடங்களுக்குச் செல்வதற்கும் , வெளிநாடொன்றுக்கு பிரத்தியேக விமானத்தில் செல்வதற்கும் வேறுபாடு உண்டு.

எனவே இவை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்த முடியாது. அரச உத்தியோகத்தர்களுக்கு கூட அரச வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு சில வரைமுறைகள் காணப்படுகின்றன. சுற்றறிக்கை ஊடாகவும் அது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்மை பொது சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலாகும்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இது தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் வழக்கு விசாரணைகளின் போது மருத்துவ காரணிகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு பிணை வழங்குவதற்கும், சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கும் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்மானிக்கப்படும். இது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதாக எண்ணுபவர்கள் மேன்முறையீடுகளின் ஊடாகவும் தமக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கை வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டம் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்படவில்லை. அதிகாரத்தின் அடிப்படையில் சட்டம் வேறுபாட்டுடனேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறான நிலைமை இல்லை என்பது இந்த வழக்கின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனவே இது அரசியல் பழிவாங்கலோ, தனிப்பட்ட பழவாங்கலோ அல்லது ஏகாதிபத்திய அரசியலமைப்பு நடைமுறையோ அல்ல.

அரசியலமைப்பு ரீதியிலான ஏகாதிபத்தியத்துக்குச் செல்வதெனில் முதலில் அரசியலமைப்பில் அதற்கமைய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். 2020இல் அவ்வாறான நிலைமைகள் காணப்பட்டன.

இதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளமை அரசாங்கத்துக்கு எந்த வகையிலும் சவால் அல்ல. இவர்கள் அனைவரும் யார் என்பதை மக்கள் தற்போது புரிந்து கொண்டிருப்பர். எனவே எமக்கு மகிழ்ச்சியான விடயமே.

விசாரணைகளுக்கமையவே சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். இந்த வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனை குறித்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்கும்.

பொது சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துகின்றமை சட்டத்தை மீறும் செயலாகும். அது எவ்வாறு அரசியல் பழிவாங்கலாகும்? பொது சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டால் அவர்களுக்கு எதிராக தகுதி தராதரம் பாராமல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த விவகாரத்தில் எந்தவொரு இராஜதந்திரயோ அல்லது இராஜதந்திர அமைப்போ எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. ஒரு சில நபர்களே அவ்வாறு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர் என்றார்.

நான்காவது பெரிய மனிதப் புதைகுழியாக கொழும்பு மனித புதை குழி அடையாளம்…

இது வரையில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகளின் அடிப்படையில், நாட்டின் நான்காவது பெரிய மனிதப் புதைகுழியாக கொழும்பு மனித புதை குழி  மாறியுள்ளது.

தற்போதைய அரசாங்கம் போதுமான நிதியை வழங்கத் தவறியதால் ஆரம்பத்தில் அகழ்வுப் பணிகள் தாமதமான கொழும்பு துறைமுக மனித புதைகுழியிலிருந்து குறைந்தது 88 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு முடிவடையும் தருவாயில் இருப்பதைக் காண முடிந்ததாக கடந்த வாரம் புதைகுழியைப் பார்வையிட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிய அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்காக பூமியைத் அகழ்ந்தபோது ஜூலை 13, 2024 அன்று அந்த பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னர், கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்கவின் உத்தரவின் பேரில், செப்டெம்பர் 5, 2024 அன்று அந்த இடத்தில் அகழ்வாய்வு பணிகள் ஆரம்பமாகின.

அண்மையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார, இலங்கையில் 17 மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முதன்முறையாக வெளிப்படுத்தியிருந்தார். அவை குறித்த பெயர் விபரங்களையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியாக தற்போது அகழ்வாய்வுப் பணிகள் இடம்பெற்று வரும் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி பதிவாகியுள்ளது. அந்த புதைகுழி வளாகத்தில் இருந்து குழந்தைகள் உட்பட 166 பேரின் எலும்புக்கூடுகள் (ஓகஸ்ட் 26 வரை) அடையாளம் காணப்பட்டுள்ளன.

2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

ஐந்தாவது பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழியாகும். அங்கு 2013 இல் 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு பணிகள் நிறைவடைந்த நேரத்தில், 52 நபர்களின் எச்சங்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அரசியல் கைதிக்கு பிணை வழக்கப்பட்டும் தொடர்ந்து சிறையில் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தன், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த யூலை மாதம் (07) பிணை வழக்கப்பட்டும் தற்போது தொடர்ச்சியாக சிறையில் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்கள்.

2024 மார்ச் மாதம் விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் முகநூலில் பதிவுகள் இட்டதாகக் கூறி பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் முகநூல் பதிவு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் கடந்த யூலை மாதம் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார் என செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால் பிணை வழங்கப்பட்ட அன்றையதினமே வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு விசாரணை இடம்பெற்ற நிலையில் 25.07.2025 அன்று வேறு வழக்கு திகதியிடப்பட்டு அந்த வழக்கு 05.08.2025 திகதி இடம்பெற்ற நிலையில் மீண்டும் சிறையில் இருந்து விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அரசியல் தலைவர்கள் அல்லது அரசியல் தலைமைகள் கவனத்தில் கொண்டு விடுதலை செய்ய முன்வர வேண்டும் என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கிழக்கில் தமிழ்மக்கள் மீது ஜிகாத் மேற்கொண்ட  இனப்படுகொலை – ஜெகதாஸ் அடிகளார்

1990 செப்டம்பர் 9ஆம் திகதி மமட்டக்களப்பு சத்துருகொண்டானில் மிகப்பெரிய இனப் படுகொலை நடைபெற்றது. சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி,பனிச்சையடி, கொக்குவில்  கிரா மங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் அன்று மாலை சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் ஜனாதிபதி ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.
கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைக ளும் அடங்கியிருந்தன. எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்திருந்தார். இச்சம்பவத்தில், 8வயதுக்கு உட்பட்ட 68 சிறுவர்கள் படு கொலை செய்யப்பட்டிருந்தனர். கொல்லப்பட் டவர்களில் 80க்கு மேற்பட்டவர்கள் பெண்கள்.
இவர்கள் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட் டதாக கூறப்படுகிறது.
25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப் பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர்.
இந்த படுகொலையில் இராணுவத்துடன் முஸ்லீம் ஊர்காவல்படையும் இனப்படுகொலை புரிந்தனர் என்பது பின்னர் தெரியவந்தது. காயங்களுடன் தப்பி சென்ற சிவகுமார் என்ற இளைஞரை இராணுவம் தேடிய போது மட் டக்களப்பு மக்கள் குழுவும் ஆயர் இல்லமும் அவரை மறைத்து வைத்து வைத்தியம் செய்து காப்பாற்றியிருந்தனர். இதன் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் இந்த படுகொலைகள் பற்றி சாட்சியமளித்திருந்தார்.இந்த கொலையை விசாரிப்பதற்கு என ஓய்வு பெற்ற நீதியரசர் பாலகிட்ணர்
தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்  குழுவில் பெறப்பட்ட சாட்சியங்கள் விசாரணைகள் அடிப்படையில் அக்காலத்திற்கு இராணுவத்திற்கு மட்டக்களப்பில்  பொறுப்பாக இருந்த கப்டன் பாசூரிய, கப்டன் ஹெரத் விஜயநாயக்க கேணல் பேர்சி பெனா ன்டோ ஆகியோர் இக்கொலையுடன் தொடர்பு பட்டிருக்கிறார்கள் இவர்களை விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என நீதியரசர் பாலகிட்ணர் பரிந்துரை செய்திருந்தார்
பலபேருக்கு இந்த வரலாறு தெரிய வாய்ப் பில்லை பொறுமையாக வாசித்துப் பாருங்கள்  (நினைவூட்டல்)
“ஜிகாத்’ முஸ்லிம்  ஊர்காவல் படையினர், சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்ய ஆரம்பித்த மறவா வடுக்கள்.
திராய்க்கேணி படுகொலைகள். 1990 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 ஆம் திகதி இலங்கையின் அம் பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை சிறப்பு அதிரடிப்  படையினரின் ( STF) உதவியுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
திராய்க்கேணி கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 70 கிமீ தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.  STF உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம் ஊர்க்காவல் படை அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் முஸ்லிம் ஊர்க்காவல் படையால் தீக்கிரையாக்கப்பட்டன.
சரோஜா என்ற 13 வயதுச் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக் கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலைச் சம்பவம்  மதியம்  வரை நீடித்திருந்தது.இப்படு கொலைகளை அடுத்து அக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் காரைதீவு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.
இப்படுகொலைகள் குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல் கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.
2003 அக்டோபர் 12 ஆம் நாள் திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில் மனித எலும்புக்கூடுகள் பலவற்றைக் கண்டுபிடித்தனர். இவை திராய்க்கேணிப் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.இது தொடர்பான விசாரணை கள் எதுவும் இடம்பெறவில்லை.
1990 செப்டம்பர் 9ஆம் திகதி மட்டக்களப் பில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றது.
சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் அன்று மாலை சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சிய மளித்திருந்தார்.
இது போன்று கிழக்கில் பல படுகொலைகள் நடந்தன. சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1990ஆம் ஆண்டு சிறிலங்கா விசேச அதிரடிப்படையினருடன் சேர்ந்து சம்மாந்துறை மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லீம்கள் வீரமுனை தமிழ் மக்களை வெட்டிக்கொலை செய்து அக்கி ராமத்திலிருந்து வெளியேற்றியிருந்தார்கள். அண்மைக்காலத்தில் தான் அவர்கள் மீண்டும் வீரமுனையில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம் ஊர்க்காவல் படையினர் ஈவிரக்கமின்றி வெட்டி கொலை செய்தனர். பெண் களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். கைக்குழந்தைகளை கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர். வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு சில படுகொலைகளை திகதி வாரியாக இங்கே தருகிறேன்.
20.06.1990 வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை அதிரடிப்படை மற்றும் முஸ்லீம் ஊர்க்காவல் படைகளால் 69 தமிழர்கள் படு கொலை
05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படு கொலை.
10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படு கொலை.
16.07.1990 மல்வத்தை இராணுவத்தினரும் முஸ் லீம் ஊர்காவல்படையினருமாக சுமார் 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படு கொலை செய்தனர்.
26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம் ஊர்காவல் படையினராலும் விசேட அதிரடிப் படையி னராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.
29.07.1990 ஆசிரியர் ஒருவர் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய் யப்பட்டு காணாமல் போயினர்.
12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் ஊர்க்காவல் படை குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் கோவில் தர்மகர்த்தா தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்ட னர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்க ளின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரை யாக்கப்பட்டது.
20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற் பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. அயல்
கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ் லீம்களே  சிங்கள இராணு உதவியுடன் இப்படுகொலையினை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்கு தலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி, ஆரையம்பதி, நீலா வனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன.
பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப் படுகின்றன.
தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத் தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம்.
இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர் கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்க ளுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவர்களாகவும் காணப்படு
கின்றனர் . முஸ்லிம் ஊர்க்காவல் படைகளால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்.
1990களில் திறாய்க்கேணி, நிந்தவூலீ, வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் ஊர்க்காவல் படைகளால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக் கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் ஊர்க்காவல் படையினர் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு சிங்கள இராணுவத்துடன் இணைந்து கோரமான கொலை களை மேற்கொண்டு வந்தனர்.
இந்தப் படுகொலையின் உடைய முக்கிய சூத்திரதாரிகளாக செயல்பட்டவர்கள் அன்றைய காலத்தில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறியாட்டத்தின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்ட  இருந்த கொடூர கொலையாளியான கேப்டன் முனாஸ் (இவரின் இயற்பெயர் பிரீஸ் மாட்டின் காலி பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள கிறிஸ்தவர்) மற்றும் மேஜர் ஷக்கி இவர்கள் இருவரும் மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் அமைந்திருந்த சிறைச்சாலை கட்டிடத் தொகுதியில் ராணுவப் புலனாய்வு அலுவலகத்து அமைத்து அங்கு தங்கி இருந்து கிழக்கின்தமிழ் மக்களுக்கு எதிரான  அனைத்து படுகொலைகளையும் திட்ட மிட்டு செயல்படுத்தி வந்தனர்

வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றத் திட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்கள் குறித்து மீளாய்வு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத் திட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களை இந்த வருடத்தின் இறுதிக்குள் நிறைவு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போதே அதிகாரிகளால் வீட்டுத் திட்டச் செயன்முறை தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது. அதற்கமைய, இந்தியா மற்றும் சீனாவின் கடன் உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் வீட்டுத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், கழிவு முகாமைத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, நீர் வழங்கல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளால், ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த காலங்களில் கைவிடப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பது மற்றும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களை விரைவில் நிறைவு செய்வது தொடர்பில் ஜனாதிபதியால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

செம்மணியில் மீண்டும் அகழ்வுகள் ஆரம்பமாகின : புதிதாக 16 என்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாவது அமர்வு நேற்று (25) ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று (26) இரண்டாவது நாளாக அகழ்வுப் பணிகளின் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய, இன்றைய அகழ்வுப் பணிகளின் போது 16 என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன.
சிறுவர்களுடையது என சந்தேகிப்படும் என்புக்கூட்டு தொகுதிகளும், ஆடையை ஒத்த துணியும் வெளிப்பட்டுள்ளதாக இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனிடையே, முன்னதாக இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் போது 147 என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 163ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக வெளிப்பட்ட என்புக்கூட்டுத் தொகுதிகளில் 133 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் மாதம் முன்னாள் ஜனாதிபதிகளின் அரச வீடுகள் திரும்ப பெறப்படும்: ஜனாதிபதி அநுர அறிவிப்பு

செப்டம்பரில் புதிய சட்டம் இயற்றப்பட்டவுடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து அரசு இல்லங்களையும் அரசாங்கம் திரும்பப் பெறும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற தேசிய பிக்குகள் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி,

சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும். நீதித்துறை மீதான பொது நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். நீதியானது செல்வந்தர்களுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தாது என்பதை மாற்றியமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

சட்டம் அனைத்து குடிமக்கள் மீதும் சமமாக அமல்படுத்தப்படும். ஊழல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள், அவர்களின் பதவி அல்லது செல்வாக்கு எதுவாக இருந்தாலும், கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள்.

நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, ​​முன்னாள் தலைவர்களுக்கு ஆடம்பர அரசு வீடுகளை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. 33ஆயிரம் சதுர அடியில் வீடு எதற்கு? கொவிட் தொற்றுக் காலத்தில் அந்த வீட்டை புனரமைக்க 40 கோடியை பெற்றுள்ளனர்.

தியாகங்களைச் செய்யும்படி மக்களைக் கேட்டுக்கொண்டு, தேவையற்ற செலவுகளை மக்கள் மீது சுமத்த முடியாது. முதலிம் நாம் தியாகங்களை செய்ய வேண்டும். தராதரம் பாராது எவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பட்டலந்த, மத்திய வங்கி குறித்தான குற்றச்சாட்டு எனில் எதிராக நாம் குரல் கொடுக்கப் போவதில்லை: மனோ கணேசன்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது பட்டலந்த விவகாரம் அல்லது மத்திய வங்கி மோசடி குறித்தான குற்றச்சாட்டு எனில் அதற்கு எதிராக நாம் குரல் கொடுக்கப் போவதில்லையென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எனினும் இதுவொரு அரசியல் பழிவாங்கலாகும். இங்கிலாந்தின் பல்கலைக்கழகத்திலிருந்து ரணிலுக்கு இலங்கை தூதுவர் ஊடாக பெறப்பட்ட அழைப்பிதழை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு பழிவாங்குவது தவறு, ஜனாதிபதியானதன் பின்னர் அவர் செல்லும் பயணங்கள் அனைத்தும் உத்தியோகபூர்வமானவை, இப்பொழுது உள்ள ஜனாதிபதி அனுரவும் அவ்வாறே. அவருக்கும் அது பொருந்தும்.

இதன் காரணமாகவே நாம் இந்த விடயத்தில் முன்னிற்பதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இதனை புரிந்துகொள்ள வேண்டும். தவறான புரிதலால் இந்த பிரச்சினை ஏற்ப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணை இடம்பெறும் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள், ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை!

தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெறவுள்ள  மாபெரும் போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதியை கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வடக்கில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து செம்மணி  வரையும் கிழக்கில் கல்லடி பாலத்திலிருந்து காந்தி பூங்காவரையும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது.

இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை முல்லைத்தீவு ஊடக அமையத்தில் முல்லைதீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி குறித்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரது  ஆதரவையும் வேண்டி நிற்ப்பதாக தெரிவித்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்கள் தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில்  முன்னெடுக்கப்படும் இந்த மாபெரும் போராட்டங்களில் மதத் தலைவர்கள் அரசியல் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பொதுமக்களையும் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி சர்வதேச நீதியூடாக வழந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளுக்கு நீதி கிடைக்க வழி சேர்க்குமாறு கோரிக்கை விடுத்தார்.

பிணையில் விடுதலையானார் ரணில் !

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கடந்த 22 ஆம் திகதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நோய் நிலைமையை கருத்திலெடுத்த கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்கியுள்ளது.

பொது சொத்து சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (26) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திருமதி நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குற்றப் புலனாய்வுத் பிரிவிலிருந்து சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜரானார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டதரணிகளான திலக் மாரப்பன, அனுஜா பிரேமரத்ன, உப்புல் ஜயசூரிய மற்றும் அலி சப்ரி ஆகியோர்  ஆஜராகியிருந்தனர்.

இன்றைய வழக்கு விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஜராகத நிலையில், சூம் காணொளி தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆரம்பத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நோய் நிலைமை அதிகரித்துள்ளதால் பாரிய உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்த நிலையில், நீதிமன்றம் ரணில் விக்கிரமசிங்கவின் நோய் நிலைமையை கருத்தில் கொண்டு அவரை பிணையில் விடுதலை செய்துள்ளது.