Home Blog Page 34

அநுரவிற்கு – சிறப்புப் படைப் பிரிவு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பு தொடர்பில் விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, அவரது பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவு ஒன்று இணைந்து கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்காக அந்த பிரிவிற்கு விசேட பயிற்சி ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பிற்கு மேலதிகமாக இந்த  சிறப்புப் படைப் பிரிவு ஈடுபடுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐ. நா. பிரதிநிதி குன்லே அடனியி – அமைச்சர் சரோஜா சாவித்திரி இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குன்லே அடனியி (Kunle Adeniyi) மற்றும் மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர்  சரோஜா சாவித்திரி போல்ராஜ் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குன்லே அடனியியின் பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குன்லே அடனியி 2022 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதியாக கடமையாற்றி வருகின்றார்.

குன்லே அடனியி பெண்களுக்கு எதிரான சவால்கள் மற்றும் பாலினம் சார்ந்த வன்முறைகள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றுக்காக பல திட்டங்களை மேற்கொண்டு ஆதரவளித்துள்ளார்.

குன்லே அடனியி இலங்கைப் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பல மகத்தான பணிகளை ஆற்றியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது குன்லே அடனியின் மகத்தான பணிகளுக்கு பாராட்டும் வழங்கப்பட்டது.

வலிந்து காணாமலாக்கப்படல்கள் குறித்த உண்மையைத் தேடுவோருக்கு எதிராக ஒடுக்குமுறைகள்: ஐ.நா

இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைஅறிந்துகொள்வதை இலக்காகக்கொண்டு இயங்கிவரும் உறவுகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகத் தொடர்ந்து ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டுவருவதாகத் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக  வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நடவடிக்கைக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரின் 3 ஆவது பக்க நிகழ்வாக ‘அபிவிருத்திக்கான உரிமை உள்ளடங்கலாக சகல மனித உரிமைகள், சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளைப் பாதுகாத்தலும் மேம்படுத்தலும்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இக்கலந்துரையாடலை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நடவடிக்கைக்குழுவினால் வலிந்து காணாமலாக்கப்படல்கள் விவகாரத்தின் உலகளாவிய நிலைவரம் குறித்து சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கை உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் விவகாரத்தின் மோசமான நிலைவரம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும், கரிசனைகளை வெளிப்படுத்தியும் தமக்குக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதை இலக்காகக்கொண்டு இயங்கிவரும் உறவுகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகத் தொடர்ந்து ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டுவருவதாகத் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்த தமது கரிசனையை தாம் அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்தியிருப்பதாகவும், நாட்டில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பணியாற்றிவரும் ஏனைய மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மீது ஏற்பட்டிருக்கும் தாக்கங்கள் குறித்துத் தெளிவுபடுத்தியிருப்பதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா. வுக்கு செல்லவுள்ள “நீதியின் ஓலம்”!

தமிழ் மக்களின் கையொப்பத்துடன் “நீதியின் ஓலம்” ஐ.நா. வுக்கு செல்லவுள்ளதாக தாயகச் செயலணி அமைப்பின் வடக்கிற்கான இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவித்துள்ளார்.

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து “நீதியின் ஓலம்” கையொப்பப் போராட்டம் கடந்த சனிக்கிழமை(23.08.2025 ) வடக்கு கிழக்கில் ஆரம்பமானது. குறிப்பாக இப்போரட்டத்தின் பிரதான நிகழ்வு மனிதப் படுகொலையின் புதைகுழிச் சாட்சியான யாழ்ப்பாணத்தின் செம்மணியில் ஆரம்பமாகி இன்று(28) முற்பகல் 10.30 மணிக்கு அதே இடத்தில் நிறைவுற்றது.

கடந்த ஐந்து நாட்களாக தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்பட்ட இந்த கையொப்பப் போராட்டத்தின் ஊடாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும் என்பதுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி அகழ்வுகள் தொடர்கின்றன…

யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் நடத்தப்பட்ட ஜி.பி.எஸ் ஸ்கேன் ஆய்வு தொடர்பான முழுமையான அறிக்கை இதுவரை நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த அறிக்கையின் சுருக்கமான அறிக்கை பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டு, மேலதிக அகழ்வுப் பணிக்காக 08 வாரங்கள் கால அவகாசம் தேவை என முன்னதாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஸ்கேன் பரிசோதனைக்கு அமைய குறித்த பகுதியில் வித்தியாசங்கள் காணப்படுவதால் அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனக்கூறி கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 36ஆவது நாளுக்கான அகழ்வுப் பணிகள் இன்று (28) இடம்பெற்றன.

இதற்கமைய இன்றைய தினம் 08 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.
இதுவரை 177 மனித என்புக்கூடுகள் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியிலிருந்து வெளிப்பட்டுள்ளன. அவற்றில் 164 மனித என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தயாரிப்பு தொடர்பான நிபுணர் குழுவின் செயற்பாடுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நிறைவடையவுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

நிபுணர் குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ஆர்.அரசகுலரத்ன இந்த விடயத்தை உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டு நீதி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமைச்சரவையின் அனுமதியுடன் குறித்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.சட்டமூலத்தினூடாக கொண்டு வரப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் மிக விரிவாக ஆராயும் வகையில் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர் குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

தற்போது நாட்டில் அமுலில் காணப்படும் 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு தற்காலிக ஏற்பாடுகளுக்கான சட்டத்தை இரத்து செய்து, புதிய சட்டத்தை இயற்றுவதற்காக குறித்த குழு செயற்பட்டு வருகிறது.

நவீன உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனிநபர்களின் மனித உரிமைகளை உறுதி செய்வதை நோக்காக கொண்டு புதிய சட்டமூலம் தயாரிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரநிலைகளுக்கு இணங்கும் நோக்குடன் புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலம் தயாரிக்கப்படுவதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

”காஸா மக்களை வெளியேற்றுவது தவிர்க்க முடியாதது.” – இஸ்ரேல் திட்டவட்டம்!

காஸாவை விட்டு மக்களை வெளியேற்றுவது தவிர்க்க முடியாதது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. போர் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் முன் வடக்கு காஸாவில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் இராணுவம், தெற்கு காஸாவிற்கு இடம்பெயரும் குடும்பங்களுக்கு அங்கே அதிகமான நிவாரண உதவிகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
காஸாவில் இஸ்ரேல் படைகள் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், வடக்கு காஸாவில் தங்கியிருந்த மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் – தம்பிராசா செல்வராணி

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்  30 ஆம் திகதி  வடக்கு கிழக்கு நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நடைபெறும் சகலரும்  போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்   என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை ஊடக மையத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்  30 ஆம் திகதி  வடக்கு கிழக்கு நடைபெற உள்ள போராட்டம் குறித்து  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 30 ஆந் திகதி  வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.இந்நிகழ்வினை வடக்கில் சங்கிலியன் சிலையிலிருந்து தொடங்கி செம்மணி வரை இப்பேரணி நிறைவடைந்து  அவ்விடத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அதே நாளில்  கல்லடி பாலத்தில் இருந்து போராட்டம்  ஆரம்பித்து காந்தி பூங்கா வரை  ஊர்தி ஊர்வலத்துடன் சென்று  கவனஈர்ப்பு போராட்டம்  காந்தி பூங்காவில் முன்னால் இடம் பெறும்.

இந்தப் போராட்டமானது எட்டு மாவட்டங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்  17 வருட காலமாக  உங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று நாங்கள் நீதி  கேட்டு போராடிக் கொண்டிருக்கிறோம்.

16 வருட காலங்களாக இலங்கை ஆட்சியில் இருந்த பல  ஜனாதிபதிகளுடன்  எங்கள் உறவுகளுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை கேட்டு உண்மையை கூறும் படியும் உங்களது உறவுகளை உயிருடன் கூட்டி சென்று பின்னர் காணாமல் ஆக்கப்பட்டது இவ்வாறு காணாமல் ஆக்கிய சம்பவத்துடன்  இலங்கை இராணுவ  படையினரிடம் கேட்டு கூறுங்கள் என எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை கேட்டிருக்கின்றோம்.

ஆனால்  நாங்கள் இன்று 16 வருடத்தினை உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லாமல் தற்போது  நாங்கள் சர்வதேச பொறிமுறையை நாடி இருக்கின்றோம்.சர்வதேச பொறிமுறைக்கு ஊடாக   எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையையும் நீதியையும் பெற்று தர வேண்டும் என்று நாங்கள் இப்போராட்டத்தில்  கேட்க இருக்கிறோம்.எனவே எதிர்வரும் செப்டம்பர் மாதம்  நடைபெற உள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் எங்கள் உறவுகளுக்கான நீதி அங்கு நிலைநாட்டப்பட வேண்டும்.

அதே நேரம்  எமது  அரசியல்வாதிகள் அனைவரும் சேர்ந்து எங்களது உறவுகளுக்காக அங்கு சென்று  குரல் கொடுத்து இலங்கையில் ஒரு இனப்படுகொலை  இடம்பெற்றது என்ற உண்மையை இந்த உலகத்துக்கு கொண்டு   வர வேண்டும் என்று நான் கேட்டு நிற்கின்றேன்.

அதுமட்டுமல்ல இப்போராட்டமானது நாங்கள் இன்று எமது உறவுகளை தொலைத்து விட்டு வீதியில் நின்று எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது உண்மையை கூறுங்கள். உயிருடன் கொடுத்தவர்கள் எங்கே என்று கத்திக் கொண்டு போராடுகின்றோம்.

இதை விட  இளைஞர் யுவதிகளுக்கு   எதிர்காலத்தில் எதுவும் இவ்வாறு எதுவும் நடைபெற கூடாது என்ற ஒரு ஆதங்கத்திலும்  உணர்விலும் இன்று நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

எனது கணவரை தொலைத்து எங்களது உறவுகளை தொலைத்து வீதியில் நின்று அழுது கொண்டிருக்கும் நாங்கள் . நாளை இங்கு உள்ள  பிள்ளைகளை தொலைத்து நீங்கள் இவ்வாறு வீதியில் இருந்து ஆழக்கூடாது என்பதற்காக நாங்கள் இன்று போராடிக் கொண்டிருக்கின்றோம்.

எங்களுடன் இதுவரை போராடிய 350 உறவுகளை நாங்கள் இன்று இழந்து இருக்கின்றோம் .அந்த ஒவ்வொரு உறவும் தனது பிள்ளை  வருவான் என்றும்  கணவர் வருவார்  என்றும்  எதிர் பார்த்தவர்கள் தான்.

இவ்வாறு இறந்தவர்கள் எவ்வளவு பல கதைகளை எமது போராட்டத்தில்  கூறிக்கொண்டு இன்று இறந்து  விட்டார்கள். மகனே எனது பாடையை தூக்கயாவது  வருவீரா  எனக்கு கடைசி தண்ணீர் ஊற்றயாவது  வந்து விடுடா என்று இவ்வாறு கூறித்தான் அந்த  தாய்மார்கள் இறந்திருக்கிறார்கள். இந்த நிலைமை இன்று உங்களுக்கு வேண்டாம் .

அந்த நிலையில் இருந்து நீங்கள் இன்று மீண்டு வர  வேண்டுமென்றால் இலங்கையில் இனி ஒரு  துயரம்  நடக்காமல் இருக்க வேண்டும்.

எனவே தான்  நீங்கள் அனைவரும் இம்மாத 30ஆந் திகதி  நடைபெற இருக்கின்ற போராட்டத்தில் தோளோடு தோள் நின்று  எங்களுக்கு  ஆதரவு வழங்கி  எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரியும்   வரை இந்த போராட்டத்திற்கு  ஆதரவு  கேட்டு நிற்கின்றோம்.

அது மாத்திரமல்ல எமது இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஊடகவியலாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மதகுருமார் ஆட்டோ சங்கத்தினர் மீனவர் சங்கத்தினர் முதியோர் சங்கத்தினர் அனைத்து பொதுமக்களும் பாதிக்கப்பட்ட தரப்புகளும் எங்களுடன் வந்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும்.

அது மாத்திரமல்ல இன்று எமது ஊடகவியலாளர்கள்  எமது முதுகெலும்பு ஆவர். இன்று எமது ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதை இந்த அரசாங்கம் தடுக்க   நடவடிக்கை எடுக்க வேண்டும்.அண்மையில் கூட முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்  குமணன் அவர்கள் எத்தனையோ மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு  விசாரணை செய்யப்பட்டிருக்கின்றார்.

இவ்வாறான ஊடகவியலாளர்கள் எமது உறவுகளின் பிரச்சினைகள் மாத்திரமல்ல  இலங்கையில் இடம் பெறுகின்ற அனைத்து பிரச்சினைகளையும் வெளிக்கொண்டு வருகின்றவர்கள் ஆகவே இந்த ஊடகவியலாளர்களை  ஏன்   இவ்வாறு தாக்குகின்றீர்கள். அவர்களை தாக்க வேண்டாம் .அவர்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம்.

அவர்களுக்காகவும் நாங்கள் தோளோடு தோள் நிற்போம்.எனவே  இடம்பெறவுள்ள இப்போராட்டத்தில் அனைவரும் ஒன்று கூடி ஆதரவு  தாருங்கள்.இதனூடாக எமது நியாயமான கோரிக்கை சர்வதேசத்தில் கொண்டு செல்வதற்கு சாதகமாக அமையும் என்றார்.

இதே வேளை எதிர்வரும் 30 ஆந் திகதி  இம்மாதம் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டொருக்கான  சர்வதேச நீதியை பெற்றுக் கொடுக்கின்ற  போராட்டம் நடைபெற உள்ளது.

எனவே கடந்த காலத்தில் பல தரப்பினராலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்  உண்மை நிலையை உலகிற்கு எடுத்து கூறி சர்வதேச பொறிமுறை  ஊடாக அதற்கான தீர்வுகளை பெற்று கொள்ளும் நோக்கத்துடன் இப்போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க இருக்கின்றோம் .

எனவே இந்த போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட சங்க ஆலோசகரும்  மனித உரிமை செயற்பாட்டாளருமான  தாமோதரம் பிரதீவன் தெரிவித்தார்.

காசா மாணவர்களுக்கு பிரித்தானியாவில் கல்வி கற்க அனுமதி!

உதவித் தொகை வழங்குவதன் மூலம் காசாவில் உள்ள  40 மாணவர்களுக்கு தமது உயர்கல்வியை பிரித்தானியாவில் தொடர்வதற்கு  பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அந்தவகையில் சுமார் 40 மாணவர்களுக்கு பிரித்தானிய அரசு குறித்த புலமைப்பரிசிலை வழங்கியுள்ளது. இதில், ஒன்பது மாணவர்கள் Chevening திட்டத்தின் கீழ் மாஸ்டர்ஸ் பட்டப்படிப்பை தொடர அரசு உதவியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தனியார் நிதி உதவித்திட்டங்களின் கீழ் முழுமையான உதவித்தொகை பெற்றுள்ள மற்றுமொரு 30 மாணவர்களும் கல்விக்காக செல்ல உட்துறை செயலரால் அனுமதி வழங்கப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஹமாஸ் – இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து காசாவில் இருந்து பிரித்தானியாவுக்கு  கல்விக்காக செல்லும் முதல் மாணவர்கள் இவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், அவர்கள் காசா பகுதியை விட்டு வெளியேற இஸ்ரேலின் ஒப்புதல் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள்!

IMG 8059 யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள்!

தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

அதற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.