Home Blog Page 33

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நேரடியாக எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை முயற்சி

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நேரடியாக எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தொடர்பில் இலங்கை கனியவள கூட்டுதாபனம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.

பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கனியவள கூட்டுதாபனத்தின் அதிகாரி ஒருவரை கோடிட்டு ஆங்கில ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி, தற்போது விலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை காலமும் இலங்கை, விநியோகஸ்தர்களின் ஊடாக எரிபொருளை இறக்குமதி செய்து வந்தது.
இந்தநிலையில் நேரடி கொள்முதல் நடவடிக்கைகளுக்கு இலங்கை கனியவள கூட்டுதாபனம், ஐக்கிய அரபு இராச்சிய அரசுக்கு சொந்தமான அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அதிபர் விடுத்த அழைப்பிற்கு இணங்க இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அத்துடன் கனியவள திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அண்மையில் இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இடையே முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு மகஜர்

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை முற்றாக நிராகரித்து சர்வதேச நீதிப் பொறிமுறையே வேண்டும் என்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் நிறைவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர் ஐ. நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கான மகஜர் ஒன்றை ஜ.நா. வின் யாழ்ப்பாண அலுவலகத்தில் கையளித்தனர்.
அந்த மகஜரில் உள்நாட்டு விசாரணை பொறிமுறையை முற்றாக நிராகரித்து சர்வதேச நீதிப் பொறிமுறையைக் கோருகின்றோம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

“இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம், உலகளவில் அதிக எண்ணிக்கையிலான காணாமல் போனவர்களைக் கொண்ட ஒரு நாட்டில் நீதிக்கான எங்கள் போராட்டத்தில் உறுதியாக இருந்து வருகிறோம்’. ‘இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், நீதியை நிலைநாட்டுமாறு சர்வதேச சமூகத்தை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம்’.
‘வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது உலகளவில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் முழு மக்களுக்கும் எதிரான ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது’ என்றும் குறித்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் இலங்கை போன்ற நாடுகளில் உள்ள சமூகங்களை இலக்கு வைத்து இன ஒடுக்குமுறையின் கருவியாக மாறியுள்ளன. பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் என்பது மிகவும் நயவஞ்சகமான ஆயுதமாகும்.

இது முழு சமூகத்திற்கும் நீண்டகால துயரத்தையும் உளவியல் சித்திரவதைகளையும் ஏற்படுத்துகிறது என்றும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஈழத்தைப் பொறுத்தவரையில்,  வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கவில்லை.
எமது உரிமைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டே இலங்கை அரசானது  ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட இன ஒடுக்குமுறைக் கருவியாக இதனை பாவித்து வந்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் உச்சக்கட்டத்தை அடைந்த இலங்கையின் இனப்படுகொலைப் போரின் இறுதிக் கட்டத்தில், 146,679 பேர் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்,
அவர்களது உறவினர்களால் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் 21,000 க்கும் மேற்பட்டவர்கள் ஒப்படைக்கப்பட்டு  பலவந்தமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் ஒரு திட்டமிட்ட தந்திரோபாயமாக இலங்கையால் பலவந்தமாக காணாமல் போகச் செய்தல் நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும் குறித்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது அவர்களின் திட்டமிட்ட இனவழிப்புக்கு  கணிசமாக பங்களித்துள்ளது.
போரின் இறுதிக் கட்டத்தில், 59க்கும் மேற்பட்ட குழந்தைகள் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பின்னர் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது என சர்வதேசத்திடம் நீதி வேண்டி தொடர்ந்து போராடி வருகிறோம்.

இனப்படுகொலையை வரையறுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசை திருப்திப்படுத்துவதும் கால அவகாசம் கொடுப்பதும் எமது மக்களுக்கு ஆழ்ந்த வேதனையை அளிக்கின்றது என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழர் உரிமைப் போராட்டத்தின் போது, வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் உட்பட சரணடைந்தவர்களின் கதி என்ன என்பதை இலங்கை அரசு வெளிப்படுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்து மிக விரைவாக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரின்  350க்கு மேற்பட்ட உறவினர்கள் நீதிக்காக போராடும் போது, தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என அறியாமலேயே இறந்துள்ளனர்.
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும். அங்கு 28 சிறுவர்களின் என்புக் கூடுகள் உட்பட 376 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

இலங்கையில் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியாக தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவரும் செம்மணி சித்துப்பாத்தி புதைகுழி பதிவாகியுள்ளது.  வருகின்ற 8ம் திகதி தொடங்கவுள்ள ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் உறவுகளுக்கு சர்வதேச நீதிப்பொறிமுறை ஊடாக உண்மை கண்டறியப்பட்ட பதில் விரைந்து வழங்குவதுடன், பாதிக்கப்பட்டோரின் சாட்சியங்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திட்டமிட்ட இனப்படுகொலை மேற்கொண்ட இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்திடம் பாரப்படுத்தி விசாரணையை ஆரம்பிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரையும் உறுப்பு நாடுகளையும் கோருகின்றோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இறைமையைத் தவிர்க்கும் (Not evasion) காலமல்ல உறுதிப்படுத்த வேண்டிய (But decision) நேரம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 354

கடந்த வாரத்தில். பிரான்ஸ்-பிரித்தானியா-யேர்மன் அரசதலைவர்கள் இணைந்து முக்கூட்டு தடையினை ஈரானுக்கு விதித்தனர். பிரான்சின் அரசத்தலைவர் மக்ரோனும் யேர்மனின் அரசத்தலைவர் மெர்கலும் இணைந்து இருநாட்டு அமைச்சர்களையும் ஒரே அவையாக அமைத்து அமைச்சரவையினை நடாத்தினர். இவ்வாறான புதிய செல்நெறிகள் உலக அரசியலில் தோற்றம் பெறுவதற்கு மூலகாரணமாக உள்ளது அந்த அந்த நாட்டின் பாதுகாப்பும் நாடுகள் உள்ள கண்டத்தின் பாதுகாப்பும் என்பதாக அமைகிறது. இன்றைய உலகு பாதுகாப்புக்கும் சந்தைக்குமாக கூட்டாண்மைகளையும் பங்காண்மைகளும் கொண்டதாக அரசியலை முன்நகர்த்தினாலும் இறைமை என்பதும் தன்னாட்சி என்பதும் பேரத்துக்கு உட்படுத்த இயலாதனவாகவே ஒவ்வொரு நாட்டிலும் உள்ளது என்பது கவனத்திற்குரியவொன்றாக உள்ளது. இதன் வழி சமகாலம் இறைமையைத் தவிர்க்கும் காலமல்ல (Not evasion)இறைமையை உறுதிப்படுத்த வேண்டிய நேரமாக (But decision) உலகின் தேசமக்கள் ஒவ்வொருவருக்கும் அமைகிறது என்பது முக்கியமான விடயம்.
அதிலும் ஈழத்தமிழர்கள் போன்ற உலகின் சிறுதேச இனங்கள்(Small Nation)காலனித்துவத்துக்கு பல நூற்றாண்டுகள் உள்ளாகியதன் விளைவாக தங்களின் அரசாக காலனித்துவ ஆட்சியாளர்களையும் அவர்கள்  திணித்த சமகால அரசாங்கங்களின் படைபல ஆக்கிரமிப்பு ஆட்சியினையும்  எதிர்த்து தங்களுடைய இறைமையின் அடிப்படையில் தங்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளின் வழி தங்களின் அரசியல் எதிர்காலத்தை அமைக்க இயலாமையுள்ளவர்களாக இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்புக்கு ஆளாகி தங்களின் இறைமை ஒடுக்கத்தையும் தன்னாட்சி இழப்பையும் தங்களின் நாளாந்த வாழ்வாக அனுபவிக்க வேண்டியவர்களாக உள்ளனர். இதற்கு ஈழத்தமிழர்களும் பலஸ்தீனியர்களும் கண்முன்நிற்கும் உதாரணமாக உலகில் விளங்குகின்றனர்.
இந்நிலையில் நாடுகளல்ல, அமைப்புக்கள் அல்ல மக்களே தங்களின் இறைமையைத் தாங்களே மீளுறுதி செய்ய வேண்டியவர்களாகின்றர்கள். சனநாயக வழிகளில் ஈழத்தமிழர்கள் பிரித்தானிய காலனித்துவ அரசு எம்மிடம் இருந்து கைப்பற்றிய யாழ்ப்பாணம்-வன்னி அரசுகளுக்கு உரிய இலங்கையின் வடக்கு கிழக்கு நிலப்பகுதிகளான  இந்த மண் எங்களின் சொந்த மண் என்னும் இறைமையை உறுதியின் உறைவிடமாக நின்று மீளுறுதிப்படுத்தி விழ விழ எழுவோம் என்னும் தளரா முயற்சியால் தன்னாட்சியினை மீள்உற்பத்தி செய்வதன் வழி மட்டும்தான்  தங்களுக்கான பாதுகாப்பான அமைதியையும் வளர்ச்சிகளையும் சமகாலத்தில் மீளுருவாக்கம் செய்ய முடியும் என்பது இலக்கின் எண்ணமாக உள்ளது. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் தங்களின் இறைமையை மீளுறுதி செய்ய முயற்சிப்பது எந்த வகையில் பிரிவினையாகும். ஈழத்தமிழர் தங்களின் வரலாற்றுத் தாயகத்தில் தங்களின் தேசியத்தை தங்களின் தன்னாட்சி வழி வளர்த்து தங்களுக்கான பாதுகாப்பான அமைதியான வாழ்வை வளர்ச்சிகளை அமைக்க முயல்வது எந்த வகையில் பயங்கரவாத நடவடிக்கையாகிறது. இந்தக் கேள்விகள் அனைத்துலக மக்கள் மத்தியில் எழுப்பப்படாததே உலகின் மௌன நிலைக்குக் காரணம் என்பது இலக்கின் உறுதியான கருத்தாகவுள்ளது. அதாவது ஒவ்வொரு உன்னதத்தையும் உழைப்பால்தான் உச்சப்படுத்த முடியும். உழைப்பிற்கு செயலணி தேவை. சமூகத்தில் நாங்கள் என்ற உள்ளுணர்வு எங்கள் என்ற உரிமை உணர்வாக மாறாவிட்டால் தாயகம் காப்பது கடமை என்பது வாழ்வாகாது. இன்று ஈழத்தமிழர்களிடை “நாங்கள்” என்ற உள்ளுணர்வு, “எங்கள்” என்ற உரிமை உணர்வுகளை சீரழிக்கும் செயல்கள் எல்லையற்றனவாக வளர்கின்றன. சமூக ஊடகங்கள் இதனை ஊதிப்பெருப்பிக்கின்றன.
15.01. 1946 இல் அகில இலங்கை தமிழ்க்காங்கிரசின் இணைச்செயலாளர் எஸ். சிவசுப்பிரமணியம் அவர்கள் அக்கால பிரித்தானிய பிரதமராக இருந்த லேபர்கட்சித்தலைவர் அட்லி அவர்களுக்கு அனுப்பிய “முன்மொழியப்பட்டுள்ள சிலோன் அரசியலமைப்பு குறித்த அகில இலங்கை தமிழ்க்காங்கிரசின் கடிதத்தில்” (339 Co 54/986/9/1, no.9. British Documents on the End of Empire, Series B Volume 2-Sri Lanka Editor K.M.De Silva-Part Towards Independence 1945-1948 page 178)  மிகத்தெளிவாக எடுத்து விளக்கி சோல்பரி அரசியலமைப்பை இலங்கை தமிழர்கள் நிராகரிப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். எனவே 79 ஆண்டுகளாக ஈழத்தமிழர்களால் நிராகரிக்கப்பட்டு வரும் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சி பாராளுமன்ற முறைமையின் கீழேயே தங்களுக்கு அரசியல் அதிகாரப்பரவலாக்கத்தை இன்றைய ஈழத்தமிழ்ச் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்பதே இன்றும் ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கான அனைத்துலக சட்ட அடிப்படையிலான தீர்வுகளோ பாதுகாப்போ எதுவுமே கிடைக்காதிருப்பதற்கான மூலகாரணம் என்பதை ஐக்கியநாடுகள் சபை தொடக்கம் பெற்ற இரண்டாவது ஆண்டில் எழுதப்பட்ட இந்தக் கடிதம் தெளிவாக எடுத்து விளக்குகிறது. இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் இந்த செப்டெம்பர் மாத  60வது ஆண்டமர்வில் கூட ஈழத்தமிழர்கள் மேலான சிறிலங்காவின் யுத்தக்குற்றச் செயல்கள், மனிதாயத்துக்கு எதிரான குற்றங்கள், மனித உரிமைகள் வன்முறைப்படுத்தல்கள் எதற்குமே குற்றம் இழைத்தவர்களுக்கான தண்டனை நீதியோ அல்லது ஈழத்தமிழர்களுக்கான பரிகாரநீதியோ எதுவும் கிடைக்கப்போவதில்லை. அதற்கு மாறாக சிறிலங்கா அரசாங்கத்தை உறுதியான அரசாக மாற்றுவதற்கான நெறிப்படுத்தல்களும் மதிநிதி ஆதரவுகளுமே அதிகரிக்கப்படும். ஏனெனில் ஐக்கிய நாடுகளின் வல்லாண்மை நாடுகளுக்கும் பிராந்திய மேலாண்மை நாட்டுக்கும் சிறிலங்காவுடனான தங்களின் கூட்டாண்மை பங்காண்மை தொடர்பாடல்களும் உறவாடல்களுமே இன்றைய தேவையாக உள்ளன.
இன்றைய உலகில் அரசாங்கங்கள் எத்தகைய வேறுபாடான சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக அல்லது தத்துவக் கொள்கைகளைக் கொண்டனவாக இருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தாது ஒரு பொது விருப்பில் தங்களிடம் உள்ள மாறுபாடுகள் வேறுபாடுகளைக் கடந்து இணைந்து அந்த பொதுவிருப்பை நடைமுறையாக்க முன்வைத்ததை “விருப்பாளர்களின் இணைவு” என்ற புதுவகைக் கூட்டாண்மை பங்காண் மையை இன்றைய பிரித்தானியப் பிரதமர் கெயர் ஸ்ராமர் , உக்ரேனுக்கான ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு என்னும் பொதுநோக்கில் தொடக்கி வைத்தமை உலகறிந்த விடயம். இந்நிலையில் அரசைக் கொண்டிராத நிலையில் உள்ள சிறுதேச இனங்கள் தங்களுக்கான பாதுகாப்பை தங்கள் மக்களின் அறிவுப்பலம் தங்கள் மண்ணின் இயற்கை வளம் இவற்றினை உற்பத்தியாக்க வல்ல தொழில்நுட்பப் பலமும் மூலதனமும் ஏற்படத்தக்க வகையில் உலகளாவிய ஈழத்தமிழினத்தின் வழியாகக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதே இலக்கின் கருத்து அதே போன்று இன்று ஐரோப்பிய இராணுவம் என்னும் ஒன்றின் கட்டமைப்பு முயற்சியை பிரான்சு முன்னெடுக்கத் தொடங்கியதன் வழி கண்டங்களின் அரசியல் வேகம் பெற்று வருகிறது. ட்ரம்பின் வர்த்தகப் போட்டி வேறு கண்ட அரசியலை காலத்தின் தேவையாக்குகிறது. இதுவே இந்திய சீன நட்பு என்னும் புதிய அரசியல் தோற்றம். ஆதலால் அரசியல் ராஜதந்திரமிக்க செயற்பாடுகள் வழியாகவே ஈழத்தமிழர்கள் புதிய உலக அரசியல் ஒழுங்கை எதிர்கொள்ள வேண்டிய காலமிது என்பது இலக்கின் மற்றொரு கருத்து.
இந்நிலையில் ஈழத்தமிழர்கள் இருப்பனவற்றை இருப்பனவாகவே செயற்பட அனுமதித்து தங்களின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக தேவைகளுக்கான மக்கள் செயலணிகளை சிறு சிறு குழுமங்களாகச் சுயாதீனமாகக் கட்டியெழுப்புவதன் மூலமே மீளவும் தேசநிர்மாணத்தை உறுதியாகவும் அறிவுபூர்வமாகவும் அனைத்துலக இணைப்புடனும் கட்டியெழுப்பலாம் என்பதே இலக்கின் இவ்வாரக் கருத்தாக உள்ளது.

Tamil News

Ilakku Weekly ePaper 354 | இலக்கு-இதழ்-354 | 30 ஆகஸ்ட் 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 354 | இலக்கு-இதழ்-354 | 30 ஆகஸ்ட் 2025

Ilakku Weekly ePaper 349

Ilakku Weekly ePaper 354 | இலக்கு-இதழ்-354 | 30 ஆகஸ்ட் 2025

Ilakku Weekly ePaper 354 | இலக்கு-இதழ்-354 | 30 ஆகஸ்ட் 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • இறைமையைத் தவிர்க்கும் (Not evasion) காலமல்ல உறுதிப்படுத்த வேண்டிய (But decision) நேரம்| ஆசிரியர் தலையங்கம்
  • ரணிலின் கைது: அரசியல் கலாசார மாற்றமும் அரசியலமைப்பு அதிகாரமும் – விதுரன்
  • ஈழப் போராட்டங்களும் ஜெனிவா தீர்மானங்களும்! – பா. அரியநேத்திரன்
  • சர்வதேசத்திடம் நீதி கோரும் உறவுகள் – கிண்ணியான்
  • தடைகளுக்கு மத்தியில் இந்தியா அடைந்த ஆதாயம் இலங்கை தவறவிட்ட பேரம் – மருதன் ராம்
  • தமிழீழ மக்களுக்கான தீர்வு ‘பொது வாக்கெடுப்பு’ – கருத்தரங்கம் – திரு. தமிழினியன்
  • அமெரிக்கா உருவாக்கப்போகும் விடுதலை இயக்கம் | வேல்ஸில் இருந்து அருஸ்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு-கிழக்கில் ஆர்ப்பாட்டம்!

New Project 306 காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு-கிழக்கில் ஆர்ப்பாட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வடக்கு – கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

வடக்கு-கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதிகோரியும், போர்க்குற்றம், மனித புதைகுழிகள் உள்ளிட்டவற்றிற்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இந்த போராட்டம் இடம்பெறுகின்றது.

 

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட உக்ரேனிய கடற்படை கப்பல்!

உக்ரேன் கடற்படையால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இயக்கப்பட்ட மிகப்பெரிய கப்பலான சிம்ஃபெரோபோல் (Simferopol), கடற்படையின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வியாழக்கிழமை (28) அறிவித்தது.

ட்ரம்பின் கட்டண வரிகள் சட்டவிரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பானது அமெரிக்க ஜனாதிபதியின் வெளிவிவகாரக் கொள்கை நிகழ்ச்சி நிரலை மாற்றக்கூடிய சாத்தியமான சட்ட மோதலாக தற்சமயம் மாறியுள்ளது. இந்தத் தீர்ப்பு, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளின் மீது விதிக்கப்பட்ட ட்ரம்பின் “பரஸ்பர” வரிகளையும், சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது விதிக்கப்பட்ட பிற வரிகளையும் பாதிக்கிறது.

குறித்த தீர்ப்பில், அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் வரிகள் அனுமதிக்கப்பட்டன என்ற ட்ரம்பின் வாதத்தை அமெரிக்க ஃபெடரல் சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததுடன், அவை “சட்டத்திற்கு முரணானவை என்பதால் செல்லாது” என்றும் கூறியது.

எனினும், இந்த வழக்கை மேன்முறையீடு செய்ய உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்கு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதனால், இந்தத் தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் 14 வரை நடைமுறைக்கு வராது.

ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையின் ஒரு தூணாக பல நாடுகளுக்கான வரிகளை உயர்த்தியுள்ளார்.

அவற்றைப் பயன்படுத்தி அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தவும், அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யும் பணிகளையும் ஆரம்பித்துள்ளார்.

இந்த வரிகள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு வர்த்தக பங்காளிகளிடமிருந்து பொருளாதார சலுகைகளைப் பெறுவதற்கு வாய்ப்பளித்துள்ளன, ஆனால் நிதிச் சந்தைகளில் ஏற்ற இறக்கத்தையும் அதிகரித்துள்ளன.

மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு!

முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரால் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய பல சம்பவங்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

ஊழல் மற்றும் மோசடிக்கு எதிராக போராடும் பல சிவில் சமூக அமைப்புகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த அமைப்புகள் சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் பெற்றுள்ளன.

அந்தத் தகவல்களை பயன்படுத்தி தொடர்புடைய முறைப்பாடுகளை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது வழக்கறிஞர்கள் அதற்கான தகவல்களை பகுப்பாய்வு செய்து வருகின்றனர். அவற்றில், மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட தலையீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல கட்டுமாணங்களும், கோட்டபாய ராஜபக்ஷவால் மேற்கொள்ளப்பட்ட பல மோசடிகளும் அடங்கும்.

இது குறித்து கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, “இது போன்ற முறைப்பாடுகள் தகவலுடன் சமர்ப்பிக்கப்பட்டால், முறையான விசாரணைகளை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன்.

சந்தேகநபர் முன்னர் வகித்த பதவிகள் அத்தகைய சட்டச் செயல்பாட்டில் பொருத்தமானவை அல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்மசிங்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இதுவாகும். இவ்வாறான நிலையில் எந்தவொரு ஜனாதிபதியும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் முன்னாள் ஜனாதிபதிகள் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழி : ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுற்றப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை முற்றாக அகழ்ந்து எடுத்த பின்னர் , சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே குறித்த எலும்பு கூடுகள் தொடர்பில் உறுதியாக கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை , இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சிறியவர்கள் மற்றும் சிசுக்களின் எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது.

அத்துடன் ஒன்றுடன் ஒன்று அருகருகே புதைக்கப்பட்ட வரும் , கால்கள் மடிந்த நிலையிலும் எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவை அசாதாரணமாகவே புதைக்கப்பட்டுள்ளன என்பது கண்களுக்கு புலனாகின்ற போதிலும் , மீட்கப்படும் எலும்பு கூட்டு தொகுதிகளை சட்ட வைத்திய அதிகாரி ஆய்வுகளுக்கு உட்படுத்தி , சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே மேலதிக தகவல்களை கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வரையில் கட்டம் கட்டமாக 46 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 174 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள அதேவேளை இதுவரையில் 187 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கேப்பாப்புலவு மக்களின்காணியை கோரிய விமானப்படை:கடுமையான எதிரப்புவெளியிட்ட ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் அமைந்துள்ள   மக்களின் விவசாயக்காணிகளை தமது தேவைக்கென கேப்பாப்புலவு விமானப்படையினர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைக் கோரியிருந்தனர்.

இந்நிலையில் கேப்பாப்பிலவில் ஏற்கனவே படையினரால் மக்களின் காணிகள் பல அபகரிக்கப்பட்டுள்ளமையினைச் சுட்டிக்காட்டிய   நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், விமானப்படையினரின் இக்கோரிக்கைக்கு தமது கடுமையான எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தார்.

அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது கடுமையான எதிர்ப்பினையடுத்து விமானப்படையினருக்கு காணி வழங்கப்படுவதில்லை என வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

படையினரால் ஏற்கனவே ஆக்கிரமித்திருந்த குறித்த காணி விடுவிப்புச்செய்யப்பட்டநிலையில், அக்காணியில் மக்கள் விவசாயநடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தக்காணியினை விமானப்படை தமக்குத்தருமாறு மீண்டும் கோருவது பொருத்தமற்ற செயற்பாடாகும்.

அத்தோடு இன்னும் 190ஏக்கர் அளவில் மக்களுக்குரிய காணிகள் கேப்பாப்பிலவில் விடுவிக்கப்படவேண்டியுள்ளது. இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்கவேண்டுமென கேப்பாப்புலவு மக்கள் தொடர்ந்து போராடியும், கோரிக்கைகளை முன்வைத்தும்வருகின்றனர்.

இவ்வாறிருக்க மீண்டு விமானப்படையினர் விடுவிக்கப்பட்ட மக்களின் காணியினை மீண்டும் கோருவது வேடிக்கையாகவுள்ளது.

யுத்தம் மௌனிக்கப்பட்டு ஒன்றரைத் தசாப்தகாலத்திற்கு மேலாகியுள்ள நிலையில் மக்களின் காணிகளை அபகரித்து இங்கிருந்துகொண்டு விமானப்படையினர் யாருடன் யுத்தம் செய்யப்போகின்றனர்.

எனவே கேப்பாப்புலவு மக்களின் விவசாயக் காணிகளை விமானப்படைக்கு வழங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமுடியாதென இதன்போது தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது கடுமையான எதிர்ப்பினையடுத்து விமானப்படையினருக்கு காணி வழங்குவதில்லை என முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.