கிறீன்லாந்தில் டென்மார்க் செய்த இனப்படுகொலை
இலங்கையில் சுயாதீன விசாரணைகளுக்கான அவசரத் தேவைக்கு ஐ. நா. வலியுறுத்தல்
இலங்கையில், அண்மையில் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித என்புக்கூடுகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் என்பன, கடந்த கால மனித உரிமை மீறல்களின் அளவையும், நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீன விசாரணைகளுக்கான அவசரத் தேவையையும் வலியுறுத்துவதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) தெரிவித்துள்ளார்.
சர்வதேச காணாமல் போனோர் தினத்தையொட்டி அறிக்கையொன்றைய வெளியிட்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘ஆயிரக்கணக்கான இலங்கையர்களின் கதி என்னவென்று தெரியவில்லை’ என்றும் இது ‘மௌனம், செயலற்ற தன்மை மற்றும் தண்டனையின்மையால் ஏற்பட்ட ஒரு தேசிய காயம்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
அன்புக்குரியவரைப் பற்றிய பதில்கள் இல்லாமல் விடப்படும் வலி, காலத்தால் மட்டுமே குணப்படுத்த முடியாத ஒரு அதிர்ச்சி என்றும் ‘உண்மை மற்றும் நீதி இல்லாததால் துன்பம், ஆழமடைகிறது’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
சர்வதேச காணாமல் போனோர் தினம் அனைத்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நினைவை மதிக்கும் ஒரு நாள் என்றும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் இந்த மீறலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளவோ, மன்னிக்கவோ அல்லது மறக்கவோ கூடாது என்பதை நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனித புதைகுழிகளில் மீட்கப்படும் என்புக் கூடுகளும், எச்சங்களும் நம்பகமானதும், வெளிப்படையானதுமான சுயாதீன விசாரணைகளுக்கான அவசர தேவையை நினைவூட்டுகிறது. உண்மைகளை வெளிக்கொணர்வது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு நெருக்கமான சூழலை ஏற்படுத்த உதவும்.
நீதி மற்றும் நல்லிணக்கம் என்பன அதற்கு முன்நிபந்தனையாக உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் எதிர்கொள்ளும் கண்காணிப்பு அச்சுறுத்தல்கள், மிரட்டல் மற்றும் பழிவாங்கல்கள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபை கவலை கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், தங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதில் ஈடுபட்டுள்ள அனைவரும் தண்டிக்கப்படக்கூடாது. பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர், காணாமல் போனவர்களின் குடும்பங்களைச் சந்தித்து உண்மையை வெளிக்கொணர்வது ஒரு அடிப்படை உரிமை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார்.
மனித புதைகுழி தொடர்பில் விசாரிக்க அவர் விடுத்த அழைப்பு, கடந்த காலத்தை தைரியத்துடனும் வெளிப்படைத்தன்மையுடனும் எதிர்கொள்ள வேண்டியதன் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த செயற்பாட்டில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து ஆதரவை வழங்குகிறது.
இந்த நாளிலும், ஒவ்வொரு நாளும், தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடும் ஒவ்வொரு குடும்பத்துடனும் ஐக்கிய நாடுகள் சபை உறுதுணையாக நிற்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்கள் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீண்டும் நிகழாததற்கான உத்தரவாதங்களுக்கான உரிமைகளை உணர முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்காக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் குற்றச்சாட்டப்படுகின்றனவர்கள் குறித்த நம்பகமான, சுயாதீனமான விசாரணைகளை ஆதரிப்பதில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து உறுதியாக இருப்பதாக, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவால் வேலை பறிபோகும் இளம் தலைமுறையினர்
Volker turk அறிக்கைக்கு எதிராக தென்னிலங்கையில் கையெழுத்து சேகரிப்பு
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வெளியிடவுள்ள அறிக்கைக்கு எதிர்ப்பினை வெளியிடும் ஆவணத்தில் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சரான சரத் வீரசேகரவின் ஏற்பாட்டில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker turk) சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் இலங்கையில் காணப்படும் மனித உரிமை நிலை, சட்ட நடைமுறைகள் மற்றும் அரசின் ஒத்துழைப்புகள் தொடர்பான மதிப்பீடு இடம்பெறவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த நடவடிக்கையானது, இலங்கை இராணுவத்தின் மீது போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்கும் செயற்பாடாகும் என்று சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதனால், அதற்கு எதிர்ப்பினை வெளியிடும் நோக்கில் பொது மக்களிடம் கையெழுத்து சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகள் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கொழும்பு – புறக்கோட்டை, கண்டி, குருணாகல், களுத்துறை, சிலாபம், கம்பஹா, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதான நகரங்களில் பொது மக்களின் கையெழுத்து சேகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், குறித்த ஆவணத்தை கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரின் கூற்றுக்கு சட்டமா அதிபர் அதிருப்தி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களுக்கு சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்காக வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃபிரேஞ்ச்சுடன் (Marc-André Franche) இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் தமது அதிருப்தியை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கருத்து தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட வேண்டிய பதில் வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வொல்கர் ரெக்கின் (Volker turk) அறிக்கைக்கு பதிலளிக்கும் இலங்கை அரசின் முழு அறிக்கையின் ஒரு பகுதியாக சட்டமா அதிபரின் பதில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாத ஆரம்பத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், சட்டமா அதிபர் திணைக்களம் நீதிக்கு ஒரு தடையாக இருப்பதாகவும், கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்கு தொடுநர் அலுவலகத்தை உறுதி செய்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, செப்டம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் கலந்து கொள்ள ஜெனீவாவுக்குச் செல்வதற்கு முன்னர், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், கொழும்பை தளமாகக் கொண்ட ராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார்.
இதன்போது, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து பொறுப்புக்கூறல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த கண்ணோட்டத்தை வழங்குவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ரத்து செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒரு சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகத்தை அமைத்தல் ஆகியவையும் இதில் அடங்குகின்றன.
சஜித்துடன் இணைய ரணில் தரப்பு தயார்
ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள குறித்த மாநாடு தொடர்பில் கருத்துரைத்த ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான ஒற்றுமையே முதல் படியாக இருக்கும் என்று குறிப்பிட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதேநேரம், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் நீக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச நிதியை பயன்படுத்தி தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியாவுக்கு சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அவர் எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிப்பதாக குறித்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக, குறித்த மாநாட்டை பொதுவான ஒரு இடத்திற்கு மாற்றுவதற்கும் ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பிளவுக்கு பின்னர் சஜித் பிரேமதாசவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான உறவு வலுவடைவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், குறித்த மாநாட்டில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்ரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய தேசிய கட்சியின் மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பு கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தினார்.
யாழில் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்குமாகாண ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோல் கலந்துகொண்டனர்.
மேலும், பிரதியமைச்சர் சுனில் வட்டஹல, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், மற்றும் சி.வி.கே சிவஞானம் அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.சமிந்த பத்திராஜ, யாழ் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், பிரதியமைச்சர்கள், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
யாழ் மாவட்டச் செயலகத்தின் 60வது ஆண்டு பூர்த்தயினை முன்னிட்டு முத்திரையும் தபால் தலையும் இதன்போது வெளியிடப்பட்டது.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – 622 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 622 ஆக உயர்ந்துள்ளது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1500ஐ கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 500ஐ கடந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 12.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. 6.0 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாகவும், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளன. காபூலில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை பல கட்டிடங்களை நிலநடுக்கம் உலுக்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட இந்தியாவிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கத்திற்குப் பின்னர் முறையே நான்கு தசம் ஐந்து முதல் ஐந்து தசம் இரண்டு வரை ரிக்டர் அளவில் மூன்று பின்அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள குனார் மாகாணத்தின் நோர்கல் மாவட்டத்தில் நிலநடுக்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் மற்றும் இமயமலையின் அருகிலுள்ள பகுதிகளில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் அதிகரித்து வருவது புவியியலாளர்கள் மத்தியில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்திய-யூரேசிய டெக்டோனிக் தட்டுகளின் இயக்கம்தான் நிலநடுக்கத்திற்குக் காரணம் என்று புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 10 இலட்சம் ரூபா நிதி மோசடி
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்ட நபருக்கு எதிராக மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
தெல்லிப்பழை – மாவிட்டபுரம் பகுதியைச் சேர்ந்த நபரே சங்கானையை சேர்ந்த ஒருவரை பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி 13 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளார்.
அவரை பிரான்ஸிற்கு அனுப்பாத நிலையில் 3 இலட்சம் ரூபாவை திருப்பி கொடுத்ததுடன் 10 இலட்சம் ரூபா இன்னமும் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சந்தேகநபர் தலைமறைவாகிய நிலையில் காவல்துறைனர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் : அரசாங்கம்
2000ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல், தற்செயலான சம்பவங்கள் அல்ல. அவை குற்றங்கள் என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் குற்றங்கள் வாழ்வதற்கான உரிமை, குடும்ப ஒற்றுமைக்கான உரிமை மற்றும் கண்ணியத்திற்கான உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை வேண்டுமென்றே மீறும் செயலாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, இவற்றை மறுப்பதோ அல்லது அவர்கள் சார்பாக செய்ய வேண்டிய பணிகளை தாமதப்படுத்துவதோ அரசின் பங்கு அல்ல என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். மாறாக நாட்டின் அரசு அதனை அங்கீகரித்து செயற்பட வேண்டும். இதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம், நல்லிணக்கம் மற்றும் நீதியை, கொள்கை அறிக்கையின் மையத்தில் வைத்துள்ளதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.