Volker turk அறிக்கைக்கு எதிராக தென்னிலங்கையில் கையெழுத்து சேகரிப்பு

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வெளியிடவுள்ள அறிக்கைக்கு எதிர்ப்பினை வெளியிடும் ஆவணத்தில் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சரான சரத் வீரசேகரவின் ஏற்பாட்டில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker turk) சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் இலங்கையில் காணப்படும் மனித உரிமை நிலை, சட்ட நடைமுறைகள் மற்றும் அரசின் ஒத்துழைப்புகள் தொடர்பான மதிப்பீடு இடம்பெறவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த நடவடிக்கையானது, இலங்கை இராணுவத்தின் மீது போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்கும் செயற்பாடாகும் என்று சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதனால், அதற்கு எதிர்ப்பினை வெளியிடும் நோக்கில் பொது மக்களிடம் கையெழுத்து சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகள் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கொழும்பு – புறக்கோட்டை, கண்டி, குருணாகல், களுத்துறை, சிலாபம், கம்பஹா, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதான நகரங்களில் பொது மக்களின் கையெழுத்து சேகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், குறித்த ஆவணத்தை கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.