Home Blog Page 3140

மெக்காவை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை

இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை சவுதி அரேபிய இராணுவத்தினர் தகர்த்துள்ளனர். ஆனாலும் அடுத்தடுத்து தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்ற காரணத்தால், அங்கு பதற்றம் நிலவுகின்றது.

ஏமனிலுள்ள ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசிற்கும் இடையில் கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. சவுதி அரேபியப் படைகள், கடந்த 2015முதல் ஹவுதிப் புரட்சியாளர்களுக்கு எதிராகப் போராடி வருகின்றன. ஹவுத்திப் புரட்சியாளர்களில் பெரும்பாலானோர், ஷியா முஸ்லிம் என்பதாலும் செங்கடல், அரேபியக் கடல்களை ஏமன் கொண்டிருப்பதாலும், பூகோள அரசியலை மையப்படுத்தி ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு ஈரான் அரசு ஆதரவளித்து,  ஆயுதங்கள், பயிற்சிகளை அளிக்கின்றது.

அவ்வப்போது ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும், சவுதி இராணுவத்தினருக்கும் இடையே சண்டை ஏற்படவுள்ள நிலையில் கடந்த மே 14ஆம் திகதி, சவுதி அரேபிய அரசிற்குச் சொந்தமான சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் குழாய் அமைப்பை தானியங்கி விமானம் மூலம் ஹவுத்திப் புரட்சியாளர்கள் தகர்த்துள்ளனர். அஃபிப், அல்-டவுத்மி ஆகிய பகுதிகளில் செல்லும் குழாய் ஒழுங்கமைப்பின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலால், சவுதிக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபிய விமானப்படை தாக்குதல் நடத்தின. இந்நகரம், ஹவுத்திப் புரட்சியாளர்கள் வசமுள்ளது.

இன்று (மே 20) அதிகாலை 4மணிக்கு, சவுதி அரேபிய நகரான டைப் மீது வந்த ஏவுகணை ஒன்றை, சவுதி இராணுவத்தின் எதிர்ப்பு ஏவுகணைகள் இடைமறித்து தகர்த்தெறிந்தன. அந்த ஏவுகணை, இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை நோக்கி ஏவப்பட்டதாக, சவுதி அதிகாரிகள் கூறினர். அடுத்த சிலமணிநேரங்களில் மீண்டும் ஒரு ஏவுகணையை ஹவுத்திப் புரட்சியாளர்கள் ஏவினர்.

ஜெட்டா நகர் மீது அந்த ஏவுகணை பறந்த போது, சவுதி விமானப்படையினர் இடைமறித்து அழித்தனர். இந்த ஏவுகணையும் மெக்காவை குறிவைத்தே ஏவப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரம்லான் நோன்பு நேரத்தில், புனித கஃபா இருக்கும் மெக்காவை நோக்கி ஹவுத்திப் புரட்சியாளர்களின் ஏவுகணைகள் பாய்ந்துள்ளதானது, சவுதி அரேபியாவில் கடும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணைகளை ஈரான் இராணுவம் தான் அளித்துள்ளதாக சவுதி குற்றம் சாட்டும் நிலையில், இதுவரை ஈரான் அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை இத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பது உறுதியானால், அந்நாடு கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் : யஸ்மின் சூக்கா

போர் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கான நீதி தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை.

சிறீலங்கா அரசு அனைத்துலக சமூகத்தை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது.
சிறீலங்கா அரசின் இந்த ஏமாற்றுத்தனங்களை தகர்த்து அதன் மீது அனைத்துலக சமூகத்தின் உதவியுடன் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துவதில் புலம்பெயர் அமைப்புக்கள் மிகப்பெரும் தடைகளைச் சந்தித்து வருகின்றன.

அவற்றில் முக்கியமானது புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஒரு அணியில் இணைந்து செயற்பட தயங்குவது தான். அதாவது விடுதலைப்பாதையில் முன்நகர்வதற்கு தமிழ் மக்களும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் மிகப்பெரும் தடைகளை சந்தித்துள்ளன.

இந்த நிலையில் உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பின் தலைவரும், ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் அமைக்கப்பட்ட ஐ.நா நிபுணர் குழுவின் முன்னாள் பிரதிநிதியுமான யஸ்மின் சூக்கா அவர்களுடன் இலக்கு மின்னிதழ் மற்றும் இணையத்தளத்தின் குழு ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்தது.

ஏறத்தாள ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், பல விடயங்கள் ஆராயப்பட்டன. நாம் யஸ்மின் சூக்காவுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் மிகவும் நீண்டதாக அமைந்ததால் அதனை பகுதிகளாக இங்கு தருகின்றோம்.


வினா:
இலங்கையில் போர் முடிந்து 10 ஆண்டுகள் நிறைவுபெறுகின்ற இத்தருணத்தில், போராலே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதில், உலகெங்கும் பரந்திருக்கின்ற தமிழ் அமைப்புக்களின் முயற்சிகளை நீங்கள் எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்

பதில்: இதனைப் பலகோணங்களில் நோக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகவும் பலமானவர்கள். ஆனால் அவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து பணியாற்றுகிறார்களா என்பது எனக்குத் தெரியாது.

பொதுவாக தாங்கள் மேற்கொள்ளுகின்ற முயற்சியின் மூலம் யார் அதிகமாக சாதிக்கின்றார்கள் என்ற போட்டி மனப்பான்மை அவர்களுக்கிடையில் காணப்படுகின்றது.

சர்வதேச கடமைகளைப் பொறுத்தவரையில் இலங்கை அரசு தனது பங்கை தான் சரிவர ஆற்றுவதற்கான அழுத்தத்தை கொடுக்கவேண்டுமானால் தமிழ் அமைப்புகள் ஒன்றுபட வேண்டியது கட்டாயமானதாகும்.

தமிழ் அமைப்புக்கள் தாங்கள் வதியும் நாடுகளிலுள்ள அரசுகள் சரியான நடவடிக்கைகள் முன்னெடுக்கும்வண்ணம் இன்னும் அதிகமான அழுத்தத்தை பிரயோகிக்கலாம். இந்தத் தமிழ் அமைப்புக்கள் தங்களது ஆற்றலை பயன்படுத்துகிறார்களா அல்லது அதனை உணர்ந்துகொள்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது.

உதாரணமாக, போர் மிகவும் உக்கிரமடைந்திருந்த நேரத்தில் ரொறன்ரோ போன்ற ஒரு நகரத்தை ஸ்தம்பிதம் அடையச்செய்யும் ஆற்றல் அவர்களுக்கிருந்தது.

ஆகவே கனேடிய, பிரித்தானிய, அமெரிக்க அரசுகள் மட்டில்  இதுவரை எதற்காக அவர்கள் அதிக அழுத்தத்தை பிரயோகிக்கவில்லை என்பது நியாயபூர்வமான வினாவாகும்.

புகைப்படங்கள் எடுப்பதைவிட அதிகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவர்கள் தங்களால் செய்யக்கூடியவற்றையெல்லாம் செய்தார்களா என்பது வினாக்குறியே.

மற்றைய விடயம் என்னவென்றால், ஒரு சந்தர்ப்பத்தில் புலம்பெயர்ந்த அமைப்புகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இருந்தன. இலங்கை அரசு தான் செய்யவேண்டிய பணிகளைச் செய்வதற்கு உரிய அழுத்தங்களை இத்தமிழ் அமைப்புகள் பிரயோகித்தார்களா என்பது தெரியவில்லை.

அமைப்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயற்படவேண்டிய அவசியம் இருக்கின்றது.

மீண்டும் ஒருதடவை ஐ.நா. ஒரு வெறுமையான தீர்மானத்தை கொண்டுவராமல் இருப்பதற்கும் ஐ.நா. தனது கடமையை சரியாக செய்வதற்கும் தாம் செய்யவேண்டிய ஐந்து விடயங்கள் எவை என்பதை இந்த அமைப்புகள் ஒன்றாக இணைந்து சிந்திக்கலாம்.

balakumar 1 தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் : யஸ்மின் சூக்காநீங்கள் வாழுகின்ற நாடுகளில் உள்ள அரசுகள் மட்டில் அழுத்தத்தை பிரயோகிப்பது மட்டும் போதாது. அத்துடன் ஜெனீPவாவிற்கு போவதாக இருந்தால் அங்கு போவதன் நோக்கம் என்ன என்பதைப்பற்றியும் ஆராய வேண்டும்.

உண்மையில் ஜெனீவாவில் என்ன செய்யவேண்டும் என்பதையும் அங்குள்ள இடைவெளியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் இவர்கள் சரியாக புரிந்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது.

2009 முதல் 2011 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியை பின்னோக்கிப் பார்க்கும் போது, அக்காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட விடயங்கள் அதிவிசேடமானவை. என்னைப் பொறுத்தவரையில் மற்றைய நாடுகளிலுள்ள ஏனைய போராட்டங்களுக்கு உதவுவதற்கு தமிழ் அமைப்புக்களிடமிருந்து நான் நிறையவே கற்றுக்கொண்டேன்.

நவீன கணனி நுட்பங்களை திறமையாகப் பயன்படுத்தி சிறப்பான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. ஆனால் இப்பொழுது அப்படிப்பட்ட அறிக்கைகள் உருவாக்கப்படுகின்றனவா என்பது வினாக்குறியே.

ஐ.நா. மேற்கொண்ட தீர்மானத்தின் ஏனைய அம்சங்களைப் பொறுத்தவரையில் ஐ.ரி.ஜே.பி. அமைப்பு நாட்டிற்கு உள்ளே இருப்பவர்களுக்கும் சரி வெளியே இருப்பவர்களுக்கும் சரி செயற்படுவதற்கான வழிவகைகளை திறந்துவைத்திருக்கின்றது.

உதாரணமாக, நில காணி விடயம் தொடர்பாக என்ன முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது? உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? எவ்வளவு மக்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்கு மீளத் திரும்பியுள்ளார்கள்? இப்படிப்பட்ட விடயங்கள் ஆதாரபூர்வ அறிக்கைகளாக தயாரிக்கப்பட வேண்டும்.

ஜெனீவாவுக்குச் சென்று ஐ.நா. தீர்மானத்தைப்பற்றி பேசும்போது மேற்படி விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசு எதுவுமே செய்யவில்லை என்பதை நாங்கள் நிரூபிக்கலாம்.

உண்மையில் இப்படிப்பட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதற்கு கடுமையான உழைப்பு அவசியம். இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் தகவல்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.  ஆரம்பகால அறிக்கைகள் அவற்றைக் கொண்டிருந்தன.

நவீன உத்திகளைப் பயன்படுத்தி, இலகுவாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் இருக்குமானால், அவற்றின்மூலம் தற்போதைய இராணுவ மயமாக்கலை ஆதாரபூர்வமாக நிரூபிக்கலாம்.  இப்படிப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

அடுத்த ஜெனீவா அமர்வுக்கு முதல் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபட்டு இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் செயற்படத் தவறினால் சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பிலிருந்து இலங்கை அரசு மறைந்துபோகக்கூடிய அபாயம் இருக்கின்றது.

2019 london 1 தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் : யஸ்மின் சூக்காஐ.நா.வுக்கு செல்வதால் என்ன பலன் என்று பலர் வினா எழுப்புகின்றார்கள்.  சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசு தொடர்ந்து இருப்பது முக்கியமானது.  ஏனெனில் அப்பொழுதுதான் இலங்கை அரசின் செயற்பாடுகள் சர்வதேச சமூகத்தினால் கண்காணிக்கப்படும்.

இதன்மூலம் மற்றைய நாடுகளும் இலங்கை அரசின் செயற்பாடுகள்பற்றி தீர்ப்பிடுவதற்கு ஏதுவான நிலையிருக்கும். ஏனைய நாடுகள் இலங்கை அரசின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கு தமிழ் அமைப்புக்கள் அயராது உழைக்கவேண்டும்.  அதுமட்டுமன்றி அவர்கள் ஐ.நா. மட்டிலும் அதிகமான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும்.

வெறுமனே துறைசார் வளங்களை வழங்கும் கதையை ஐ.நா. நிறுத்தி மனித உரிமைகளை கண்காணிக்கும் பணியில் ஐ.நா. அதிக கவனத்தை செலுத்தவேண்டும் என்பது வலியுறுத்தப்படவேண்டும்.

கடந்த சில வாரங்களாக இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் விடயங்கள் தொடர்பாகவோ அல்லது முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் நிக்காப் அணிவது தடைசெய்யப்பட்டது தொடர்பாகவோ ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு எந்தவிதமான அறிக்கைகளையும் வெளியிடாது மௌனமாக இருக்கின்றது.

ஆகவே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் உண்மையில் என்ன செய்யவேண்டும் என்றால், நீங்கள் இதை செய்யுங்கள் நாங்கள் இதை செய்கிறோம் என்று தமக்கிடையே வேலைத்திட்டங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட விடயங்கள் ஆராயப்படாவிட்டால் இலங்கை அரசு சர்வதேசத்தின் கண்காணிப்பிலிருந்து தப்பித்துவிடும்.

உலக அளவில் இன்று மனித உரிமைகள் விலங்கிடப்பட்டிருக்கும் ஒரு மோசமான காலகட்டத்தில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்காத பல நியாயமற்ற அரசுகள் எங்கும் வியாபித்திருக்கின்றன.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரிலே நீங்கள் எங்களுடன் இணைவீர்களானால் உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராகவிருக்கிறோம் என்று அரசுகள் கூறுகின்ற இந்தச் சூழலில் மனித உரிமைகள் என்பதன் முக்கியத்துவம் மறைந்துபோகின்றது.

இனிவரும் காலங்களில் இதுதொடர்பாக நாம் விழிப்பாக இருக்கவேண்டும்.

தொடரும்……….

தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டால் வரலாறு மீண்டும் திரும்பும்: அனைத்துலக மன்னிப்புச் சபை

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் அனைத்துலக சட்டவிதிகளின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டும். போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்களுக்கு சிறீலங்கா அரசு நீதியை வழங்கவேண்டும் அல்லது வரலாறு மீண்டும் திரும்பலாம் என முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்துலக மன்னிப்புச் சபை சனிக்கிழமை (18) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புனித ஞாயிறு இடம்பெற்ற தாக்குதல்களில் 250 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதன் பின்னரும் சிறீலங்காவில் வன்முறைகள் தொடர்கின்றன.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறை ஒன்றை உருவாக்குவதாக சிறீலங்கா அரசு நான்கு வருடங்களுக்கு முன்னர் ஜெனீவாவில் உறுதிவழங்கியிருந்தது. ஆனால் அதற்கான முயற்சிகள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றன.

இதுவே தற்போது இனங்களுக்கு இடையில் அதிகரித்துவரும் முரன்பாடுகளுக்கான காரணம். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க மறுத்தது தான் தற்போது முஸ்லீம் இனத்தவர் மீதான தாக்குதலுக்கும் காரணம்.

kepapulavu4 தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டால் வரலாறு மீண்டும் திரும்பும்: அனைத்துலக மன்னிப்புச் சபைஇனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக சிறீலங்கா தெரிவித்துவரும் போதும், சிறீலங்காவில் இனங்களுக்கு இடையில் மீண்டும் வன்முறைகள் தோற்றம் பெற்றுவருவது கவலை தருவதாக அனைத்துலக மன்னிப்புச் சபையின் தென் ஆசியப் பணிப்பாளர் பிராஜ் பற்நெக் தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் என்நலிகொட காணாமல் போயிருந்தார். 26 வருடங்கள் இடம்பெற்ற போர் நிறைவு பெற்ற பின்னர் இது இடம்பெற்றுள்ளது. 1980 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 60,000 தொடக்கம் 80,000 பேர் சிறீலங்காவில் காணாமல்போயுள்ளனர்.

உலகில் அதிகளவு மக்கள் காணாமல்போயுள்ள நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் ஒன்று. காணமல்போனவர்கள் தொடர்பில் தகவல்களை அறிவதற்கு அவர்களின் குடும்பத்தினர் தற்போதும் காத்திருக்கின்றனர்.

2006 ஆம் ஆண்டு திருமலையில் சிறப்பு அதிரடிப்படையினரால் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அதன் பின்னர் பிரான்ஸ் நாட்டின் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவில்லை.

2012 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறையில் 27 கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர், 2008 – 2009 காலப்பகுதியில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு சிறீலங்கா கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் 2006 ஆம் ஆண்டும் ஊடகவியலாளர் லசந்தா விக்கிரமதுங்கா 2009 ஆம் ஆண்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். சிறீலங்கா அரசு நீதியை நிலைநாட்டத் தவறியதற்கான உதாரணங்களே இவையாகும். நீதி நிலைநாட்டப்படுவதை அரசியல்வாதிகள் விரும்பவில்லை.

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தீர்மானம் 30-1, சிறீலங்காவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம். நான்கு பொறிமுறைகளை நடைமுறைப்படுத்த சிறீலங்கா அரசு உடன்பட்டிருந்தது.

அனைத்துலக நிபுணர்களை உள்ளடக்கிய நீதிக்கான குழுவை அமைப்பதை நிறீலங்கா அரசு நிறைவேற்றவில்லை. பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதையும் அவர்கள் முற்றாக நிறைவேற்றவில்லை.

காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைக்கான அலுவலகம் அமைக்கப்பட்டபோதும் அது காணாமல் போனவர்களுக்கான பதிலை வழங்கவில்லை.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அகற்றுவதாக சிறீலங்கா அரசு தெரிவித்தபோதும் அந்த சட்டத்தை தற்போதும் அது பயன்படுத்தி வருகின்றது. அதன் மூலம் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களை சிறீலங்கா அரசு அச்சுறுத்தி வருகின்றது.

பயங்கரவாதச் தடைச்சட்டத்தை பயன்படுத்தி தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மீது அனைத்துலக சட்டவிதிகளின் அடிப்படையில் குற்றங்கள் சுமத்தப்பட வேண்டும் அல்லது அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்.

போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் காத்திருக்கும் மக்களுக்கு சிறீலங்கா அரசு நீதியை வழங்கவேண்டும் அல்லது வரலாறு மீண்டும் திரும்பலாம்.

எனவே ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் குழுவின் ஆணையாளர் ஆகியோர் சிறீலங்கா அரசுக்கு ஒரு காலவரையறையை நிர்ணயித்து தீர்மானங்களை நிறைவேற்ற உத்தரவுகளை வழங்கவேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை கேட்டுக்கொள்கின்றது.

திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு! கைது செய்யப்படுவாரா?

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் இருந்து வரும் நிலையில் மீண்டும் ஒரு வழக்கு அவர் மீது சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மே 18ஆம் தேதி நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின கூட்டத்தில் கலந்து கொண்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவர் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தூள்ளனர்.

இதனையடுத்து இந்த வழக்கின் காரணமாக திருமுருகன் காந்தி கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மிருசுவில் படுகொலை படை அதிகாரிக்கு மரணதண்டனை உறுதி

2000ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற மக்கள் 8பேரை சிறிலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்து கழிப்பறைக் குழிக்குள் போட்டிருந்தனர்.

இந்தச் சம்பத்தில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படை அதிகாரிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று உறுதி செய்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் தப்பிச் சென்ற மகேஸ்வரன் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் சடலங்கள் மீட்கப்பட்டதுடன், ஐந்து சிறிலங்கா படையினர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25 ஆம் திகதி சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஏனைய நான்கு பேரும் போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

தீர்ப்பிற்கு எதிராக சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த விசாரணை தலைமை நீதிபதி நளின் பெரேரா, நீதியரசர்கள் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன, முர்து பெர்னான்டோ ஆகிய ஐந்து நீதியரசர் குழுவினால் விசாரிக்கப்பட்டது.

இதனையடுத்து, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கொழும்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சரியானதே என ஐந்து நீதிபதிகளும் அறிவித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; இதுவரை 89 சந்தேக நபர்கள் கைது-சிறிலங்கா காவல்துறை பேச்சாளர்

உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவீச்சு தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவியல் புலனாய்வு திணைக்களமும் (Criminal Investigation Department – CID), பயங்கரவாத புலனாய்வு பிரிவும் (Terrorist Investigations Division -TID) 89 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதில் சிஐடியினர் 69 சந்தேக நபர்களையும் ரிஐடி 20 சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

சுவீஸ் இளையோரால் Structures of Tamil Eelam: A Handbook (தமிழீழக் கட்டுமானங்கள்- ஒரு கைநூல்) வெளியிடப்பட்டது

சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் அக்கினிப் பறவைகள் அமைப்பினால் “Structures of Tamil Eelam: A Handbook” எனும் நூல் உத்தியோகபூர்வமாக நேற்று மண்டபம் நிறைந்த மக்கள் முன்னிலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.2 சுவீஸ் இளையோரால் Structures of Tamil Eelam: A Handbook (தமிழீழக் கட்டுமானங்கள்- ஒரு கைநூல்) வெளியிடப்பட்டது

சைவநெறிக்கூடத்தின் தமிழர் களறியினரால் தமிழ் ஆவணக் காப்பகமும், நூல்நிலையமும் திறந்துவைக்கப்பட்ட நிகழ்வின் ஒரு பகுதியாக இந்நூல் வெளியீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நூலின் முதலாவது பிரதி தேசத்திற்காக களமாடி உயிர்தத வீரர்களின் திருவுருவப் படங்களுக்கு காணிக்கையாக்கப்பட்டது. அத்துடன் கல்வி, ஆன்மீகம்,போராட்டம் சார்ந்து பணியாற்றியோருக்கு சிறப்புப்பிரதிகள் வழங்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து இந்நூலின் ஆக்கம் தொடர்பாகவும் அதன் தேவை தொடர்பாகவும் அக்கினிப்பறவைகள் அமைப்பினரால் விளக்கமளிக்கப்பட்டது. இதன்போது இந்த இளையோரின் முயற்சிக்கான அங்கீகாரத்தையும் வாழ்த்தினையும் மக்கள் தமது கரகோசத்தினால் அடிக்கடி வெளிப்படுத்தியத்தைக் காணக்கூடியதாக இருந்தது.

இந்நூலின் ஆக்கத்துக்காக உழைத்தவர்களுக்கும் மற்றும் இந்நூல் வெளியீட்டுக்கு ஆர்வம் காட்டி ஆதரவுதந்த ஊடகத்துறையினருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

அத்தோடு இந்நூலின் இரண்டாவது பதிப்பை உருவாக்கும்போது பலதரப்பட்டவர்களிடமிருந்தும் குறிப்பாக அவ்வத்துறைகளில் பணியாற்றிய போராளிகளிடமிருந்து மேலும் தகவல்கள் பெறப்பட்டு
இந்த நூல் மேலும் தாக்கமானதாக வெளிவர நடவடிக்கைகள் மேற்றக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

நூல்வெளியீட்டினைத் தொடர்ந்து, நிகழ்வில் கலந்து கொண்ட ஆர்வமுடன் ஏராளமான நூல்கள் வாங்கிச் சென்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.WhatsApp Image 2019 05 21 at 14.07.32 சுவீஸ் இளையோரால் Structures of Tamil Eelam: A Handbook (தமிழீழக் கட்டுமானங்கள்- ஒரு கைநூல்) வெளியிடப்பட்டதுWhatsApp Image 2019 05 21 at 14.07.22 சுவீஸ் இளையோரால் Structures of Tamil Eelam: A Handbook (தமிழீழக் கட்டுமானங்கள்- ஒரு கைநூல்) வெளியிடப்பட்டதுWhatsApp Image 2019 05 21 at 14.07.19 சுவீஸ் இளையோரால் Structures of Tamil Eelam: A Handbook (தமிழீழக் கட்டுமானங்கள்- ஒரு கைநூல்) வெளியிடப்பட்டது1 சுவீஸ் இளையோரால் Structures of Tamil Eelam: A Handbook (தமிழீழக் கட்டுமானங்கள்- ஒரு கைநூல்) வெளியிடப்பட்டதுsu2 சுவீஸ் இளையோரால் Structures of Tamil Eelam: A Handbook (தமிழீழக் கட்டுமானங்கள்- ஒரு கைநூல்) வெளியிடப்பட்டதுsu 1 சுவீஸ் இளையோரால் Structures of Tamil Eelam: A Handbook (தமிழீழக் கட்டுமானங்கள்- ஒரு கைநூல்) வெளியிடப்பட்டது

மைத்திரியின் கனடா பயணம் நிறுத்தம் – கனடா பிரதமர் புறக்கணிப்பு?

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரியின் கனடாவிற்கான பயணம் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒட்டவாவிலுள்ள இடம்பெறவிருந்த மாநாடொன்றில் பங்குபற்றுவதற்காக எதிர்வரும் 29ஆம் திகதி ஜனாதிபதி கனடாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

எனினும், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ருடோவை சந்திக்க நேரம் கிடைக்காமையே விஜயம் இரத்தானதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் இடம்பெறும் ரணில் – மகிந்தா மோதலில் மைத்திரி மகிந்தாவுக்கு ஆதரவு அளிப்பதாக மேற்குலகம் குற்றம் சுமத்தி வருவதே இந்த புறக்கணிப்புக்கான காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

சட்டம் ஒழுங்கு அமைச்சராக பொன்சேகா – போர்க்குற்றவாளிகளை மீண்டும் நியமிப்பதில் சிறீலங்கா அரசு தீவிரம்

முன்னாள் சிறீலங்கா இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு கோரி 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டட மகஜரை சிறீலங்கா ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதாக ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் M.R மாரசிங்க, தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை நாடாளுமன்றத்தில் கையளிக்க தீர்மானித்துள்ளதாக கூறினார்.

ஜனாதிபதி இந்த மகஜரை பெற்றுக்கொள்வதற்கான எந்தவொரு உத்தியோகபூர்வ நேரத்தையும் ஒதுக்கி கொடுக்கவில்லை. ஆனால் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ள அமைச்சரவைக்கூட்டத்துக்கு ஜனாதிபதி வருகை தரும்போது குறித்த மகஜரை கையளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சராக பொன்சேகாவை ஒருமுறை நியமித்துப் பார்க்குமாறு குறித்த மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த ஒக்டோபர் மாதம் ரணில் தலைமையிலான அரசாங்கத்தை நீக்கியபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சின் கீழ் காவல்துறை திணைக்களத்தையும் கொண்டு வந்திருந்தார்.

எனினும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி காவல்துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் அல்ல, சட்டம் ஒழுங்கு அமைச்சுக்குள்ளேயே இருக்கவேண்டுமென ஐக்கிய தேசிய முன்னணியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு ஐ.தே.க முன்னணியினர் விடுத்துவரும் கோரிக்கையை மறுத்துவரும் ஜனாதிபதி, சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களத்தையும் கொண்டு வருவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை விடுக்கவும் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஜனவரி மாதம் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்லா இராணுவத்தின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். 58 ஆவது படையணியை வழிநடத்திய அவர் பெருமளவான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டவர்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்காவின் படுகொலையில் தொடர்புடைய இராணுவப் புலனாய்வு அதிகாரி பிரபாத் பலுத்வற்ற மீண்டும் பணியில் கடந்த 11 ஆம் நாள் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார், தற்போது பொன்சேக்கா பணியில் அமர்த்தப்படவுள்ளார். போர்க்குற்றவாளிகளின் இந்த நியமனங்கள் சிறீலங்கா அரசு அனைத்துலக சட்டவிதிகளை முற்றாக மதிக்கவில்லை என்பதையே காட்டுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினரால் அனுஸ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியமும் இணைந்து மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன் நடாத்திய குறித்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

குறித்த நிகழ்வில் மதத்தலைவர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மாவட்ட இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பிரதான ஈகைச் சுடரினை அருட்தந்தை தேவதாசன் அவர்கள் ஏற்றிவைத்ததனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன். அஞ்சலி உரைகளும் இடம்பெற்றது.