Home Blog Page 3027

கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்கக்கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப்பேரணி

படையினர் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த பேரணி இன்று (புதன்கிழமை) காலை கிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை சென்றது.இந்த பேரணியில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து, அவரிடம் நாடளாவிய ரீதியில் காணிகள் விடுவிப்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கையொப்பம் அடங்கிய மகஜரை கையளித்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கரைச்சி பிரதேச சபை உறுப்பினர், படையினர் பல ஏக்கர் காணிகளை விடுவிக்கவில்லை எனவும் அவற்றை விடுவித்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை காணி விடுவிப்பை வலியுறுத்தி, வடக்கு கிழக்கின் பல இடங்களில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொலையாளியின் உடற்பாகங்களை அகற்ற மட்டு.நகரசபை ஏகமனதாக தீர்மானம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கள்ளியங்காட்டில் புதைக்கப்பட்டுள்ள தற்கொலைதாரியின் எச்சங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது என மட்டக்களப்பு மாநகரசபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் விசேட அமர்வு இன்று மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

இந்த அமர்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்ääமாநகரசபை உறுப்பினர்கள்ääமாநகர ஆணையாளர் க.சித்திரவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாநகர முதல்வரின் தலைமையுரையுடன் விசேட அமர்வு ஆரம்பமானது.குறித்த குண்டுதாரியின் எச்சங்களை மாநகரசபையின் எந்த அனுமதியும் பெறப்படாமல் மாநகரசபையின் அதிகாரத்திற்குட்பட்ட இந்து மயானத்தில் புதைத்ததற்கு கண்டனம் தெரிவித்த மாநகர முதல்வர் குறித்த மனித எச்சங்களை அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸ் நிலையத்தில் எழுத்துமூல முறைப்பாட்டினை செய்து அதன் ஊடாக நீதிமன்ற கட்டளையினைப்பெற்று குறித்த எச்சங்களை அகற்றுவது தொடர்பான பிரேரணையை நிறைவேற்றுவதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார்.

இதன்பொது கள்ளியங்காட்டில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியின் தலையுட்பட எச்சங்கள் புதைக்கப்பட்டதற்கு மாநகரசபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

அத்துடன் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதல்கள் குறித்தும் உறுப்பினர்கள் சிலர் உரையாற்றினர்.

இதன்போது மாநகரசபை உறுப்பினர்களில் பலர் குறித்த தற்கொலைதாரியின் எச்சங்களை இந்துமயானத்தில் புதைத்ததற்கு எதிரான கருத்துகளை முன்வைத்ததுடன் நேற்றை ஆர்ப்பாட்டம் தொடர்பிலும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இதேநேரம் இந்த அமர்வின்போது மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா உரையாற்ற முற்பட்டபோது சுயேட்சை குழுவின் மாநகரசபை உறுப்பினர் திலிப்குமார் குறுக்கிட்டதை தொடர்ந்து மாநகரசபை உறுப்பினர்களிடையே கடுமையான வாய்தர்க்கம் ஏற்பட்டது.

அதனையடுத்து மாநகரசபை முதல்வர் மற்றும் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ந.திலிப்குமார் ஈபிடிபி கட்சியை சேர்ந்த சிவானந்தராஜா,தமிழர் விடுதலைக்கூட்டணியை சேர்ந்த வ.குபேரன் ஆகியோர் சபையினை விட்டு வெளியேறிச்சென்றனர்.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மாநகரசபையின் அனுமதியில்லாது இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட முஸ்லிம் பயங்கரவாதியின் உடல் எச்சங்களை சட்ட நடவடிக்கை ஊடாக மீண்டும் அதனை தோண்டியெடுத்து வேறு இடங்களில் புதைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் இதன்போது தீர்மானத்தினை தெரிவித்தார்.

பிரித்தானியா நாடாளுமன்றத்தை ஒத்திவைக்குமாறு மகாராணியிடம் கோரிக்கை

பிரித்தானியாவின் நாடாளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்துமாறு பிரித்தானியா அரசு மாகாராணியிடம் இன்று (28) கோரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகிச் செல்வதற்கு சில வாரங்கள் உள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செப்ரம்பர் மாதம் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்கவுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் நாள் பிரித்தானியா மகாரணியின் உரை இடம்பெறவுள்ளதாகவும், அது மிகவும் ஆச்சரியமுள்ள நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கும் எனவும் பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

ஜோன்சனின் இந்த முயற்சியானது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்து செல்வதை தடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.

இதனிடையே, அரசின் இந்த முடிவு தவறானது எனவும், இதனை நடைமுறைப்படுத்தினால் தாம் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதுடன் அரசையும் பதவியில் இருந்து நீக்க முயற்சிகளை மேற்கொள்வோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டொமினிக் கிறீவ் தெரிவித்துள்ளார்.

ஆனால் நாட்டின் நலன்கருதியே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், பிரக்சிட் இற்கு முன்னர் நாம் எமது நாட்டின் நலன் தொடர்பில் சிந்திக்க வேண்டும் எனவும் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கக் படைக் கப்பல் பயணிக்க சீனா மறுப்பு இரண்டாவது தடவையாக கோரிக்கை நிராகரிப்பு

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பொருண்மியப் போர் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சீனாவின் துறைமுக நகரமான கிங்டாவோ வுக்கு விஜயம் மேற்கொள்ள அமெரிக்கா விடுத்திருந்த கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது.

சீனாவின் துறைமுக நகரமான கிங்டாவோ வுக்கு கடைசியாக பயணம் மேற்கொண்ட அமெரிக்க கடற்படை கப்பல் பென்ஃபோல்ட் ஆகும். இது 2016 இல் இடம்பெற்றது .

முன்னராக கொங் கொங் துறைமுகத்திற்கு அமெரிக்க போர்க் கப்பல்கால் பயணம் மேற்கொள்ள விடுத்திருந்த கோரிக்கையை
சீன நிராகரித்திருந்த்தது.

அமெரிக்காவின் கோரிக்கை மறுக்கப்பட்டதற்கான காரணத்தை அறிய பெய்ஜிங்கிற்கு உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பந்தன் – சஜித் பேசியது என்ன? சனாதிபதி வேட்பாளராவது யார்? – பூமிகன்

கொழும்பு அரசியலை தொடர்ந்தும் கலக்கிக் கொண்டிருக்கும் விவகாரம் ஐ.தே.க. வின் சனாதிபதி வேட்பாளர் யார் என்பதுதான். இதில் ஒரு முக்கிய திருப்பமாக, “நான்தான் வேட்பாளர்” என அறிவித்துக்கொண்டிருக்கும் சஜித் பிரேமதாச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்தது கடந்த வாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நள்ளிரவையும் தாண்டி அதிகாலை 1.00 மணி வரையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு கள நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதுதான் இந்த வாரக் கேள்வி. அதற்குப் பதிலைத் தேடுவதற்கு முன்னதாக, இந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து பார்ப்போம்.

ஐ.தே.க. தலைமையிலான ‘மெகா’ கூட்டணியை அமைப்பது குறித்து ராஜிதவின் இல்லத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் முடிவின்றி முடிந்தது குறித்து கடந்த வாரம் செய்தி வெளிவந்திருந்தது.

யாப்பு குறித்து முழுமையான உடன்பாடு ஏற்படாதததுதான் இதற்குக் காரணம். அதற்கு முன் முக்கியமான மற்றொரு சந்திப்பு இடம்பெற்றது. கட்சியில் தனக்கு ஆதரவானவர்களுடன் மட்டும் பேசிப் பலனில்லை என்பதால் தன்னை எதிர்ப்பவர்களுடனும் பேசிப் பார்ப்போம் என்ற முடிவில் காய் நகர்த்தியிருக்கிறார் சஜித். அதன் மூலம் கட்சியின் முழு ஆதரவையும் தனக்குச் சார்பாகக் கொண்டுவந்துவிட முடியும் என்பது அவரது எதிர்பார்ப்பு.

முதல் நகர்வாக ரணில் விக்கிரம சிங்கவின் தீவிர ஆதரவாளரான ராஜித சேனாரட்ணவையும்,  சம்பிக்க ரணவக்கவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் சஜித். ‘மெகா’ கூட்டணியின் சக்திவாய்ந்த பதவியான செயலாளர் பதவிக்கு ராஜிதவையே நியமிப்பதற்குத்தான் ரணில் முயற்சிக்கிறார்.Rajitha Senaratne 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped சம்பந்தன் - சஜித் பேசியது என்ன? சனாதிபதி வேட்பாளராவது யார்? - பூமிகன்

அந்தளவுக்கு அவர் ரணிலுக்கு நம்பிக்கையானவர். ஆனால், அந்தப் பதவி தனக்குத் தரப்பட வேண்டும் என சஜித் போர்க்கொடி தூக்கியிருப்பது பழைய செய்தி. இந்தப் பின்னணியில் ராஜிதவுடனான சஜித்தின் சந்திப்பு சுவாரஸ்யமானது. சஜித்தின் அடுத்த நகர்வுக்கும் அதுதான் காரணமாக அமைந்தது என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றன.

இந்தச் சந்திப்பின்போது, தன்னையே சனாதிபதி வேட்பாளராக கட்சி தெரிவு செய்ய வேண்டும் என ராஜிதவிடம் வலியுறுத்தினார் சஜித். இதற்கு ராஜித மிகவும் நிதானமாகப் பதில் கொடுத்திருக்கின்றார். “உங்களுடைய தந்தை ரணசிங்க பிரேமதாச கடுமையாகப் போராடித்தான் சனாதிபதிப் பதவிக்கு வந்தவர். அப்படித்தான் நீங்களும் போராட வேண்டும். அத்துடன் உங்களுக்கு இன்னும் காலம் இருக்கின்றது. நீங்கள் இப்போது அவசரப்படத் தேவையில்லை” என அறிவுரை கூறிய ராஜித மற்றொரு விடயத்தையும் சொல்லியிருக்கின்றார்.

“சனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற ஐ.தே.க.வுக்கு சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு அவசியம். உங்களுக்கு அந்த ஆதரவு இல்லை. உங்களுடன் இருப்பவர்களில் மங்கள சமரவீர மட்டும்தான் சிறுபான்மையினருடைய பிரச்சினைக்கு தீர்வைக் கூறுகின்றார். மற்றவர்கள் அப்படியல்ல.

நீங்களும் அவர்களுக்கான ஒரு தீர்வைக் கூறவில்லை. இதனால், சிறுபான்மையினக் கட்சிகளின் ஆதரவை உங்களால் பெறமுடியாது. அதனால், இந்தத் தேர்தலில் நீங்கள் வெற்றிபெற முடியாது” என சஜித்துக்கு நிலைமைகளை எடுத்துக்கூறிய ராஜித, “அதனால், இந்த முயற்சியிலிருந்து நீங்கள் ஒதுங்கிக்கொண்டு ரணிலுக்கு ஆதரவளியுங்கள்” என ஆலோசனையும் கூறியிருக்கின்றார்.

நிதானமாக அனைத்தையும் அவதானித்த சஜித், “சரிதான். நான் பார்க்கிறேன்” என அங்கிருந்து கிளம்பிவிட்டார்.  போனதுடன் சும்மா நிற்கவில்லை. உடனடியாகவே மங்கள சமரவீரவைத் தொடர்பு கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கு ஏற்பாடு செய்தார் என உள்ளக வட்டாரங்கள் சொல்கின்றன. இது குறித்து அமைச்சர் மனோ கணேசனுடனும் மங்கள ஆலோசனை நடத்தியிருக்கின்றார். “நல்ல விஷயம். மனம் விட்டு பேசுங்கள்”  என இதற்கு மனோ பதிலளித்திருக்கின்றார். ஐ.தே.க.வின் சார்பில் சஜித் களமிறங்குவதைத்தான் மனோவும் விரும்புவதாகத் தெரிகின்றது.

உடனடியாகவே சந்திப்புக்கான ஏற்பாடு மங்களவினால் செய்யப்பட்டது. சம்பந்தனை சந்தித்து “தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஆறு மாதத்தில் தீர்வு தருவேன்” என்றும் சொல்லிவிட்டார் சஜித். ஆனால், பிரச்சினை என்ன? தீர்வு என்ன? என்பதற்கான விளக்கத்தை அவரால் சொல்ல முடியவில்லை. மக்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சஜித் வருவதற்கு முன்னர் மங்களதான் கூட்டமைப்பின் மூவர் குழுவுடன் விரிவாகப் பேசியிருக்கின்றார். சம்பந்தனுடன், மாவை சேனாதிராஜாவும், சுமந்திரனும் இந்தப் பேச்சக்களில் கலந்துகொண்டிருந்தார்கள்.Sumanthiran Samanthan Mavai 0 சம்பந்தன் - சஜித் பேசியது என்ன? சனாதிபதி வேட்பாளராவது யார்? - பூமிகன்

எதிர்த் தரப்பான பொதுஜன பெரமுனையின் சார்பில் களமிறங்கும் கோத்தபாய ராஜபக்‌சவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் அதிகளவு ஆதரவிருப்பதாகச் சுட்டிக்காட்டிய மங்கள, சஜித்தை களமிறக்கினால் மட்டும்தான் தம்மால் அதனை ஈடுகொடுக்கக்கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

நாடு முழுவதிலும் தாம் நடத்திய துல்லியமான ஆய்வுகளின் மூலமாக இந்தத் தகவல்கள் தம்மால் பெறப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். ரணிலைக் களமிறக்கினால் தோல்வி தவிர்க்க முடியாதது என்பதால்தான், சஜித்தை களமிறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குத்தான் வந்திருப்பதாகவும் மங்கள விளக்கிக் கூறியிருக்கின்றார். அதனால், கூட்டமைப்பும் சஜித்தை ஆதரிக்க முன்வர வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரவு 10.00 மணியளவில் மங்களவின் இல்லத்துக்கு வந்த சஜித், அதிகாலை 1.00 மணி வரையில் கூட்டமைப்பின் மும்மூர்த்திக ளுடனும் பேசியிருக்கின்றார்.

“தேர்தல் குறித்த அறிவிப்பு முதலில் வரட்டும், நீங்களும் உள்களுடைய வேட்பாளர் யார் என்பதை அறிவியுங்கள். உங்களிடமுள்ள தீர்வு என்ன என்பதையும் சொல்லுங்கள். நாங்களும் எங்கள் பாராளுமன்றக் குழுவையும், ஒருங்கிணைப்புக் குழுவையும் கூட்டி எங்கள் முடிவை அறிவிக்கின்றோம்” என்ற வகையில் சம்பந்தன் பதிலளித்து சந்திப்பை முடித்துக்கொண்டார்.

ஐ.தே.க. சஜித்தை களமிறக்கினால் கூட்டமைப்பு ஜே.வி.பி. வேட்பாளரை ஆதரிக்கும் என கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் சொல்லியிருக்கும் பின்னணியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருப்பதும் கவனிக்கத்தக்கது.

2015 சனாதிபதித் தேர்தலிலும் இதேபோன்ற ஒரு பிரச்சினை உருவானது. ரணில் தான் களமிறங்க முற்பட்டபோது பொது வேட்பாளராக மைத்திரியை களமிறக்கினால்தான் மகிந்தவை தோற்கடிக்க முடியும் என சந்திரிகா முன்வந்தார். இதனை ரணில் திட்டவட்டமாக நிராகரித்தார்.

ரணிலை சமாளிக்க சம்பந்தனையே சந்திரிகா பயன்படுத்தினார். சம்பந்தனை வீடு தேடிச் சென்று சந்தித்த சந்திரிகா இது குறித்து பேசினார். அதனையடுத்தே ரணிலைச் சந்தித்த சம்பந்தன், “நீங்கள் தோல்வியடைந்து மீண்டும் ராஜபக்‌ச ஆட்சி வருவதற்கு வழிவகுக்கப்போகின்றீர்களா?” என கேட்டதையடுத்தே ரணில் ஒதுங்கிக்கொண்டார். இது பழைய செய்தி.

இப்போதும் அதேபாணியில் சம்பந்தனின் ஆதரவைப் பெற்று அதன் மூலமாக ரணிலை ஒதுங்கிகொள்ளச் செய்ய முடியும் என மங்கள முற்பட்டிருப்பதாகவே தெரிகின்றது. மங்களவைப் பொறுத்தவரையில், இது போன்ற நெருக்கடியன நேரங்களில் இராஜதந்திரமாக காய் நகர்த்துவதில் வல்லவர். 2015 ஆட்சி மாற்றத்திலும் அவரது பங்களிப்பு கணிசமானதாக இருந்தது.

இப்போது சஜித்துக்கு ஆதரவாக அவர் களமிறங்கிய போதே ரணீலின் முகாம் ஆட்டங்காணத் தொடங்கியது. மாத்தறையில் சஜித்துக்கு ஆதரவான கூட்டத்தை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தியவரும் மங்களதான். அங்கு உரையாற்றிய அவர், “ரணிலின் ஆசீர்வாதத்துடன் சஜித்தான் சனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார்” என பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் சொல்லியிருக்கின்றார்.

ஆனால், இந்தத் தருணம் வரையில் விட்டுக்கொடுப்பதற்கு ரணில் தயாராகவில்லை. அதன்மூலம் தனது அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என அவர் அஞ்சுகின்றார். இதனால், ஐ.தே.க. ஆதரவாளர்கள் குழம்பிப்போயுள்ளனர். அடுத்த வாரத்துக்குள் நெருக்கடி முடிவுக்கு வந்தாக வேண்டும். ஆனால், என்ன முடிவு என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை!

போர்க்குற்றவாளியை பாதுகாத்து வருபவருக்கு இன்ரபோல் பதக்கம் வழங்கியது

உலகின் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐ.நா ஆகியவற்றால் போர்க்குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்டவரை சிறீலங்கா இராணுவத்தளபதியாக நியமித்த சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவருக்கு உலக பாதுகாப்பு புலனாய்வு நிறுவனமான இன்ரபோல் பதக்கம் வழங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்கா வந்துள்ள இன்ரபோல் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் ஜேர்கன் ஸ்ரொக் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறீசேனாவுக்கு பதக்கம் வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறப்பாக செயற்பட்டதற்காக இது வழக்கப்பட்டுள்ளது.

ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறீலங்கா அரசு முஸ்லீம் மக்களுக்கு எதிராக கலவரங்களை ஊக்குவித்திருந்ததுடன், தமிழ் மக்களுக்கு எதிராக பாதுகாப்பு வன்முறைகளையும் அதிகரித்திருந்தது.

இதனிடையே, தமக்கு சிறப்பான வரவேற்றை சிறீலங்கா அரசு வழங்கியுள்ளதாகவும், முன்கூட்டியே தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் குழுவில் சிறீலங்கா இணைந்துகொள்ள வேண்டும் எனவும் ஸ்ரோக் தெரிவித்துள்ளார்.

தமது நிகழ்ச்சி நிரலில் பயங்கரவாதமே முதன்மையாக உள்ளதாகவும், தமது உறுப்பு நாடுகள் 17 தகவல் கோப்புக்களைப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ள ஸ்ரோக், அதில் 50,000 பயங்கரவாதிகளின் தகவல்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் தொடர்பாக சீனா,பாகிஸ்தான் படைத்தளபதிகள் பேச்சு

காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து சீன ராணுவ ஆணைய துணைத் தலைவருடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆலோசனை நடத்தியுள்ளார்.

சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் சூ கிலியாங் தலைமையிலான உயர்மட்டக் குழு, பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சீன குழு நேற்று பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்திற்கு சென்றதுடன், அங்கு சூ கிலியாங்கும், பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் ஜாவேத் பஜ்வாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின் நிறைவில் பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுகள், பிராந்திய பாதுகாப்பு, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் காஷ்மீரின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக, பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட தருணத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, சீனாவுக்கு சென்று இந்த விவகாரம் குறித்து முக்கிய தலைவர்களுடன் விவாதித்தார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் விவாதிக்கப்பட்ட போது பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு தெரிவித்தது. ஆனால் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அதிலிருந்து விலக்கிக் கொண்டன.அது இந்தியா-பாகிஸ்தான் இடையிலான விவகாரம் எனவும், அதில் மற்ற நாடுகள் தலையிட கூடாது என அந்த நாடுகள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு; இதுவே எனது தீர்வு – சஜித்

ஒற்றையாட்சி முறைக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

‘ஒற்றை ஆட்சி’ என்பதில் மெய்யான அதிகாரப்பகிர்விற்கு இடமில்லை என தமிழ் மக்கள் உறுதியாக நம்முகின்ற நிலையில் ஐதே வின் முக்கிய பிரமுகரான சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்திருப்பது பேரினவாத கட்சிக்ள் அனைத்தின் கொள்கைகளும் ஒன்றே என்பதை காட்டுவதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அங்கு தொடர்ந்து பேசிய சஜித் பிரேமதாச,

ஒற்றையாட்சி என்பது வெறுமனே எழுத்துக்களில் மாத்திரம் இருக்கக் கூடாது. நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரும் பிரிக்கப்படாத ஒற்றையாட்சியுடைய நாட்டில் வாழ்கின்றோம் என்ற உணர்வு  ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“புதிய இலங்கைக்கு நவீன ஊடகம்” என்ற தலைப்பில் கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு, அங்கு எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதில் வழங்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பில் தனது நிலைப்பாடு வெளிப்படையானது எனக் குறிப்பிட்ட அவர், ஒற்றையாட்சி முறைக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் கூறினார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் இதுவே தமது நிலைப்பாடாக இருந்தது. இந்நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருக்கின்றேன் என்றார்.

சில அரசியலமைப்புக்களில் ஒற்றையாட்சிமுறை காணப்படுகிறது, சிலவற்றில் சமஷ்டிமுறை காணப்படுகிறது. ஒற்றையாட்சியுடைய இலங்கை பற்றிப் பேசும்போது அது வெறுமனே அரசியலமைப்பு மற்றும் ஆவணங்களினால் மாத்திரமான தகுதியாக அமையக்கூடாது. சகல மதங்கள் மற்றும் சகல இனங்களையும் சேர்ந்த இலங்கையர்கள் அனைவரும் ஒற்றையாட்சியின் குணாதிசயங்களை உணர்வதாக இருக்க வேண்டும். சகலருடைய மனங்களையும் வெல்லக் கூடிய வகையில் ஒற்றையாட்சியை அமைப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இதனை அடைவதற்கு இனவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும். பாகுபாடுகளுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். சிறுபான்மை பெரும்பான்மை என்ற சொற்பதங்களைப் பயன்படுத்த நான் விரும்பவில்லை. நாட்டிலுள்ள ஏதாவது ஒரு தரப்பினர் தாம் தீங்கிழைக்கப்பட்டதாக உணர்ந்தால், அவர்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும். மனிதநேய கொள்கைகளின் அடிப்படையில் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதன் ஊடாகவே அனைவரும் ஒற்றையாட்சியான நாட்டில் வாழ்கின்றோம் என்ற மனநிலையை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

பளையில் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள் தொடர்பில் விசாரணைகள்

பளை பகுதியில்  மீட்க்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது .

குறித்த அயுதங்கள் எங்கிருந்து எவ்வாறு கொண்டுவரப்பட்டன, அவற்றை மறைத்து வைத்ததன் நோக்கம், அதற்கு உதவியவர்கள் தொடர்பில்  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, தற்போது பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரின் தடுப்பில், யாழ். பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் பளை சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனின் வாக்கு மூலத்துக்கு அமைய  இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு கூறுகிறது.

T 56 வகைத் துப்பாக்கி ஒன்று,  அந்த துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் இரு மெகசின்கள், அத்துப்பககிக்கு பயன்படுத்தப்படும் 120 தோட்டாக்கள், 11 கைக்குண்டுகள்,  பீ.ஈ.10 ரக வெடிபொருள் என சந்தேகிக்கபப்டும் வெடிபொருள் 10 கிலோ, தொலைநோக்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இவ்வாறு மீட்கப்பட்டதாக படையினர் கூறுகின்றனர்

இதவேளை முக்கியஸ்தர்கள் மூவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், புலிகள் அமைப்பை மீள ஏற்படுத்த இரகசிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படும் இரு விடயங்கள் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனிடம் தீவிர விசாரணைகள் தற்போதும் இடம்பெற்றுவருவதாக அறிய முடிகிறது.

எனினும் இந்த கைதுகளும் குற்றச்சாட்டுகளும் உள்நோக்கம் உள்நோக்கம் கொண்டவை என பரவலாக நம்மைப்படுவது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் படையினர் மக்கள் மீது தாக்குதல் பெண்கள் உட்பட பலர் காயம்.

கடந்த 21 ஆம் திகதி உயித்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய முகமது ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது

இதனையடுத்து இவ் உடற்பாகங்களை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் நேற்றுமுன்தினம் இரவு பொலிசார் இரகசியமாக புதைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மாலை பொதுமக்களுக்கு தெரியவந்ததையடுத்து பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மாநகரசபை உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயானத்துகுமுன் உள்ள வீதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்காரர்கள் மட்டக்களப்பு  கல்லடி பாலத்தின் நடுப்பகுதியில் வீதியை மறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்  இளைஞர்கள் பெண்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வீதியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

மாலை 6 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டம் இரவு 9 மணிவரை நீடித்த நிலையில் மட்டக்களப்பு கொழும்பு மற்றும் கல்முனை அம்பாறை போன்ற பிரதேசங்களுக்கான போக்குலரத்து முற்றகத் துண்டிக்கப்பட்டது இததனால் மட்டு கல்முனை வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது

இதனை தொடர்ந்து பொலிசார் கலகமடக்கும் பொலிசார் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு ஆர்பாட்டகாரருடன் பொலிசார் பேச்சுநாத்தியபோது ஆர்பாட்டகாரர்கள் அரசாங்க அதிபர் வந்து புதைக்கப்பட்ட உடற்பாகங்களை தோண்டி எடுப்பதாக உத்தரவாதம் தரும் வரை வீதியை விட்டு விலகமாட்டோம் கோரிக்கை விடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன்ர்

இரவு 9.00 மணிக்கு பொலிசார் ஆர்பாட்டகாரர் மீது கண்ணீர்புகை குண்டு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவர்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்து தரத்தியடித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் இத் தாக்குதலின் போது பலர் காயமடைந்ததுடன் இரு பெண்கள் உட்பட நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு நகரில் பதற்றம் ஏற்பட்டதுடன் கடைகள் யாவும் மூடப்பட்டு வீதி வெறிச்சேடியதுடன் அப்பகுதில் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்

இதேவேளை கறித்த உடற்பாகங்களை பொது மயானத்தில் அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதனை கடந்த ஜூன் 11 ஆம் திகதி மட்டக்களப்பு புதூர் ஆலையடி மயானத்தில் புதைக்க பொலிசார் முற்பட்டபோது பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தததையடுத்து அங்கு புதைப்பது கைவிடப்பட்டது