Home Blog Page 29

இலங்கை அரசின் இன அழிப்பு நோக்கத்துக்கான சான்றாகிறது செம்மணி!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வரைவில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், ஆக்கபூர்வமான முறையில் இழப்பீடுகளை வழங்கல், மீள்நிகழாமையை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய 3 பிரதான கூறுகளை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான விடயங்கள் உள்ளடக்கப்படவேண்டும் என சர்வதேச நாடுகளில் இயங்கிவரும் 18 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இணையனுசரணை நாடுகளுக்கு கூட்டாகப் பரிந்துரைத்துள்ளன.

இதுகுறித்து பிரித்தானியத் தமிழர் பேரவை, புதுடில்லி தமிழ்ச்சங்கம், ஜேர்மனி தமிழர் கொள்கைப் பேரவை, சுவிட்ஸர்லாந்து தமிழ் நடவடிக்கைக் குழு என்பன உள்ளடங்கலாக பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, ஜேர்மனி, நெதர்லாந்து, கனடா, அயர்லாந்து, தென்னாபிரிக்கா, சுவிட்ஸர்லாந்து, மொரீஸியஸ் ஆகிய நாடுகளைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் 18 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டிணைந்து இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள், பேரவையில் அங்கம்வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பிவைத்திருக்கும் பரிந்துரை ஆவணத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை கடந்த ஏழு தசாப்த காலமாக தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பிலும், போர்க்குற்றங்களிலும், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களிலும் ஈடுபட்டிருப்பதுடன் அதன் விளைவாக சுமார் பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு அகதிகளாகத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை உள்ளிட்டவற்றைத் தொடர்ந்தும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்கிறது. சாட்சியங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்திய நீதி இன்னமும் நிலைநாட்டப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், ஆக்கபூர்வமான முறையில் இழப்பீடுகளை வழங்கல், மீள்நிகழாமையை உறுதிப்படுத்தக்கூடியவகையில் அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய 3 பிரதான விடயங்களை முன்னிறுத்தி உடனடி நடவடிக்கையைக் கோரும் வகையில் எதிர்வரும் இம்மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய பிரேரணை வரைவு அமையவேண்டும்.

குறிப்பாக அண்மையில் யாழ். செம்மணியிலும், திருகோணமலையின் சம்பூரிலும், மன்னாரிலும் கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகளும், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்குச் சொந்தமானவை உள்ளடங்கலாக அங்கு அடையாளங்காணப்பட்ட மனித எச்சங்களும் இலங்கை அரசின் இனப்படுகொலை நோக்கத்துக்கான வலுவான ஆதாரங்களாகக் காணப்படுகின்றன. எனவே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை 1948 தொடக்கம் இப்போது வரை நிகழ்த்தப்பட்ட சகல அட்டூழியங்கள் தொடர்பிலும் ஆதாரங்களை திரட்டும் வகையில் விரிவுபடுத்தப்படவேண்டும்.

அதேபோன்று இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உடனடியாகப் பாரப்படுத்துவதற்கு அவசியமான வலுவான ஆதாரங்களுடன்கூடிய 15 – 20 முக்கிய வழக்குகளை அடையாளம் காணவேண்டும்.

அடுத்ததாக இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றங்களுக்குப் பரிந்துரைத்தல், உலகளாவிய நீதிப்பொறிமுறையை நடைமுறைப்படுத்தல், இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை ஒன்றை ஸ்தாபிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் ஐ.நா பொதுச்சபைக்குப் பரிந்துரைக்கப்படல் என்பவற்றுக்கான கூறுகள் புதிய பிரேரணையில் உள்ளடக்கப்படவேண்டும்.

அத்தோடு படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவித்தல், தமிழர் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணித்தல், மீள்குடியேற்றம், நிலையான வாழ்வாதாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டு முன்னெடுப்பதற்கு சர்வதேச அனுசரணையுடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஐ.நா நிபுணர்கள் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இடைக்கால உள்ளகக் கட்டமைப்பொன்று நிறுவப்படவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் : 1,500 உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பதிவான நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது.

குனார் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 06 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.

நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 800 க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதையுண்டு உயிரிழந்ததாக முதற் கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் காயமடைந்தனர்.

பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வடையலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

செம்மணியில் அகழ்வுகள் தொடர்கின்றன…

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதை குழியில் இருந்து இன்றைய தினம் (02) மேலும் 4 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்றைய தினம் 41வது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது 222 மனித என்புக்கூடுகள் மொத்தமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இன்றைய தினம் 8 மனித என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் இதுவரையிலும் 206 மனித என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் தொடர்ச்சியான அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பாதீடு தயாரிக்கப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் குறித்த பாதீடு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை ஒன்றோடு ஒன்று இணைந்தவாறு மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன் விடுவிக்கப்பட்டார்…

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்த வர்மன் என்ற அரவிந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் (02) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் பேஸ்புக் பக்கத்தில் பதிவுகள் இட்டதாகக் கூறி அவர் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் பேஸ்புக் பதிவு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக அவர் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதன்பின்னர், வவுனியாவில் வசித்து வந்த அவர், போராளிகள் நலன்புரிச் சங்கம் என்ற அமைப்பின் மூலம் செயல்பட்டு வந்த நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன், இன்று (02) ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் பல பிணை நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

கச்சதீவில் சுற்றுலா அபிவிருத்தி திட்டத்துக்கான சாத்தியம் குறித்து ஆராய்வு

நெடுந்தீவு மற்றும் கச்சதீவை ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் இணைந்து நேற்று (01) கச்சதீவுக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்தார். ”கச்சதீவு பகுதியில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் எமது மீனவ சொந்தங்களின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு திட்டங்கள் பற்றி கடற்படையினரிடம் கேட்டறிந்தோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்குரிய பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, நெடுந்தீவு மற்றும் கச்சதீவை ஒன்றிணைத்த வகையில் சுற்றுலா திட்டமொன்றை மேற்கொள்வதற்குரிய சாத்தியப்பாடு பற்றியும் கேட்டறியப்பட்டது. நெடுந்தீவுக்கு தற்போது சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் அதனை கச்சத்தீவு வரை மேம்படுத்துவதற்குரிய திட்டம் உள்ளது என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வடக்கு – தெற்கில் இனவாத அரசியல் போக்குகள் மீண்டும் தலைதூக்குவதாக ஜனாதிபதி!

தோல்வியடைந்த அரசியல்வாதிகள் தாங்கள் இழந்த அதிகாரத்தை மீட்டெடுக்க வடக்கு மற்றும் தெற்கில் இனவாத அரசியல் போக்குகளை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (02) தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பில் வடக்கு தெங்கு முக்கோண வலய திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனை தெரிவித்த அவர், இன அரசியல் ஒருபோதும் மக்களுக்கு நன்மை பயக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

“வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் அரசியல்வாதிகளின் ஒரு கருவியாகவுள்ளது. இனவாதம் என்பது தோற்கடிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மீண்டும் அதிகாரத்தை தமதாக்க பயன்படுத்தும் ஒரு ஆபத்தான கருவியாகும்”.

“நாட்டில் இனவாத அரசியலுக்கு ஒருபோதும் அரசாங்கம் இடமளிக்காது என்பதை உறுதியளிக்கிறோம். மக்களாகிய நீங்களும் எந்த வகையான இனவாதத்தையும் நிராகரிப்பீர் என நான் நம்புகிறேன்” என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

முன்னாள் இராணுவத்தினரை அரசாங்கம் காட்டி கொடுப்பதாக மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம்

இலங்கையில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரப் போராடிய இரராணுத்தினரை ஒடுக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

தற்போதைய ஆட்சியாளர்கள் போர் வீரர்களுக்கு எதிராக இறையாண்மை சித்தாந்தத்தைத் தூண்டும் வகையில் செயல்படுகிறார்கள் என்றும் அந்தக் கருத்தைக் கொண்டவர்களைத் திருப்திப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர பல்வேறு வெளிப்புறக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றது என்பது இரகசியமல்ல. அந்தக் கட்சிகளின் முதன்மை நோக்கங்களில் ஒன்று, தற்போதைய ஆட்சியாளர்கள் போர் வீரர்களைக் கடுமையாக ஒடுக்கச் செய்வதாகும்.

தாய்நாட்டிற்கான அமைதியின் வெற்றியை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் போர்வீரர் நினைவு நிகழ்வில் இந்த அரசாங்கம் காட்டிய புறக்கணிப்பு, கடந்த போர்வீரர் நினைவு நிகழ்வின் போது தெளிவாக வெளிப்பட்டது.

பயங்கரவாதத்தை கொண்டாடுவதில் அரசாங்கம் மிகவும் கொடூரமான நடைமுறையைப் பின்பற்றியது.
நாட்டுக்கு வெளியே பயங்கரவாதிகளுக்கு நினைவுச்சின்னங்கள் கட்டப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டபோதும், தற்போதைய அரசாங்கம் இது தொடர்பாக அர்த்தமுள்ள இராஜதந்திர தலையீட்டை மேற்கொள்ளத் தவறிவிட்டது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அந்த நேரத்தில் போர்க்களத்தில் இருந்த துணிச்சலான போர்வீரர்கள் எதிர்காலத்தில் ஒரு நாள் முன்னாள் பயங்கரவாத உறுப்பினர்களுக்கு முன் தியாகிகளாகத் தோன்ற வேண்டியிருக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை.  இவை அனைத்தும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவும், அதை வீரமாக உயர்த்தவும் செய்யப்படுகின்றன.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்கும் போது அரசின் இருப்பு மற்றும் சமூகத்தின் பொது நலனுக்கான இராணுவத் தலையீடு என்பது உலகின் எந்த நாடும் பின்பற்றும் பொதுவான தரமாகும்.
அந்த உலகளாவிய கொள்கையின் அடிப்படையில் ஜனநாயக தலையீடு பின்னர் கேள்விக்குள்ளாக்கப்படுவது அசாதாரணமானது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் எந்த வகையான விசாரணை அல்லது கேள்விக்கு உட்படுத்தப்படாத நிலையில், அரசின் ஜனநாயக தலையீடு இவ்வளவு தீங்கிழைக்கும் வகையில் கேள்விக்குள்ளாக்கப்படுவது ஒரு வகையில் ஆச்சரியமாக இருக்கிறது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரன்னாகொடவின் ஆங்கிலப் புத்தகத்திற்கு பிரித்தானியாவில் தடை

Why did Penguin India publish Admiral Karannagoda, alleged war criminal?

இலங்கையின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் கடற்படை அதிகாரியின் சுயசரிதையின் ஆங்கிலப் பதிப்பு, சர்வதேச புத்தக விற்பனை நிறுவனத்தால் பிரித்தானிய சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த குமார் ஜயதேவ கரன்னாகொடவின் சுயசரிதையின் ஆங்கிலப் பதிப்பை AmazonUK பிரித்தானிய சந்தையில் இருந்து நீக்கியுள்ளது.

சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்காக பிரித்தானியாவால் தடை விதிக்கப்பட்ட ஒருவரின் வெளியீட்டை விற்பனை செய்வது பிரித்தானிய சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் (ITJP) எச்சரித்ததை அடுத்து, கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவின் ‘The Turning Point: The Naval Role in Sri Lanka’s War on LTTE Terrorism’ விற்பனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இலக்கு வைக்கப்பட்ட தடைகளுக்கு உட்பட்ட ஒருவருக்கு பதிப்புரிமை மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட வளங்களை வழங்குவது பிரித்தானியாவில் ஒரு குற்றமாகும். இதற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இலங்கை கடற்படைத் தளபதியாக இருந்தபோது, 2008-2009 காலகட்டத்தில் கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இளைஞர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வசந்த கரன்னாகொட முக்கிய சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ளார்.

Amazon pulls sanctioned Sri Lankan war criminal's book, Penguin India under  fire | Tamil Guardian

கடத்தப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருகோணமலையில் உள்ள கன்சைட் நிலக்கீழ் வதை முகாம், கொழும்பு சைத்திய வீதியில் அமைந்திருந்த ‘பிட்டு பம்புவ’ தடுப்பு முகாம் ஆகியவை அப்போதைய கடற்படைத் தளபதியாக இருந்த வசந்த கரன்னாகொடவிற்கு தெரிந்தே கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவால் நடத்தப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“லெப்டினன்ட் கமாண்டர் ஹெட்டியாராச்சி மற்றும் அவரது குழுவினருக்கு கடற்படைத் தலைமையகத்தில் உள்ள சட்டவிரோத சிறைச்சாலைகளை இயக்குவதற்கு அனுமதி அல்லது அதிகாரம் இல்லை, மேலும் இது முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட அறிந்திருந்த மற்றும் ஒப்புதலுடன் இயங்கியது என்பதில் நியாயமான சந்தேகம் உள்ளது, ” என நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

போர்க்களத்தில் அவரது சிறந்த துணிச்சலை அங்கீகரிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் அட்மிரல் ஒப் தி ப்ளீட் வசந்த கரன்னாகொடவுக்கு ரண சூர பதக்கத்தை வழங்கியது. மேலும் அவர் விஷிஸ்ட சேவா விபூஷணம், உத்தமசேவா பதக்கம், இலங்கை குடியரசு ஆயுதப் சேவை பதக்கம், 50ஆவது சுதந்திர தினபதக்கம், இலங்கை பாதுகாப்பு படைகள் நீண்ட கால சேவை பதக்கம், ஜனாதிபதியின்பதவியேற்பு பதக்கம், 50வது சுதந்திர ஆண்டுவிழா நினைவு பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு ஒபரேஷன் பதக்கம், பூர்ண பூமி பதக்கம் மற்றும் ரிவிரெச பதக்கம் போன்ற பதக்கங்களையும் பெற்றுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

மன்னார் மக்களின் போராட்டம் ஒரு மாதத்தை எட்டியது…

இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு தீவின் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் அழிவை ஏற்படுத்தும் காற்றாலைத் திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் அதே நாளில் பல பாரிய அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பித்து வைக்க வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மன்னார் தீவில் இரண்டு புதிய காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, ஓகஸ்ட் 2, 2025 அன்று மன்னார் நகரில் ஆரம்பமான போராட்டத்தில் இணைந்த சிவில் ஆர்வலர் எஸ்.ஆர். குமரேஸ், போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என நேற்றைய தினம் திங்கட்கிழமை (01) தெரிவித்தார்.

“இந்த காற்றாலையால் மன்னார் தீவு இன்று அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. இந்த தீவில் வாழும் 75,000 மக்களும் இடம்பெயர வேண்டிய ஒரு சூழல் ஏற்படப்போகிறது.

அந்த மக்கள் இடம்பெயர்ந்து பெரு நிலப்பரப்பில் குடியேற வேண்டிய நிலைமை ஏற்படும். ஆகவே இவ்வாறான அழிவுகளை நிறுத்த வேண்டும். காற்றாலைக்கு எதிரான இந்த போராட்டம் தொடரும்.”

மன்னார் தீவில் மேலும் காற்றாலைகள் அமைக்கப்பட்டால், ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தீவின் மக்கள் வேறு இடங்கனுக்கு இடம்பெயர வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டும் சிவில் சமூக ஆர்வலர், இது போர் முடிந்து பல ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்கனவே காணிப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள வடக்கு மக்களுக்கு இடையில் ஒரு மோதலை ஏற்படுத்தும் என வலியுறுத்துகின்றார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் ஆரம்ப விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நாட்டைச் சுற்றியுள்ள கடல், தீவுகள் மற்றும் காணிகளை மக்களுக்காகப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது எனவும், அதில் எந்த விதமான  அழுத்தத்திற்கும் இடமளிக்கப்படாது எனவும் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மன்னார் ஒரு சொர்க்கம் அல்ல என எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி கூறியதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விலைமனுக் கோரலின் பின்னர் மன்னார் தீவில் ஆரம்பிக்கப்பட்ட 20 மெகாவாட் மற்றும் முன்மொழியப்பட்ட 50 மெகாவாட் காற்றாலைத் திட்டம் இரண்டு ஆகியவற்றிள் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஜனாதிபதி அண்மையில் தீர்மானித்திருந்தார்.

மன்னார் தீவில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்காக விசையாழிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எதிராக ஓகஸ்ட் 11ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்த பிரதேச மக்கள், மன்னார் தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கடுமையாக வலியுறுத்தினர்.

பொதுமக்களின் கடுமையான எதிர்ப்புகளை அடுத்து, காற்றாலை மின் உற்பத்தி நிலைய விசையாழிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் சாரதிகள் மன்னார் பிரதான பாலத்தின் அருகே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதோடு, மேலும் அங்குள்ள பொருட்களைப் பாதுகாக்க பொலிஸார் நிறுத்தப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

மன்னார் பகுதியில் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் ஓகஸ்ட் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றதோடு, கலந்துரையாடலின் போது, நாட்டின் எரிசக்தித் தேவைகள் மற்றும் பொருளாதாரத்திற்கு இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அபிவிருத்தித் திட்டங்களை மேலும் தாமதப்படுத்துவதால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு காரணமாக முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க முடியாது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எனவே, அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்தும்போது அனைத்து தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் எனவும் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் பகுதியில் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எந்த நேரத்திலும் தீர்வுகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது எனவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறியிருந்தார்.

ஒரு மாதத்தைக் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், பொது அமைப்புகள் காற்றாலை திட்டங்களை மீளப்பெறும் வரை போராட்டை நிறுத்தப்போவது இல்லை என தெரிவித்துள்ளனர்.

ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் !

ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாலுள்ள, காலி வீதியில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அதன்படி, காலி முகத்திடல் பகுதியில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிய காலி வீதியில்  போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் குழுவின் 6 பேர் தங்களது ஆர்ப்பாட்டத்திற்கான கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.