யாழ். முத்திரச்சந்தியிலுள்ள சங்கிலிய மன்னனின் சிலைக்கு முன்பாக இன்று இடம்பெற்ற சங்கிலி மன்னனின் 400ஆவது ஆண்டு நினைவு தினத்தை, சிவசேனை அமைப்பு ஒழுங்குபடுத்தியிருந்தது.
இதில் தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், இந்தியாவின் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பா.ஜ.க. பிரமுகர், யாழ். இந்தியத் துணைத்தூதல், யாழ். மாநகரசபை முதல்வர், ஆணையாளர் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட கடைசி தமிழ் மன்னனான சங்கிலியனின் ஆட்சி நிறைவின் பின்னர் ஈழத் தமிழர் காலனியாதிக்கவாதிகளிடம் தமது இறைமையை இழந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் பிரித்தானியாவில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கொள்கையுடன் புதிதாக நைஞல் பெராச் தலைமையில் உருவாக்கப்பட்ட பிரக்கிச் குழு பெரும் வெற்றியீட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான கடும்போக்கு கொண்ட பெராச் இன் கட்சியின் இந்த வெற்றி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று (26) இரவு வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் படி பிரக்சிற் கட்சி 28 ஆசனங்களையும், லிபரல் டெமோக்கிரட்டிவ் கட்சி 15 ஆசனங்களையும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 10 ஆசனங்களையும், பசுமைக் கட்சி 7 ஆசனங்களையும், ஆளும் கொன்சவேட்டிவ் கட்சி 3 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது குறி;த்த விவாதங்களில் ஏற்பட்ட பின்னடைவுகளைத் தொடர்ந்து கடந்த வாரம் பிரித்தானியாப் பிரதமர் தனது பதவியில் இருந்து விலகிய நிலையில் தற்போதைய தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு பலத்த பின்னடைவைக் கொடுத்துள்ளது.
பிரித்தானியாவின் வரலாற்றில் கொன்சவேட்டிவ் கட்சி சந்தித்த மிகப்பெரும் தோல்வி இது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தனது கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்து பேச்சுக்களில் ஈடுபடும் குழுவில் தனது கட்சிக்கும் இடம் வேண்டும் என பெராச் தெரிவித்துள்ளார்.
10 தொகுதிகளில் 9 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பெராச் இன் கட்சி 32 விகித வாக்குக்களைப் பெற்றுள்ளது.
இது ஒரு பெரிய வெற்றி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் நாள் வெளியேறுவதற்கான கால எல்லையை நாம் கொண்டுள்ளோம். அந்த நாள் தான் நாம் வெளியேறும் நாளாக இருக்கும் என தேர்தல் முடிவுகளின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெராச் தெரிவித்துள்ளார்.
எமக்கு மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர், நாமும் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெறவேண்டும், எதிர்வரும் ஐந்து மாதங்களில் நாம் ஒரு தீர்மானத்தை எட்டுவோம். அதன் மூலம் எந்த நிலை வந்தாலும் நாம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திரேசா மேயின் பிரக்சிற் பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ள பிரதம உறுப்பினரான ஒலி றொபின்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா சேர்ந்து இருப்பதற்குரிய பணிகளை இரகசியமாக செய்வதாக பிரக்சிற் குழுவின் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நேபாள தலைநகர் காத்மண்டுவில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலியாகினர். நேபாள தலைநகரான காத்மண்டுவில், அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடித்துள்ளது. சுகேதரா, கட்டிகுலோ மற்றும் நாக்துங்கா உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மேலும் காத்மண்டுவின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டதாக 9 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க நேபாள இராணுவம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். எனினும் எந்த இயக்கமும் தற்போது வரை பொறுப்பேற்கவில்லை.
நரேந்திர மோடியின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே கெட்ட செய்தி எனவும் இந்தியாவின் ஆன்மா இருண்ட அரசியலில் தொலையப்போகிறது எனவும் ‘தி கார்டியன்’ பத்திரிகை விமர்சித்துள்ளது.
17வது மக்களைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மே 30 தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். இந்நிலையில் இது பற்றி பேசும் ‘தி கார்டியன்’ பத்திரிகையின் தலையங்கத்தில் மோடியின் வெற்றி உலகத்துக்கே கெட்ட செய்தி எனக் கூறியுள்ளது.
“வரலாற்றில் மிகப்பெரிய தேர்தலில் ஒரே நபராக வெற்றி பெற்றிருப்பவர்: நரேந்திர மோடி. 1971க்குப் பின் அடுத்தடுத்த தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த முதல் பிரதமராக உருவெடுத்துள்ளார் திரு மோடி. 2014ல் அவரது பாரதீய ஜனதா கட்சி வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற கீழவையில் (மக்களவை) அறுதிப்பெரும்பான்மை பெற்றது. முந்தைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பல ஊழல் புகார்களால் பறிபோனது. அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சியில் பொருளாதாரத்தை நாசம் செய்திருந்தாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை விரிவாக்கியிருக்கிறார் திரு மோடி. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே கெட்ட செய்தி.” என ‘தி கார்டியன்’ தலையங்கம் தொடங்குகிறது.
“பாஜகவின் இந்து தேசியத்தை நோக்கிய அரசியல் இயக்கம் இந்தியாவை மோசமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. சமூகத்தில் இந்து சமூக மேல் சாதிகளின் ஆதிக்கத்தை ஏற்படுத்தும் பிரிவினைவாதம்,கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான பொருளாதார வளர்ச்சி, பண்பாட்டு அடிப்படைவாதம், தீவிர வெறுப்பு மற்றும் அரசு அதிகாரத்தின் பிடியை இறுக்குவது ஆகியவற்றுக்கு துணை நிற்கிறது. திரு மோடிக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி இந்தியாவின் ஆன்மாவை இருண்ட அரசியலுக்குள் தொலையச் செய்யும். 195 மில்லியன் இந்திய முஸ்லிம்களை இரண்டாம தர குடிமக்களாக பார்க்கும்.” எனவும் விமர்சித்துள்ளது.
மேலும், “பிரசாரத்தின்போது திரு மோடியின் வலதுசாரி தரப்பினர் முஸ்லிம்களை கரையான்கள் எனக் கூறினர். அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். முஸ்லிம்கள், பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவை இழப்பதற்கு அஞ்சும் அரசியல் தரப்பிடம் சிக்கித் தவிக்கும் அரசியல் அகதிகளாக உள்ளனர். தேர்தலுக்கு முன் 24 முஸ்லிம் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தனர். இது மொத்த எண்ணிக்கையில் வெறும் 4% மட்டுமே. 1952லிருந்து மிகக் குறைந்த எண்ணிக்கை இதுவே. இது இன்னும் சுருங்கும் வாய்ப்பு உள்ளது.” என்கிறது.
சிங்கள, பௌத்த தேசியவாதமென்பது இலங்கைத் தீவில் வாழ்கின்ற மக்களை ஒன்றுக்கொன்று முரண்பட வைத்துத் தன்னையே அழித்துக் கொள்கின்றதொரு சித்தாந்தம். இப்படியான சித்தாந்தத்தைக் கொண்ட தேசியவாதத்திற்கு ஒரு தெளிவான கொள்கை இருக்கப் போவதில்லை. இதனால் தான் அவ்வாறான சித்தாந்தம் இந்த ஒட்டுமொத்த தீவையும் அழிவுப் பாதை நோக்கி கொண்டு சென்று கொண்டிருக்கிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
இலங்கை அரசென்பது மிகவும் ஊழலுக்கு உட்படுத்தப்பட்ட, காசுக்கு எதுவும் செய்யக் கூடிய தோற்றுப் போனதொரு அரசு. அரசாங்கத்தை மாற்றினால் அடிப்படையில் ஒட்டுமொத்த அரசினுடைய அல்லது நாட்டினுடைய கொள்கையை மாற்றியமைக்கக் கூடும். ஒரு அரசியல்வாதியை வேண்டிக் கொண்டால் இந்த நாட்டினுடைய அடிப்படை நிலைப்பாடுகளைத் தலைகீழாக மாற்றலாம் என்றளவுக்கு ஊழல் மோசடியில் மூழ்கிப் போயுள்ளதொரு அரசு.அப்படிப்பட்ட அரசுக்குத் தெளிவானதொரு கொள்கை இருக்கப் போவதில்லை.
முன்னர் சிங்களத் தேசிய வாதத்துக்குத் தமிழருடைய உரிமைப் போராட்டம் அவர்களுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகவிருந்தது. இனவாதத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த இலங்கைத் தீவும் சிங்கள பௌத்தர்களுக்கே உரித்தானது என்ற சித்தாந்தத்திற்குச் சவால் விடும் வகையில் தமிழர்களுடைய உரிமைப் போராட்டம் அமைந்திருந்தது. இதனால் தான் தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்திற்குப் பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி இனப்படுகொலை மூலம் அந்தப் போராட்டத்தை மௌனிக்க வைத்தார்கள்.
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தான் உண்மையான பயங்கரவாதம். கொள்கை எதுவுமில்லாமல் வெறுமனே அழிவுகளை மட்டும் ஏற்படுத்தும் நோக்குடன் செயற்படுத்தப்படுபவற்றைத் தான் பயங்கரவாதமெனக் கருத முடியும். ஈவிரக்கமற்ற வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இவ்வாறான பயங்கரவாதத்திற்கெதிராக எடுக்கின்ற நடவடிக்கை ஒட்டுமொத்தமாக முஸ்லிம் இனத்தையே அழிக்கும் வகையிலுள்ளது. இவ்வாறான நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்குத் தற்போது அச்சுறுத்தலில்லாத தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்தைக் காரணம் காட்டுகிறார்கள்.
எனினும், உரிமைப் போராட்டத்திற்காக உயிரிழந்த பொதுமக்கள், போராளிகள் அனைவரையும் நினைவு கூருகின்ற நாளை இனப் படுகொலை தினமாக அனுஷ்டிப்பதன் மூலம் தங்களுக்கு ஏற்படவிருக்கும் கெட்ட பெயரை இல்லாமல் செய்ய வேண்டுமென்பதற்காக மாணவர்களைக் கைது செய்தார்கள்.
எனவே, நியாயங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையில் அமைவதாகத் தெரிந்தாலும் கூட இறுதியில் அவர்களுடைய நலன்கள் மாத்திரம் தான் பேணப்படுகிறது.
எங்களைப் பொறுத்தவரை இங்குள்ள சிங்கள, பௌத்த மக்களைத் தவிர இங்குள்ள அனைத்து மக்களுக்கும் சிங்கள பௌத்த தேசியவாதம் தான் பிரச்சினையாகவுள்ளது. இந்த சித்தாந்தத்தை நாமனைவரும் இணைந்து முற்றுமுழுதாகத் தோற்கடிக்க வேண்டும். இதனைத் தோற்கடிக்காமல் இலங்கைத் தீவில் நிரந்தர சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில், ‘இலங்கைத் தமிழர்களின் காலவரையறையற்றதொரு பாரம்பரியம்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இரண்டு நாள் கண்காட்சியில் இலங்கை உருவானது முதல் தமிழ் கலாசாரத்தின் தொன்மை வரையும், உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதல் இறுதி வரையும் பல்வேறு அம்சங்களை விளக்கும் ஓவியங்கள், மாதிரி பொருட்கள், ஆவணப்படங்கள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் மட்டுமின்றி, பிரிட்டனிலேயே பிறந்து வளர்ந்த புலம் பெயர்ந்தோரின் அடுத்த தலைமுறையினர் மற்றும் இலங்கையுடன் எவ்வித தொடர்பும் கொண்டிராத பிரிட்டன் வாழ் மக்கள், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 2,500க்கும் மேற்பட்டவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் போரின் கொடுமைகளை விளக்குவதுடன், இலங்கை தமிழர்களின் வரலாற்றை இளம் சந்ததியினருக்கு எளிதில் புரிகிற வகையில் இந்த கண்காட்சியை ‘தமிழ் தகவல் நடுவம்’ஏற்பாடு செய்திருந்தது.
இது தொடர்பாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் விளக்கமளிக்கையில், இந்திய துணைக்கண்டத்தில் இருந்து பிரிந்து இலங்கை உருவானது முதல் அங்கு வாழ்ந்த தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், உணவுப் பழக்கம், அரசியல் நிர்வாகம், இசை ஆகியவை மட்டுமின்றி உள்நாட்டுப் போரின்போது சந்தித்த பேரவலம் போன்றவற்றை விளக்கும் ஓவியங்களை உலகம் முழுவதுமுள்ள புகழ்பெற்ற ஓவியர்களிடமிருந்து பெற்று காட்சிப்படுத்தியிருப்பதாகக் கூறினர்.
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்த இடைக்கால தமிழீழ அரசின் தேசியக் கொடி, வரைபடம், படைப்பிரிவுகள், உள்துறை, பள்ளி-கல்லூரிகள், மருத்துவ வசதிகள், வங்கிகள், கலை பண்பாட்டு பிரிவு, புனர்வாழ்வு மையங்கள் உள்ளிட்ட முழுமையான அமைப்புமுறையுடன் செயலாற்றியதை, தக்க சான்றுகளுடன் தாம் விளக்கியிருப்பதாகவும் அவர்களை தெரிவித்தனர்.
அத்துடன் தமிழகத்திலிருந்து இலங்கையிலுள்ள தேயிலை தோட்டங்களில் பணிபுரிவதற்காக அழைத்துச் செல்லப்பட்டு அன்று முதல் இன்று வரை போராட்டமான வாழ்க்கையை சந்தித்து கொண்டிருக்கும் மலையகத் தமிழர்களின் வரலாறும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதாக அந்த அமைப்பை சேர்ந்த மற்றொருவர் கூறினார்.
மலையகத் தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை காட்சிப்படுத்துவதற்காக பிரிட்டனிலுள்ள இளம் தலைமுறையினருடன் சேர்ந்து பல மாதங்களாக வேலை செய்து உருவாக்கிய கருத்துருவாக்கம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இலங்கை தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதற்கான முதல்படியாக இதைப் பார்க்கிறோம்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
இலங்கை உள்நாட்டுப் போரின்போது, தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளை விளக்கும் வகையிலான காட்சி பொருட்கள் இந்த கண்காட்சியில் தத்ரூபமாக வைக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக, போரின்போது ராணுவத்தின் தாக்குதலுக்கு இரையானவர்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மாதிரி அமைக்கப்பட்டிருந்தது. அதில், போடப்பட்டிருந்த ரத்தம் படிந்த ஆடைகளின் மாதிரிகள் பலரது நினைவுகளைத் தூண்டின.
போரின் இறுதிக்கட்டத்தின்போது, ராணுவத்தின் தாக்குதலிலிருந்து உயிர் பிழைப்பது மட்டுமின்றி உயிர்வாழத் தேவையான உணவை பெறுவதும் மிகவும் கடினமாக இருந்த சமயத்தில் எங்களுக்கு உப்பு, சப்பில்லாத கஞ்சி மட்டுமே கிடைத்தது. எனவே, போரின் உக்கிர நிலையை உணர்த்தும் வகையில், அதே சுவை கொண்ட கஞ்சியை கண்காட்சிக்கு வந்தவர்களுக்கு அளித்தோம். அது பலருக்கு கண்ணீரை வரவழைத்துவிட்டது என்று தெரிவித்தார் வேறொரு உறுப்பினர் .
இந்த கண்காட்சியில், உள்நாட்டுப் போர் குறித்த முக்கிய ஆவணங்கள், அறிக்கைகள், நூல்கள், விடுதலைப் புலிகளின் திருமணங்களில் கட்டப்பட்ட புலிப்பல் தாங்கிய தாலி ஆகியவையும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின், 1983இல் இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கியபோது, பிரிட்டனுக்கு புகலிடம் தேடி வந்த இலங்கை தமிழர்களுடனான தனது நினைவுகளை பகிர்ந்ததுடன், அழிவுக்குள்ளான தமிழர்களின் அடையாளத்தை இந்த கண்காட்சியின் மூலம் உயிர்ப்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.
பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் அடுத்த சந்ததியினர் தங்களது பெற்றோர் கடந்து வந்த கொடுமைகளை முறையாக, முழுமையாக அறியும் வாய்ப்பாக இந்த கண்காட்சி அமைந்ததாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
லண்டனில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியை, பிரிட்டனின் தேசிய அருங்காட்சியகத்திலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் நிரந்தர கண்காட்சியாக வைப்பதே தங்களது இலக்கு என்று கூறும் தமிழ் தகவல் நடுவத்தினர், அடுத்ததாக கனடா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இதே கண்காட்சியை நடத்துவதற்கு கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
வீதியில் கூட நாம் போராட முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டோம். முள்ளிவாய்க்காலில் எமது சொந்தங்களை கொடுத்து பத்தாண்டுகளாகிவிட்டது. ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத்தான் கூறுமாறு கோருகின்றோம் என வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் கிளிநொச்சி இணைப்பாளர் கனகரஞ்சனி தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இலக்கு வார இதழுக்கு வழங்கிய கருத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
எமது உரிமைகளை வழங்குமாறு கோரி நின்ற எம்மீது தொடுக்கப்பட்ட போர் எங்களின் உறவுகளையும், உடமைகளையும், இல்லாதொழித்தது.
இதனை விட போரின் ஈற்றில் எமது உறவுகளை நாம் எமது கைகளாலேயே ஒப்படைத்தோம். சரணடைவதை நேரில் கண்டோம். அனைத்துக்கும் சாட்சிகள் உள்ளன. ஆனால் இன்று வரையில் அந்த உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை எம்மால் அறிய முடியாதுள்ளது.
நாம் தேடாத இடங்கள் இல்லை. பார்க்காத நபர்கள் இல்லை. ஆனால் எம்மை அவ்வப்போது சமாதானப்படுத்தும் கதைகள் கூறப்பட்டதோடு ஆணைக்குழுக்களும் நிறுவப்பட்டு கால இழுத்தடிப்புத்தான் செய்யப்பட்டது. தற்போது வரையில் எமது உறவுகளை காணாது கண்ணீருடன் காத்திருக்கின்றோம்.
எமது வாக்குகளைப் பெற்று எமக்கு தீர்வளிப்பதாக கூறிய தலைமைகளும் ஜெனீவாவிற்குச் சென்று எமக்கான நீதியை பெற்றுத்தருவார்கள் என்று நாம் எதிர்பார்த்திருக்க எமது அனுமதியைப் பெறாது அரசாங்கத்திற்கு சாதகமாக தலை அசைத்துவிட்டு வந்துவிட்டார்கள்.
தலைமைகளை நம்பி ஏமாந்து விட்டோம். எமக்கான கோரிக்கைகளை நிறைவு செய்வதற்கு நாமே போராட்டங்களை தொடராக முன்னெடுத்தோம்.
ஆனால் நாட்டின் நிலைமை அதனையும் முடக்கும் சிந்தனையாளர்களுக்கு வெற்றியை தேடிக்கொடுப்பதாகவே இருக்கின்றது. வீதியில் கூட நாம் போராட முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டோம். முள்ளிவாய்க்காலில் எமது சொந்தங்களை கொடுத்து பத்தாண்டுகளாகிவிட்டது. ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத்தான் கூறுமாறு கோருகின்றோம்.
இதனை சர்வதேசம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எமது நியாயமான கோரிக்கைக்கு தலைசாய்க்க வேண்டும். சர்வதேசம் இனியாவது எமக்கான நியாயத்தினை நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அமெரிக்கா தம்மீது எவ்வகையான போரை தொடுத்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜரிஃப் தெரிவித்துள்ளார்.
பக்தாத்தில் வெளியுறவுத் துறை அமைச்சருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வளைகுடா நாடுகளுடன் ஒத்துழைத்துப் போகவே ஈரான் விரும்புகிறது. ஆக்கிரமிப்பு போர்களுக்கு எதிராக அந்நாடுகளுடன் ஈரான் கையெழுத்திட்டுள்ளது.
இராணுவ போரோ, பொருளாதாரப் போரோ எதுவாக இருந்தாலும் அதை ஈரான் எதிர்கொள்ளும். வளைகுடாப் போரில் எண்ணெய்க் கிணறுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது. அதன்பின்னரே இரு நாடுகளுக்குமிடையில் மோதல் நிலை நீடித்து வருகிறது.
ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தாலும் ஈராக்கிற்கு ஆதரவாகவே அமெரிக்கா செயற்படுகின்றது.
கன்னியா வெந்நீருற்று ஈழத்தில், சைவத் தமிழரின் பாரம்பரிய சொத்து. அந்த புனிதப் பிரதேசத்தைப் பாதுகாப்பது ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் தமிழ் மக்களின் கடமையும் உரிமையும் ஆகும் என சைவப் பேரவையைச் சேர்ந்த பிருந்தாபன் பொன்ராசா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மூன்று தசாப்த காலம் முப்படையுடன் போராடிய தமிழர் இனம் இன்று கையறு நிலையில் நிற்பதைப் பயன்படுத்தி பௌத்த – சிங்கள தேசம் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றது.
வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக இடங்களை தொல்லியல் சின்னங்கள் என்ற பெயரில் ஆக்கிரமிப்பதும் பின்னர் அதை பௌத்த பிரதேசம் ஆக்குவதும் தொடர் கதையாகி வருகின்றது.
தமிழரின் தொன்மை வழிபாட்டிடம் கதிர்காமம் ஏற்கனவே பறிபோய்விட்டது. திருக்கோணேஸ்வரத்தைச் சுற்றிலும் படை முகாம். அதுவும் விரைவில் சிங்களப் பிரதேசம் ஆக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, வெடுக்குநாறிமலையை கையகப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கன்னியாய் பிரதேசமும் பௌத்த சிங்களப் பூமி ஆக மாற்றப்பட்டு வருகின்றது. அங்கு ஏற்கனவே பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் கன்னியாய் வெந்நீருற்றுப் பிரதேசம் பௌத்த – சிங்கள மயப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்குள்ள பிள்ளையார் ஆலயத்தை அப்புறப்படுத்திவிட்டு பௌத்த விகாரை அமைப்பதற்கு பௌத்த பிக்குகள் துடியாய்த் துடிக்கின்றனர். இந்த ஆக்கிரமிப்பைத் தட்டிக் கேட்பதற்கு அப்பிரதேசத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
குறித்த விடயத்தில் திருகோணமலை தென்கயிலை ஆதீனம் அதிக அக்கறை எடுத்துச் செயற்பட்டு வருகின்றது. கன்னியாய் பிரதேசம் பறிபோய்விடக்கூடாது என்பதில் தென் கயிலை ஆதீனமும் அங்குள்ள சைவத் தமிழர்களும் அதிக கவனத்துடன் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
தென்கயிலை ஆதீன முதல்வர் அகத்தியர் அடிகளாரின் வழிகாட்டலில், அவரின் தலைமையில் சென்ற அணியொன்று அமைச்சர் மனோ கணேசனுடன் சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மற்றும் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இவ்விடயத்தை மனோ கணேசன் கையாள்வது குறித்து திருகோணமலையைச் சேர்ந்த மக்களும் ஏனைய இடங்களைச் சேர்ந்த சைவத் தமிழ் மக்களும் மனோ கணேசனுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தற்போது ஆக்கிரமிப்பிற்கு உள்ளான காணியின் சொந்தக்காரியான, திருகோணமலை மடத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய தர்மகத்தா கோகுலராணி என்பவர், அதற்கு எதிராக நீதிமன்றை நாடவுள்ளார் என அறிவித்துள்ளார்.
தமக்கு சட்டத்தரணிகளின் உதவி தேவை என அவர் அறிவித்திருந்த நிலையில், அவர் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி அமரர் கந்தையா நீலகண்டனின் மகன் சட்டத்தரணி பிரணவன் ஆஜராக முன்வந்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.