மோடியின் வெற்றி உலகத்துக்கே கெட்ட செய்தி: ‘தி கார்டியன்’ விமர்சனம்

நரேந்திர மோடியின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே கெட்ட செய்தி எனவும் இந்தியாவின் ஆன்மா இருண்ட அரசியலில் தொலையப்போகிறது எனவும் ‘தி கார்டியன்’ பத்திரிகை விமர்சித்துள்ளது.

17வது மக்களைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மே 30 தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். இந்நிலையில் இது பற்றி பேசும் ‘தி கார்டியன்’ பத்திரிகையின் தலையங்கத்தில் மோடியின் வெற்றி உலகத்துக்கே கெட்ட செய்தி எனக் கூறியுள்ளது.

“வரலாற்றில் மிகப்பெரிய தேர்தலில் ஒரே நபராக வெற்றி பெற்றிருப்பவர்: நரேந்திர மோடி. 1971க்குப் பின் அடுத்தடுத்த தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த முதல் பிரதமராக உருவெடுத்துள்ளார் திரு மோடி. 2014ல் அவரது பாரதீய ஜனதா கட்சி வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற கீழவையில் (மக்களவை) அறுதிப்பெரும்பான்மை பெற்றது. முந்தைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பல ஊழல் புகார்களால் பறிபோனது. அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சியில் பொருளாதாரத்தை நாசம் செய்திருந்தாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை விரிவாக்கியிருக்கிறார் திரு மோடி. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே கெட்ட செய்தி.” என ‘தி கார்டியன்’ தலையங்கம் தொடங்குகிறது.

“பாஜகவின் இந்து தேசியத்தை நோக்கிய அரசியல் இயக்கம் இந்தியாவை மோசமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. சமூகத்தில் இந்து சமூக மேல் சாதிகளின் ஆதிக்கத்தை ஏற்படுத்தும் பிரிவினைவாதம்,கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான பொருளாதார வளர்ச்சி, பண்பாட்டு அடிப்படைவாதம், தீவிர வெறுப்பு மற்றும் அரசு அதிகாரத்தின் பிடியை இறுக்குவது ஆகியவற்றுக்கு துணை நிற்கிறது. திரு மோடிக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி இந்தியாவின் ஆன்மாவை இருண்ட அரசியலுக்குள் தொலையச் செய்யும். 195 மில்லியன் இந்திய முஸ்லிம்களை இரண்டாம தர குடிமக்களாக பார்க்கும்.” எனவும் விமர்சித்துள்ளது.

மேலும், “பிரசாரத்தின்போது திரு மோடியின் வலதுசாரி தரப்பினர் முஸ்லிம்களை கரையான்கள் எனக் கூறினர். அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். முஸ்லிம்கள், பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவை இழப்பதற்கு அஞ்சும் அரசியல் தரப்பிடம் சிக்கித் தவிக்கும் அரசியல் அகதிகளாக உள்ளனர். தேர்தலுக்கு முன் 24 முஸ்லிம் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தனர். இது மொத்த எண்ணிக்கையில் வெறும் 4% மட்டுமே. 1952லிருந்து மிகக் குறைந்த எண்ணிக்கை இதுவே. இது இன்னும் சுருங்கும் வாய்ப்பு உள்ளது.” என்கிறது.