Home Blog Page 2782

செவ்வாயில் களிமண் கனிமங்கள்

செவ்வாய்க் கிரகத்தை நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வு செய்து வருகின்றது.

கடந்த மே 12ஆம் திகதி மவுண்ட் ஷார்ப் பகுதியில் அபர்லேடி, கில்மேரி என பெயரிடப்பட்டுள்ள இரு இடங்களில் துளையிட்டு அதனை படமாக எடுத்து அனுப்பியுள்ளது. அந்த இடங்களில் களிமண் கனிமங்கள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது.

நீர் இருக்கும் இடங்களிலேயே அதிகளவு களிமண் உருவாகும். அந்த வகையில் பலநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ ஏற்ற சூழல் இருந்திருக்கலாம் என்பதை கண்டறிய கியூரியாசிட்டி ஆய்வுகளை  மேற்கொண்டு வருகின்றது.

 

சிறிலங்காவில் தொடரும் வன்முறைகள் காவல்துறை தகவல் பரிமாற்றத்தில் இலத்திரனியல் தாக்குதல்

சிறிலங்கா காவல்துறை காவல் நிலையங்களுக்கிடையில் இலத்திரனியல் தகவல் பரிமாற்றங்களுக்குப் பயன்படும் மெய்மிகர் தகவல் மையத்தின் மீது இலத்திரனியல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர  தெரிவித்தார்.

சிறீலங்கா அரசுக்கும் முஸ்லீம் சமூகத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் வன்முறைகளின் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரளவில் மட்டுமே இலங்கையில் ஜனநாயகம் உள்ளது -வே. இராதாகிருஷ்ணன்

பேரளவில் மட்டுமே இலங்கையில் ஜனநாயகம் உள்ளது -வே. இராதாகிருஷ்ணன்

இலங்கையில் ஜனநாயகம் பேரளவிலேயே இருக்கின்றது. இந்தியாவில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாகவோ நிதி அமைச்சராகவோ வர முடியும். ஆனால் இலங்கையில் அது ஒரு கனவாகவே இருக்கும் எனவே தான் ஜனநாயகம் பேரளவிலேயே இருக்கின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் அபிவிருத்தி குழு கூட்டம் தலவாக்கலை விருந்தகத்தில் 01.06.2019 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் ஒரு கருத்தையும், இலங்கையில் ஒரு கருத்தையும் சொல்லக் கூடியவர். அதனை கடந்த கால ஜனாதிபதியின் செயற்பாடுகள் எங்களுக்கு உணர்த்திருக்கின்றது. எனவே ஜனாதிபதி தேர்தல் டிசம்பர் 7ம் திகதி நடைபெறுமா என்பது கேள்விக்குரியது.

மலையக மக்கள் முன்னணி தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் நிலவி வந்தாலும் எந்தவிதமான உட்பூசல்களும், பிரச்சினைகளும் இல்லை. இன்று நடைபெற்ற கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டார்கள். கலந்து கொள்ளாத அரவிந்தகுமார் தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ளார். செயலாளர் நாயகம் சுகவீனமுற்ற நிலையில் இருக்கின்றார். ஏனைய முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.

அனைத்து கட்சிகளிலும் பிரச்சினைகள் வருவது சகஜம். அதனை அவ்வப்போது கட்சிக்குள் பேசி தீர்த்துக் கொள்ள முடியும் என்பது எனது கருத்தாகும்.

ஆளுநர்களை பதவியிலிருந்து நீக்குவது ஜனாதிபதியின் பொறுப்பு. ஏனெனில் ஆளுநரை ஜனாதிபதியே நியமிக்கின்றார். எனவே எல்லா பிரச்சினைகளுக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை கையில் எடுப்பது என்பது தேவையற்ற பிரச்சினையை உருவாக்கும் என நான் நினைக்கின்றேன். எனவே பேச்சுவார்த்தை மூலம் இதனை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்தாகும் என்றார்.

பதவியில் இருக்கும் வரை வெளிநாட்டுப் படைகளை அனுமதிக்கப்போவதில்லை- மைத்திரி

தான் பதவியில் இருக்கும் வரைக்கும் எந்தவொரு வௌிநாட்டு படையினரையும் நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இன்று பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழக சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் ஆக்கப்பட்டமையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

தமிழக சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போய் 100 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அவர் கதி என்ன என கேட்டு சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஸ்டெர்லைட் படுகொலை தொடர்பான ஆவணப் படத்தை வெளியிட்ட முகிலன் பின்னர் வீடு திரும்பவில்லை.

காணாமல் போன முகிலன்

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஸ்டெர்லைட் படுகொலை தொடர்பான ஆவணப் படத்தை வெளியிட்ட முகிலன் பின்னர் வீடு திரும்பவில்லை. இன்று திரும்புவார் நாளை திரும்பவார் என எதிர்பார்த்த குடும்பத்தினர் அவரது நட்பு வட்டாரத்தின் உதவியுடன் போலீஸில் புகார் அளித்தனர்

சிபிசிஐடி வசம் வழக்கு

ஆனால் முகிலன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறியது போலீஸ். இந்நிலையில் முகிலன் குடும்பத்தார் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் சென்றது.

ஏதோ செய்துவிட்டார்கள்

ஆனாலும் முகிலன் குறித்த எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் முகிலனால் எதிர்க்கப்பட்டவர்கள் யாரோ அவரை ஏதோ செய்து விட்டார்கள் என்றும் முகிலன் குடும்பப் பிரச்சனைக்காரணம் தலைமறைவாக உள்ளார் என்றும் செய்திகள் றெக்கை கட்டி பறந்தன.

முகிலன் மாயமாகி 100 நாட்கள் கடந்து விட்டது. இதுவரை அவர் எங்கேயிருக்கார் என்ற தகவலோ அல்லது அவர் என்ன ஆனார் என்ற தகவலோ கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் Where is Mugilan? என்ற ஹேஷ் டேக் சமூக வலைதளங்களில் ட்ரென்ட்டானது.

கண்டன ஆர்ப்பாட்டம் இதைத்தொடர்ந்து காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

பலர் பங்கேற்பு

இந்நிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லக்கண்ணு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் நெடுமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, நாம் தமிழர் கட்சியின் தென்னரசு, ஜி ராமகிருஷ்ணன், இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உங்களால் தீர்வு பெற இயலாது என்றால் புதிய தலைமுறைக்கு வழிவிடுங்கள் – தமிழரசு கட்சியின் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசின் பங்காளியாகியிருக்கும் இலங்கை தமிழரசுக் கடசியின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் இன்று போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்துக்கு வெளியே இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

தமிழரசுக்கட்சியின் முக்கிய மாநாடொன்றிற்காக அனைவரும் வருகை தந்திருந்த நிலையில் இப்போராட்டம் நடந்திருந்தது.

போராட்டத்தில் ஈடுபடடவர்கள் போர் முடிவடைந்து பல ஆண்டுகள்; கடந்துள்ள போதிலும் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினர்.மேலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை என குற்றம் சாட்டினர்.இலங்கை அரசின் சுக போக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடி ரூபாய் பணத்துக்கு விலை போய்விட்டனர்.இவர்கள் மக்கள் நலனில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை.எனவே இவர்கள் பதவிகளை துறக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

“காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கத்துடன் கதைக்க ஏன் தயக்குகின்றீர்கள்?”,”உங்களால் தீர்வு பெற இயலாது என்றால் புதிய தலைமுறைக்கு வழிவிடுங்கள்”,”ஏன் போர்க்குற்றவாளிகளை பாதுகாத்து கால அவகாசம் கொடுத்தீர்கள்” போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வசாவிளானில் குண்டு வெடிப்பு சிப்பாய் பலி இருவர் காயம்

யாழ்ப்பாணம், பலாலி பகுதியில் உள்ள வசாவிளானில் இன்று (01) மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா இராணுவத்தின் பிரதிப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் றொசான் செனிவரத்தினா தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதாகவும் அவர் மெலும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் தமிழ் அமைச்சரை சந்தித்த தென்னாசிய காவல்காரன்

புது டில்லியில் வைத்து சிறிலங்காவின் தமிழ் அமைச்சரான மனோ கணேசனை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

மோடியின் தேர்தல் சுலோகமாக அமைந்தது ”நான் இந்தியாவின் காவல்காரன்” என்பதேயாகும். இதை மனதில் வைத்துக் கொண்டு மனோ கணேசன் மோடியிடம் ”நீங்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல, முழு தென்னாசியாவிற்கும் காவல்காரனாக இருக்க வேண்டும்” என செய்தியாளர்களிடம் கூறியதாக  மனோ கணேசன் தெரிவித்தார்.

நேற்று இரவு (31) மனோ கணேசனை சந்தித்து கைலாகு கொடுத்து பேசும் போது மோடி, இதை ஞாபகப்படுத்திப் பேசியிருந்தார். சிறிலங்கா உட்பட தென்னாசிய அரசியல் தீவிரவாத சூழலில் இது முக்கியத்துவம் பெறுகின்றது எனவும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் தான் நம்புவதாகவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே இந்தியப் பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு, மோடியை சந்தித்து கலந்துரையாடி விட்டு சிறிலங்கா ஜனாதிபதி நேற்று இரவு நாடு திரும்பினார்.

சிறிலங்கா விமான சேவைக்கு சொந்தமான U L 196   விமானத்தில் நாடு திரும்பியிருந்தார்.

தமிழக சிறைத்துறை அதிகாரி, மண்டபம் அகதி முகாமிற்கு மாற்றம்

தமிழகத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர்  31.05 வழங்கியுள்ளார்.

இதற்கமைவாக தேர்தல் பிரதி காவல்துறை அதிகாரி இருந்த அசுதோஷ் சுக்லா, மண்டபம் அகதிகள் முகாம் பிரதி காவல்துறை    சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறைத்துறை தலைவராக இருந்த அசுதோஷ் சுக்லா, தேர்தல் பிரதி காவல்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இப்போது தேர்தல் முடிவடைந்ததால், இவர் மீண்டும் சிறைத்துறைக்கு செல்லாது மண்டபம் அகதி முகாமிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

சிறிலங்கா அரச நிறுவன பெண் பணியாளர்கள் சேலை அணிய வேண்டும்

அரச நிர்வாகத்தில் பணிபுரியும் பெண்களின் ஆடை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு ஓர் முடிவை எட்டியுள்ளது. இதற்கமைவாக அரச நிர்வாக பெண் பணியாளர்கள் அனைவரும் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒஸரி) அணிந்தே பணிக்கு சமுகமளிக்க வேண்டும்.

கடமை நேரத்தில் அலுவலக வளாகத்தினுள் பெண்கள் சேலையுடனேயே சமுகமளிக்க வேண்டும். இதேவேளை ஆண் பணியாளர்கள் தமது கடமை நேரத்தில் காற்சட்டை மேற்சட்டை அல்லது தேசிய உடை அணிந்திருத்தல் வேண்டும்.

இவ்வாறு பொது நிர்வாக அமைச்சு ஓர் சுற்று நிருபம் வெளியிட்டுள்ளது.